VSK TN
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
பாரதப் பண்பாடு, கலைகள், ஆகமங்கள் கற்பிக்க மீண்டும் பழநித் திருக்கோயில் கல்லூரியைத் துவக்க தமிழக அரசு முன்வர வேண்டும்..
சமீபத்தில் துக்ளக் வார இதழில் பழநித் திருக்கோயிலில் நடைபெற்று வந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் கோரிக்கை பிரசுரமாகியுள்ளது.
1980ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அந்தப் படிப்பில் வேதங்கள், சைவ, வைணவ ஆகமங்கள், ஆலய வழிபாடுகள், இந்தியக் கோவில் கட்டிடக்கலைகள், இந்தியச் சமயங்கள், வாழ்வியல் ஒழுக்கநெறி, இந்திய வரலாறு போன்றவை கற்பிக்கப்பட்டதாகவும், இந்தப் படிப்பு மனித வாழ்வின் அடிப்படைகளைச் செம்மைப்படுத்தியதோடு, இப்பாடங்கள் சார்ந்த வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுத்து வந்தது.
மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ். முதலிய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 30% பேர்கள், பாரதப் பண்பாடு எனும் விருப்பத் தேர்வு எழுதி வெற்றி பெற்று வருகின்றனர்.
இந்தியப் பண்பாட்டுச் சிறப்பை ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், பத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பல்கலைக்கழகங்கள் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் செய்து வருகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்பாட்டுக் கல்வியைக் கொடுத்து, அறநிலையத்துறை பணிகளுக்கு சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் கொடுக்கப்பட்டு வந்த சிறப்புச் சலுகை பறிக்கப்பட்டது, இதை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
நமது நாடு மதச்சார்பற்ற நாடு என்று கூறி நமது அரசு, நமது தலையில் மண்ணை வாரிப்போடுகிறது.
இஸ்லாத்தைப் படிக்க, பரப்ப நடத்தப்படும் மதரஸாக்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்படுகிறது, கிறிஸ்தவ சமயத்தைப் படிக்க, பரப்ப பாதிரிகளை உருவாக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு அங்கீகாரம் உண்டு. அவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மட்டுமல்லாது, மதக் கல்வியையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்கின்றன, நிதியும் அளிக்கின்றன.
ஆனால், இந்துக்களின் பண்பாடு, ஆலய வழிபாடு, ஆன்மீகக் கல்விக்கு எந்த உதவியும் செய்வதில்லை என்பதோடு, முட்டுக்கட்டைகளையும் போட்டே வந்துள்ளது. உதாரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கோயில் கலைகள் என்ற பட்டயப்படிப்பில் வேண்டுமென்றே வேற்று மதத்தினர் கட்டிடங்களைப் பற்றிய பாடத்திணிப்பைப் பல்கலைக்கழக மானியக்குழு ஏற்படுத்தியுள்ளது. இதனை ஏற்காவிட்டால் பல்கலைக்கழக அங்கீகாரம் பிரச்னையாகிவிடும் என்று இந்துக்களும் அஞ்சி சகித்துக் கொள்கிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
இந்து ஆலய நிதிகளில் இருந்து பல கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் ஆலயங்கள், ஆகமங்கள் போன்றவை பற்றிய படிப்புகளைக் கொண்டுவர முன்வரவேண்டும்.
மீண்டும் அருள்மிகு பழநி ஆண்டவர் திருக்கோயில் சார்பாக நடைபெற்று வந்த பண்பாட்டுக் கல்லூரியை மீண்டும் துவக்க வேண்டும் என்று தமிழக அரசை இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மேலும் ஆலயங்களில் உள்ள கல்வெட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் பட்டய, பட்டப் படிப்புகளைக் கல்லூரி படிப்பாகவும் வைக்க வேண்டும்.
நமது இலக்கியங்கள், பண்பாடுகள், ஆகமங்கள், சமய வழிபாடுகள், தத்துவங்கள் கோயில்கலைகள் ஆகியவற்றைப் பற்றிய அறிவோடு, நமது வரலாறு, தொன்மை முதலானவற்றை நமது சந்ததியினருக்குக் கொண்டு செல்ல இந்தப் படிப்பு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும். இத்தகைய கல்வியைப் படித்தோருக்கு அறநிலையத்துறை, சுற்றுலாத் துறை முதலியவற்றில் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.