VSK TN
சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளை சுமுகமான கருத்துப் பரிமாற்றம் வாயிலாகத் தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் வெளியிட்ட கருத்தை திரித்து வெளியிட்டு குழப்பம் விளைவிக்க முயற்சி நடந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்திய இணை செயலர் டாக்டர் மன்மோகன் வைத்யவும் அகில பாரத செய்தித் தொடர்பாளர் அருண்குமாரும் இதை சுட்டிக்காட்டி விஷயங்களைப் பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்கள்:
“எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி சமூகங்களுக்கு அரசியல் சாஸனம் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு அவர்களுக்குத் தொடர்ந்து கிடைத்துவர வேண்டும் – இது தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலைப்பாடு. ஹிந்து சமுதாயத்தில் ஜாதி சார்ந்த பாரபட்சம் நீடிக்கிற வரை இட ஒதுக்கீடு அவசியம். ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த நிலைப்பாடு பல முறை தெளிவாக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாஸனத்தால் அனுமதிக்கப்பட வில்லை, அது தவறும் கூட. இந்த இரு விஷயங்களும் வெவ்வேறானவை. இந்த இரு வெவ்வேறான விஷயங்களையும் இணைத்து தயவு செய்து குழப்பம் விளைவிக்க வேண்டாம்”. இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் பேசியதன் சரியான வடிவம் வருமாறு:
”இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் பற்றி யோசித்து பேசுவார்களேயானால்/ செயல்படுவார்களேயானால், அது போல, இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் பற்றி யோசித்து பேசுவார்களேயானால்/செயல்படுவார்களேயானால் எந்த ஒரு சட்டமோ, விதிமுறையோ இல்லாமல் இதற்கு ஒரே நிமிடத்தில் தீர்வு கிடைத்து விடும்”.