VSK TN
ஏப்ரல் 13, 1919 அன்று ஜாலியன்வாலா பாக் மைதானத்தில், புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற கொடூரமான படுகொலை தேசம் முழுவதும் கொந்தளிப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தியதோடு, பிரிட்டிஷ் அரசையே அசைத்தது. மக்கள்விரோத ரவுலட் சட்டம், இந்தியர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரிட்டிஷ் அரசால் நிறைவேற்றப்பட்டது. அமிர்தசரஸில், இதை எதிர்த்து போராட்டம் நடத்திய மிகப்பெரிய அரசியல் தலைவர்களான மிகப்பெரிய டாக்டர் சைபுதீன் கிச்லு மற்றும் டாக்டர் சத்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதை கண்டித்தும், ரவுலட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஏப்ரல் 13, 1919 அன்று ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.
இதில் பங்கேற்க 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜாலியன்வாலா பாக் மைதானத்தில் குவிந்திருந்தனர். பிரிட்டிஷ் அதிகாரி ஜெனரல் டயர், வளாகத்திற்கு இருந்த ஒரே நுழைவு வாயிலை அடைத்துக்கொண்டு, மைதானத்தில் குழுமி இருந்த அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த ஆணையிட்டான். அவனது வீரர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கொடூரப்படுகொலை தேசம் முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிசூட்டை கண்டித்து ரபீந்தரநாத் தாகூர் தனது சார் பட்டத்தை திருப்பி அளித்தார். ரத்தம் தோய்ந்த அந்த மைதானத்தின் மணலை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்த பகத்சிங், சுதந்திரத்திற்காக போராட உறுதிபூண்டார். இந்த படுக்கொலையை நேரில் கண்ட உத்தம் சிங் எனும் சிறுவன், 1940ம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்று, இந்த கொலைக்கு மூலகாரணமாக டயரை சுட்டுக்கொன்றார்.
விடுதலை வீரர்களுக்கு ஜாலியன்வாலா பாக் ஒரு புனித தலமானது . ஆயிரக்கணக்கானோர் விடுதலை போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். ஜாலியன்வாலா பாக் நூறாமாண்டு இது. இந்த தியாக செயலானது தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கில் உள்ளோரையும் சென்றடைய செய்வது நமது கடமையாகும். இதையொட்டி பல பொதுமக்கள் மத்தியில் பல நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும் என்று சமுதாயத்தில் உள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ் பையாஜி ஜோஷி
சர்கார்யவாஹ் – ஆர்.எஸ்.எஸ்