VSK TN
ஹிந்துத்துவம் அதாவது ஹிந்துத் தன்மை
டாக்டர் மன்மோகன் வைத்ய
தங்கள் எண்ணத்தை பிறர் மீது திணிக்கும் ஆதிக்கப் போக்கு மேற்குலகின் இஸங்களுக்கு உண்டு. பாரதத்தில் அது போல ’இஸம்’ எதற்கும் இடம் இல்லை. ஹிந்துத் தன்மை காட்டும் ஆன்மீக கண்ணோட்டம் சார்ந்த முழுமையான வாழ்க்கை வாழும் மக்கள் கடைபிடிப்பது ஹிந்துத்துவம். அத்தகைய ஹிந்துக்களின் தனிப்பட்ட, குடும்ப, சமுதாய, தொழில் சார்ந்த வாழ்க்கையின் பெயர் ஹிந்துத்துவம்.
யுக யுகமாக பாரதம் ஆன்மிக அடிப்படையிலான பார்வை கொண்டது. எனவே பாரதத்தின் கண்ணோட்டம் முழுமையானது. பல்வேறு வடிவங்கள், பெயர்கள், வழிமுறைகள் வழியே சத்தியத்தை சென்றடைய முடியும் என்று பாரதம் நம்புகிறது. திசைக்கொன்றாக இருந்தாலும் இந்தப் பாதைகள் எல்லாம் சமமானவை. வேற்றுமையில் ஒற்றுமை என்பது பாரதத்தின் அலாதி பார்வை. விதவிதமான வேற்றுமைகளின் நடுவே ஒருமைப்பாட்டை கண்டுணர பாரதத்தால் முடியும். வேற்றுமைகளை பிரிவினையாக பாரதம் கருதுவதில்லை. இத்தகைய ஆன்மீகம் நமக்கு சொல்லித் தருவது என்ன? ஒவ்வொரு ஆன்மாவும் உள்ளார்ந்த ரீதியில் தெய்வீக தன்மை கொண்டது. உயிருள்ள உயிரற்ற எல்லாவற்றிலும் அதே தெய்வீகம் நீக்கமற நிறைந்துள்ளது. எனவே நாம் அனைவருமே ஒருவரோடு ஒருவர் இணைப்பு உள்ளவர்கள். இணைப்பை கண்டுணர்ந்து இணைப்பின் வீச்சை வளர்த்தெடுத்து இணைப்பில் உள்ள அனைவரின் மேம்பாட்டுக்காக பாடுபடுவதே தர்மம் எனப்படும். தர்மம் என்ற சொல் ஒரு சமயத்தை குறிப்பது அல்ல. அது அனைத்தையும் தழுவியது. அனைவரையும் இணைப்பது, அனைவரையும் மேம்படுத்துவது.
வாழ்க்கை குறித்த இந்த கருத்தே ஹிந்துத் தன்மை. பாரதத்தில் வசிக்கும் அனைவரும் சாதி, சமயம், மாநிலம், மொழி வேறுபாடில்லாமல் இந்த ஹிந்து கருத்தை ஏற்கிறார்கள். எனவே பாரதிய மக்கள் அனைவருக்கும் ஹிந்துவாக இருப்பது அல்லது ஹிந்துத்துவம் என்பது அடையாளமாகியுள்ளது. மக்கள் அனைவரையும் அது இணைக்கிறது. எனவே அனைத்து பாரத மக்களையும் சாதி, மாநிலம், சமயம், மொழி வேறுபாடில்லாமல் இணைத்து பாரத மக்கள் மத்தியில் நிலவும் ஒருமைப்பாட்டு உணர்வை மீண்டும் கிளர்ந்தெழச் செய்ய ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் இந்த ஹிந்துத்துவத்தை கருவி ஆக்கினார். ஹிந்துத்துவ இழை கொண்டு சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்க முயற்சி தொடங்கினார் அவர்.
ஆனால் சிலர் தங்கள் சுய லாபத்திற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி வைத்திருக்க விரும்பினார்கள். அவர்கள் ஹிந்துத்துவதையும் சங்கத்தையும் பிற்போக்குத்தனம். பிளவு படுத்துவோர். சிறுபான்மையினருக்கு விரோதம் என்றெல்லாம் பட்டம் கட்டி எதிர்க்கத் தொடங்கினார்கள். விவேகானந்தர், ஆரிய சமாஜத்தின் தயானந்த சரஸ்வதி போன்றோர் ஹிந்துத்துவத்தை ஆதரித்தார்கள். அதை நிலை நிறுத்துவதற்காக குரல் கொடுத்தார்கள். அவர்களுடைய ஆதாரபூர்வமான படைப்புகளை கூட இந்த நபர்கள் நிராகரித்தார்கள், ஓரங்கட்டினார்கள். அந்த மகான்கள் மீது. இதே குற்றச்சாட்டுகளை சுமத்தின இந்த சக்திகள்.
ஆனால் என்னதான் சங்கத்தை எதிர்த்தாலும் சங்கம் குறித்து கெட்ட எண்ணம் பரப்பினாலும் ஹிந்துத்துவ அடிப்படை கொண்ட சங்கப் பணி வளர்ந்தது, எங்கும் வியாபித்தது. அதனால் இதையடுத்து சங்கத்தை கெட்ட எண்ணத்துடன் விமர்சிப்பவர்கள், “ஹிந்துத்துவா பரவாயில்லை. ஆனால் மிருதுவான ஹிந்துத்துவா, கடுமையான ஹிந்துத்துவா என்ற பாகுபாடு உண்டு என்று பேசத் தொடங்கினார்கள். சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் சொல்லியது மிருதுவான ஹிந்துத்துவம்; ஆர்எஸ்எஸ் சொல்வது கடுமையான ஹிந்துத்துவம் என்பதால் கண்டனத்துக்குரியது என்றார்கள். ’நான் ஏன் ஹிந்துவாக இருக்கிறேன்?’, ’நான் ஏன் ஹிந்து அல்ல?’ போன்ற புத்தகங்களை எழுதியவர்கள் இந்த நபர்கள். என்னதான் இவர்கள் எதிர்த்தாலும் ஹிந்துத்துவத்திற்கு கிடைக்கும் ஆதரவு விண்ணளாவியதாகி விட்டது. காரணம் ஹிந்துத்துவம் தான் பாரதத்தின் ஆன்மா; பாரதம் தன் உணர்வை வெளிப்படுத்தும் சாதனம் அது. எனவேதான் நமது மகா காவியங்களுக்கு சவால் விட முயலும் எந்த புத்தகமும் நிலைத்து நிற்க முடிவதில்லை.
குழப்பம் உண்டாக்குவதற்காக “ஹிந்துத்துவா கெடுதல், ஆனால் ஹிந்துயிஸம் நல்லது” என்று ஆரம்பத்தில் பேசியவர்கள் இவர்கள். அண்மையில் ஒரு ஊடக நிறுவனம் “ஹிந்துயிஸம், ஹிந்துத்துவம் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?” என்று என்னைக் கேட்டது. இரண்டும் ஒன்றேதான் என்றேன் நான். ஒன்று ஆங்கிலத்தில் இருக்கிறது மற்றொன்று பாரதிய மொழியில் இருக்கிறது. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் ’Hindu View of Life’ என்று ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதினார். அதில் ஹிந்துயிசம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பாரதிய மொழியில் அவர் அந்த நூலை எழுதி இருந்தால் ஹிந்துத்துவம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார். வீர சாவர்க்கர் ஹிந்துத்துவா என்ற தனது நூலை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் ஹிந்துயிசம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார். அது இருக்கட்டும், ஹிந்துத்துவம் என்பதன் சரியான ஆங்கிலச் சொல் ஹிந்துநெஸ்; ஹிந்துயிசம் அல்ல என்பது என் கருத்து.
ஆர். எஸ். எஸ்ஸின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத் அவர்கள் புதுடில்லி விஞ்ஞான் பவன் மூன்று நாள் நிகழ்ச்சியில் ’ஹிந்து’, ’ஹிந்துத்துவம்’ இவற்றின் பொருள் என்ன என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ஆனால் பிரச்சார பீரங்கிகளாக கிளம்பியுள்ள இவர்கள் அதைப் பற்றி பேச்செடுக்க மாட்டார்கள். காரணம் அது அவர்களுடைய கெடுநோக்குள்ள திட்டத்துக்கு பொருந்தி வராது. பாரதம் குறித்து இருவேறு கருத்துக்களுக்கு இடையேதான் நிஜமான கருத்தியல் ரீதியான மோதல். பாரதத்தின் பழமையான ஆன்மீக ஆதாரத்தில் வேர் கொண்டுள்ளது ஒரு கருத்து. மற்றது அந்நியக் கருத்து.
ஊடகவியலாளராக இருந்து அரசியல்வாதியான ஒருவர் சமீபத்தில் “ஹிந்து இந்தியா வேண்டுமா? ஹிந்துத்துவ இந்தியா வேண்டுமா? என்பதுதான் இந்தத் தேர்தலில் எழுப்பப்படும் பிரச்சினை” என்று கூறினார். அவர் போன்ற நபர்கள் ஹிந்து இந்தியா என்று பேசுவதே கூட ஹிந்துத்துவத்திற்கு செல்வாக்கு அதிகரிப்பதால் தான். இதெல்லாம் அவர்கள் திடமாக நம்புகிற சங்கதிகள் அல்ல, வசதிக்காக எடுத்தாள்கிறார்கள், அவ்வளவுதான். ஹிந்துத்துவம் பாரதத்தை ஒன்றுபடுத்தி வருகிற வேளையில் இவர்களுடைய ஜாதி அரசியல் வட்டார அரசியல் வகுப்புவாத அரசியல் எல்லாம் நாளுக்கு நாள் தேய்பிறை ஆகி வருகிறது. இவர்களின் ஆதரவு தளம் வெகுவாக சுருங்கி வருகிறது. தங்கள் அற்ப அரசியலுக்காக சமுதாயத்தை பிளப்பது இவர்களுக்கு தேவையாகிறது. மொழி, மாநிலம், மதம் இவற்றின் பேரால் இல்லாவிட்டாலும் ஹிந்து, ஹிந்துத்துவம் என்று பிரித்துப் பேசப் பார்க்கிறார்கள். ஆனால் இன்று சராசரி பாரதியன் இவர்கள் விரித்த வலையில் விழும் அளவிற்கு முட்டாள் அல்ல. இவர்களின் அதிகார தோரணைக்கு சவால் முளைத்துவிட்டது.
’ஹிந்து்வாதி’ அல்லது ’ஹிந்துயிஸ்ட்’ என்ற சொல்லை வைத்து குழப்பப் பார்க்கிறார்கள் சிலர். உலகில் முதலாளித்துவம், கம்யூனிசம் போன்ற இஸங்கள் எல்லாம் உண்டு ஆனால் பாரதத்தில் மேற்குலகில் உள்ளதுபோல இஸம் எதற்கும் இடம் கிடையாது. தங்களுடைய இஸத்தை வன்முறை மூலமாகவாவது பிறர் மீது திணிக்கும் மனப்பான்மை மேற்கில் நிலவுகிறது.
பாரதத்தின் ஹிந்துத் தன்மை காட்டும் முழுமையான ஆன்மீக கண்ணோட்டம் சார்ந்த வாழ்க்கை வாழும் மக்கள் கடைபிடிப்பது ஹிந்துத்துவம்.அத்தகைய ஹிந்துக்களின் தனிப்பட்ட குடும்ப, சமுதாய தொழில் சார்ந்த வாழ்க்கை ஹிந்துத்துவம்.
பிரித்துப் பேசி குழப்பும் சதியை நாம் அம்பலப்படுத்த வேண்டும். நாம் வாழ்வில் கடைப்பிடித்து அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பட்டால் சனாதனமான ஹிந்து தத்துவத்தையும் பண்புகளையும் நிலைநாட்ட வேண்டும். அப்போதுதான் எத்தனையோ நூற்றாண்டுகளாக உலகம் நன்கறிந்துள்ள பாரதத்தின் சுயம் மறுமலர்ச்சி அடைந்து வெளிச்சத்துக்கு வரும். பாரதத்தின் புருஷார்த்தம் (பராக்கிரமம்) சமுதாய, தேசிய வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பரிமளிக்கும். ’சுதேசி சமுதாயம்’ என்ற கட்டுரையில் ரவீந்திர நாத தாகூர் எழுதுகிறார்: “நிஜத்தில் நாம் யாரோ முதலில் அந்த நிலைக்கு நாம் மாற வேண்டும்”.
கட்டுரையாளர் ஆர். எஸ். எஸ்ஸின் அகில பாரத இணை பொது செயலர்