நம் பாரத மண்ணிற்கு நெருக்கமான அயோத்தியா ஸ்ரீ ராமர் கோவிலில் ஏற்றப்பட்ட கொடி, தர்மத்தின் வெற்றியாக நிற்கிறது. ஸ்ரீ ராமர் கோவில், எவ்வித வன்முறையும் இன்றி சட்ட ரீதியாக 2019-ல் நீதி அரசர் ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை வழங்கி, பல கோடி மக்களின் பிரார்த்தனையை நிஜமாக்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடியின் பங்கேற்புடன் பூமி பூஜையும், கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டது. ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இதனை மேற்பார்வையிட்டு வந்தனர்.
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் ஒவ்வொரு அம்சங்களும் சிறப்பு வாய்ந்தவை, நமது நாயகன் ஸ்ரீ பால ராமரின் திருமேனி முதல் கோயில் கட்டமைப்பு வரை அனைத்தும் கட்சிதமாக அமைக்கப்பட்டவை அதில் கூடுதல் சிறப்பாக கோவிலின் கட்டுமான பணிகள் பூர்த்தி அடைந்ததை குறிக்கும் விதமாக நவம்பர் 25ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோதி முக்கோண வடிவில் இருக்கும் காவி நிறக் கொடியை, கோயிலின் 191 அடி உயர்ந்த கோபுரத்தில் பக்தர்கள் முன்னால் ஏற்றினார்.
ஏன் இது அவ்வளவு முக்கியம்?!
அயோத்தியில் கொடிகள் ஒன்றும் புதிதல்ல…கம்பர் அயோத்தி நகரத்தின் கொடிகள் வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து பறப்பதாக பல இடங்களில் பாடியுள்ளார். அதில் ஒரு பிரபலமான பாடல் பால காண்டத்தில் இடம்பெற்றுள்ளது;
“வான்உற நிவந்தன; வரம்புஇல் செல்வத்த;
தான்உயர் புகழ்எனத் தயங்கு சோதிய;
ஊனம்இல் அறநெறி உற்ற, எண்இலாக்
கோன்நிகர் குடிகள்,தம் கொள்கை சான்றன.”
என அயோத்தி மாநகரின் மாளிகைகளும், அதன் மேல் பறக்கும் கொடிகளும் வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்து , அந்த நகரத்தின் எல்லையற்ற செல்வத்தையும், உயர்ந்த புகழையும் காட்டுவது போலப் பிரகாசித்தது. இதுபோல அங்குள்ள மக்கள் குறைவற்ற அறநெறியில் வாழ்ந்ததால், அவர்கள் ஒவ்வொருவரும் மன்னனுக்கு நிகரான கொள்கை பிடிப்புடன் உயர்ந்திருந்தார்கள் என்பதை அந்தக் கொடிகள் பறைசாற்றுவதாக கம்பர் குறிப்பிட்டுள்ளார் இதுபோல் பல குறிப்புகள் வால்மீகி ராமாயணத்திலும் காணப்படுகிறது.
த்வஜாரோஹணம் என்று அழைக்கப்படும் இந்த கொடியேற்றம் ஸ்ரீராமரும் சீதா தேவியும் திருமணம் செய்த கார்த்திகை மாத பஞ்சமியில் சுப முகூர்த்தத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. த்வஜாரோஹணம் என்பது தர்மத்தின் வெற்றியையும், தெய்வீக அமைப்பையும், இந்தப் புனித தலம் முழுமையான செயலுக்கு வருவதையும் குறிக்கிறது.
அயோத்தியா ஸ்ரீ ராமர் கோவில் பல நுணுக்கமான சிறப்புகளை கொண்டது போலவே அதன் கொடியும் பல அம்சங்களை கொண்டுள்ளது. 20 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்ட இந்தக் கொடியில் ஸ்ரீராமர் வம்சத்தை குறிக்கும் சூரியன் சின்னமும், மந்திரங்களுக்கெல்லாம் மூல மந்திரமாக இருக்கும் ஓம் என்ற நித்திய மந்திரமும், பண்டைய தாவர கலப்பினத்தின் அடையாளமாக நிற்கும் கோவிதார மரமும் இடம்பெற்றுள்ளது.
ரிஷி காஷ்யப் அவர்களால் உருவாக்கப்பட்ட கோவிதார மரம் தமிழில் நீலத்திருவத்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த புனித மரத்தை அவ்வளவு எளிதில் கண்டறியவில்லை, பல கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகே ராமாயண காலத்தில் உருவாக்கப்பட்ட கோவிதார மரம் இது என கண்டறியப்பட்டது. மகாபாரத போருக்கு பிறகு இந்தப் புனித மரமும் அயோத்திய கொடியும் கால சூழலால் மறைந்து விட்டதாகவும் அதனால் இந்த மரத்தை கண்டறிவதில் சிரமங்கள் இருந்ததாகவும் வல்லுனர்கள் பதிவு செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் முதலில் அந்த மரத்தை கச்னார் மரம் என்று அடையாளம் கண்டனர் பின்னர் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக தாவரவியலாளர்களின் முயற்சியாலும் ராமாயணம் மற்றும் ஹரிவம்ச புராணத்தை வைத்து கோவிதார மரத்தின் பண்புகளை அடையாளம் கண்டனர். இந்த மரத்தை ரிஷி காஷ்யப் மந்தாரை மற்றும் பாரிஜாத மரங்களின் கலப்பினமாக உருவாக்கினார். இது நம் பாரதத்தின் வேராக நிற்கும் அறிவியல் படைப்புகளின் முன்னோடியாக உள்ளது.
வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கொடியின் வலிமையை உறுதி செய்ய பாராசூட்டை உருவாக்க பயன்படுத்தும் உயர்தர துணி மற்றும் முதல் நிலை பட்டு நூலால் வடிவமைக்கப்பட்டுள்ள இது கடுமையான வானிலை மாற்றத்தை தாங்கும் திறனை கொண்டுள்ளது.
உச்சியில் பறக்கும் இந்தப் புனிதக் கொடி பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தில் உறுதியையும், நம்பிக்கையும் அளித்து மோக்ஷத்தை நினைவூட்டுகிறது. அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கொடியேற்ற விழா பாரதத்தின் கலாச்சார மற்றும் தார்மீக பயணத்தின் திருப்புமுனையாக அமைகிறது.
-Subha Lakshmi Pazhani


One thought on “Significance Of Ayodhya Temple Flag”
Comments are closed.