VSK TN
சமுதாயம் முழுவதிலும் தேசிய உணர்வு ஏற்படுத்தவேண்டும்; சமுதாயம் செயல் துடிப்புடன் விளங்கச் செய்ய வேண்டும்; அதற்காக சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற வேண்டும் — அதற்காகத்தான் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நிறுவினார். அப்படியிருக்க அவரது ஆளுமையை புரிந்து கொள்ளாமல் சங்கத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.
அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலின் போது நாடு நெடுக ஏதோ யுத்தம் நடப்பது போன்ற தோற்றம் தென்பட்டது. இப்போது புழுதி அடங்கிய நிலையில் எல்லாம் தெளிவாகி விட்டது. தேசிய உணர்வுள்ள கட்சிக்கு தேசம் வலுவான ஆதரவளித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளது. பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் மலிந்த சூழலில் பிரிவினைவாத அரசியல் செய்யும் தரப்பினர் ஆர்.எஸ்.எஸ் மீதும் காரணமில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார்கள்.
வீர சாவர்க்கர், சங்கத்தின் இரண்டாவது தலைவர் மாதவ சதாசிவ கோல்வல்கர் (குருஜி) ஆகியோர் சொன்னவற்றை இடப் பொருத்தமோ ஆதாரமோ இல்லாமல், மேற்கோள் காட்டினார்கள். அனாவசியமாக சங்கத்தின் பெயரை இழுத்தார்கள். ஆனால் யாருமே சங்க ஸ்தாபகர் ஹெட்கேவார் பற்றி பேச்செடுக்கவே இல்லை. சங்கத்தின் வேர் என்றால் அது டாக்டர் ஹெட்கேவார் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ஆளுமையை புரிந்து கொள்ளாமல் சங்கத்தை புரிந்து கொள்வது சாத்தியமில்லை. கடந்த ஜூன் 21 அன்று அவர் மறைந்து 89 ஆண்டுகள் ஆனதையொட்டி அவரை நினைவு கூர்வது குழப்பப் புழுதியை தணிக்கும். உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்ள இது அவசியம்.
டாக்டர் ஹெட்கேவார் தேசபக்தர், தலைசிறந்த இயக்கக் கட்டமைப்பு நிபுணர். பாரத தத்துவ சிந்தனை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றில்ஆழமாகத் தோய்ந்தவர். எனவே அன்றைய சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள், அதை அடையும் பாதை, எதிர்காலத்திற்கான திட்டம் இவற்றை அவர் தெளிவான விதத்தில் முன்வைத்தார். அவர் ஒரு தீர்க்கதரிசியேதான். சுருக்கமாக சொல்வது என்றால் சாதாரணமாக தென்பட்ட டாக்டர் ஹெட்கேவார் அசாதாரணமான அறிவாற்றல் நிறைந்தவராக விளங்கினார். அவரது சிறு வயது சம்பவங்கள் பல ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் மீது அவருள்ளத்தில் இருந்த சீற்றத்தை தெள்ளத் தெளிவாக காட்டுபவை. சுதந்திரப் போராட்டத்தில் அகிம்சையான சத்தியாக்கிரகம் தொடங்கி ஆயுதமேந்திய புரட்சி வரை எல்லாப் பாதைகளிலும் அவர் விறுவிறுப்பாக செயல்பட்டார். ஆனால் சுதந்திரம் அடைவதற்காக மக்களின் உள்ளங்களில் சமய உணர்வும் சமுதாய உணர்வும் விழிப்படைய வேண்டும், மாற்றம் ஏற்பட வேண்டும், அது மிக முக்கியம் என்பதை அவர் நன்றாக நன்றாக உணர்ந்திருந்தார். எனவே அவர் சுதந்திரம் அடைவதற்காக முழு சமுதாயத்தையும் ஒருங்கிணைக்கும் பணி தொடங்கினார். ”சிறை செல்வது மட்டும் தான் தேசபக்தி என்பது அல்ல; வெளியில் இருந்தபடி சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தேசபக்த செயல்தான்” என்று 1921 ல் சத்தியாகிரகத்தில் பங்கேற்கும் போது அவர் சொன்னார். அப்போது அவர் வயது 31தான். அவர் மனது முழுக்க அந்தக் காலகட்டத்தின் தேசிய சிந்தனையில் மூழ்கி இருந்தது.
பாரதமாதா ஆராதனை
இரண்டாண்டுக் காலம் பாரத நாடு நெடுக சுற்றிப் பார்த்தபின் 1893ல் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சென்றார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மேற்கு தேசங்களிலிருந்து பாரதம் திரும்பிய அவர் மூன்று முக்கிய விஷயங்களை நமது மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
முதலாவது: மேற்கத்திய நாடுகளிடமிருந்து நாம் ஒருங்கிணைக்கும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது: பண்பாளர்களை உருவாக்க ஏதாவது ஓர் உத்தியை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.
மூன்றாவது: பாரத மக்கள் அனைவரும் வருகின்ற ஒரு சில ஆண்டுகளுக்கு தாங்கள் வழிபடும் எல்லா கடவுளர்களையும் ஒருபுறம் வைத்துவிட்டு, ஒரே ஒரு கடவுளை வழிபட வேண்டும்: அதுதான் நமது பாரத மாதா.
சங்கப் பணியும் சங்க ஷாகாவும் இந்த மூன்றின் செயல் வடிவம்தான். ‘ஜாதி முறையும் அதை நிர்மூலமாக்குவதும்‘ என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்: “சமுதாய மட்டத்திலும் மதரீதியிலும் புரட்சி ஏற்பட்ட பிறகு தான் அரசியல் புரட்சி ஏற்படும். இதுதான் வரலாறு” என்று கூறுகிறார். மார்ட்டின் லூதர் கிங் தொடங்கிய சீர்திருத்த இயக்கம் ஐரோப்பாவின் மக்களுக்கு அரசியல் சுதந்திரம் கிடைப்பதற்கான முன்னுரை போல அமைந்தது. ஒழுக்கத்தை வலியுறுத்தும் இயக்கம் பரவிய பிறகு தான் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அரசியல் சுதந்திரத்திற்கான அடித்தளம் அமைந்தது. முஸ்லிம் சாம்ராஜ்யங்களின் கதையும் இதுதான். அராபியர்களின் கையில் அரசியல் அதிகாரம் கிடைப்பதற்கு முன் அவர்கள் முகமது நபி நடத்திய மத புரட்சிப் பாதையில் நடைபோட வேண்டியிருந்தது. வரலாறும் இந்த அம்சத்தை தான் வலியுறுத்துகிறது. சந்திரகுப்தரின் தலைமையிலான அரசியல் புரட்சிக்கு முன்னர் பகவான் புத்தரின் சமய சமுதாயப் புரட்சி நடைபெற்றிருந்தது. மகாராஷ்டிரத்திலும் பல ஆன்றோர்கள், சாதுக்கள் வாயிலாக சமய சமுதாய சீர்திருத்தம் நடைபெற்ற பிறகுதான் சிவாஜி மகாராஜா தலைமையில் அங்கு அரசியல் புரட்சி சாத்தியம் ஆயிற்று.