சுவாமி விவேகானந்தரும் மஹாகவி பாரதியாரும்

18
VSK TN
    
 
     
சுவாமி விவேகானந்தரும் மஹாகவி பாரதியாரும் 
‘உயர்ந்த உள்ளங்கள் எப்போதும் ஒரே மாதிரியாகவே சிந்திக்கும்’ (Great people always think alike) என்று ஒரு வழக்கு உண்டு.
இந்த வழக்குத் தொடர் யார் யாருக்கு பொருந்ததுமா, பொருந்தாதோ தெரியாது. ஆனால் இரண்டு உயர்ந்த உள்ளங்களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.
அந்த இரண்டு உயர்ந்த உள்ளங்களின் சொந்தக்காரர்கள் பாரதத்திற்கு இக்கட்டான சூழ்நிலையில் தனி சிறப்பு அந்தஸ்த்தைப் பெற்று தந்த ஸ்ரீ சுவாமி விவேகானந்தரும், பாட்டுக்கொரு புலவனான ஸ்ரீ மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் தான். 
சுவாமி விவேகானந்தர் பிறந்தது கல்கத்தாவில் – பாரதத்தின் கிழக்கு பகுதியில். மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் பிறந்தது எட்டயபுரத்தில் – தமிழ்நாடு மாநிலத்தில் – பாரதத்தின் தெற்கு பகுதியில்; ஆனால் பிறந்தது கிழக்கோ, தெற்கோ… மனத்திண்ணம், சிந்தனை ஒன்றாக இருந்தது இருவரிடமும்.
விவிதிஷானந்தர், சதானந்தர் எனப் பலப்பல பெயர்களில் பாரத நாட்டை வலம் வந்து கொண்டிருந்த ஸ்ரீ நரேந்திரநாத் கக்காவிற்கு ‘விவேகானந்தர்’ என்ற பொருத்தமான பெயரை அவரது 30 வது வயதில் அளித்து கௌரவித்தவர் கேத்ரி சமஸ்தான அரசர் (Royal of Khetri ). 
மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் … சிறு வயதிலேயே கவிதைகள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். இதனை பாராட்டும் வகையில் எட்டயபுரத்து சமஸ்தானத்தின் ராஜா ஸ்ரீ சுப்ரமண்யத்திற்கு ‘பாரதி’ என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தவர்.
சுவாமி விவேகானந்தர் பிறந்தது 1863 ல். மறைந்தது1902 ல். வாழ்ந்தது 39 ஆண்டுகள். 
மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் பிறந்தது 1882 ல் (ஸ்வாமிஜி பிறந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு). மறைந்தது 1921 ல் (ஸ்வாமிஜி மறைந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு). வாழ்ந்தது 39 ஆண்டுகள். 
ஸ்வாமிஜியும், பாரதியும் மறைந்தது 39 வயதில்.
ஸ்வாமிஜி சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உரையாற்றியது 1893 ல். அப்போது பாரதியாரின் வயது 11. ஸ்வாமிஜியும், பாரதியும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தது 20 ஆண்டுகளே (1882-1902). ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள போதுமான அவகாசம் இல்லை என்ற நிலை . இருப்பினும் இருவரது சிந்தனையிலும் அதிசயமான ஒற்றுமை இருந்துள்ளது.
ஸ்வாமிஜியின் சிஷ்யை சகோதரி நிவேதிததான் பாரதியாரின் குரு. பாரதியே குறிப்பிடுகிறார். எனது ‘குருமாமணி சகோதரி நிவேதிதை’ என்று.
ஸ்வாமிஜி வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஸ்ரீ விஸ்வநாத தத்தா அக்காலத்தில் புகழ்ப் பெற்ற வக்கீல்களில் ஒருவர். ஆனால் ஸ்வாமிஜியின் தந்தையின் மறைவுக்கு பின் ஸ்வாமி சந்தித்த பிரச்னைகள், சவால்கள் ஏராளம். வாழ்வில் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை.
பாரதி செல்வந்தரின் வீட்டில் பிறக்கவில்லை. எனினும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் தான். பாரதியாரின் தந்தை ஸ்ரீ சின்னசாமி அய்யர் எட்டயபுர ராஜாவின் அரண்மனையில் நல்லதொரு பணியில் இருந்தவர். சிறந்த தமிழறிஞர் என்பதால் ராஜாவின் நண்பராகவும் இருந்தார். ஒரு சிறு தொழிலதிபராகவும் இருந்துள்ளார். ஸ்வாமிஜியின் வாழ்க்கையை போலவே அவரது தந்தை காலமான பிறகு பாரதி சந்தித்த பிரச்னைகள், சவால்கள் ஏராளம்.
ஸ்வாமி எதற்கும், யாருக்கும் அஞ்சாத குணம் படைத்தவர். ‘வெட்டொன்று துண்டு இரண்டு’ என வெளிப்படையாகப் பேசுபவர். உள்ளொன்று வைத்து புறம் ஓன்று பேசத் தெரியாதவர். பாரதியும் இந்த விஷயங்களில் ஸ்வாமிஜியுடன் நூற்றுக்கு-நூறு ஒன்றானவர். 
ஸ்வாமிஜியும், பாரதியும் எதிர் நீச்சல் போட்டுத்தான் சாதனையாளர்களாக மாறினர். ஸ்வாமிஜி சிகாகோ மாநாடு மூலம் பாரதத்திற்கு தனி அந்தஸ்தை – முகவரியை தேடி தந்தவர். பாரதி தனது சொல்லாற்றல், கவிதைகள் மூலம் சுதந்திர வேள்வித் தீயிற்கு நெய் வார்த்து வளர்த்தவர். 
சிகாகோ மாநாட்டிற்கு பிறகு, தாயகம் திரும்பிய ஸ்வாமிஜி தனது தலையாய பணியாக பெற்றுக் கொண்டது ‘மனிதனை மனிதனாக்கும் செயல்’ (Man making mission ). அதாவது பாரத மக்கள் இந்தச் சவாலையும் சந்திக்கும் திறன் படைத்த உடல், அந்த உடலை நல்வழி எடுத்துச் செல்லும் மனம், அந்த மனத்தைக் கட்டுப்படுத்திச் செயலாற்ற வைக்கும் பகுத்தறிவு – இவை சீராக, சரியாக, ஒன்றிணைந்து வளர்த்துக் கொள்ளும் மனிதனாக உருவாக்குதல் என்ற பணி. 
இதே ரீதியில் தான் தனது சிந்தனையைச் செலித்து உள்ளார். ‘காலை எழுந்தவுடன் படிப்பு (மூளை), பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு (மனது), மாலை முழுதும் விளையாட்டு (உடல்) என தன்னை தயாரித்துக் கொள்ள வேண்டும் என – பெரியவர்களுக்குக் கூட அறிவுறுத்துகிறார். 
ஸ்வாமிஜியின் அறைக்கூவல் …”எழுந்து நில். போர் புரி. ஒரு ஆதி கூடப் பின் வாங்காதே. கோழையாக இருப்பதினால் இந்தப் பலனையும் அடைய முடியாது. இழப்பை கண்டு அஞ்சுபவன், இறுதியில் இழப்பையே பெறுகிறான். பலமே ஆஸ்திகம், பலமின்மையே நாஸ்திகம்’.
பாரதி விடுத்த அறைக்கூவல் …”ஏறு போன்ற நடை, சிறுமை கொண்டு பொங்கும் குணம், பாதகரை கண்டு பயங்கொள்ளாத தன்மை, பாதகரை கண்டு மோதி மிதித்து, முகத்தில் உமிழ்ந்துவிடும் தீரம்’ 
ஸ்வாமிஜி தனது இளம் வயது வாழ்க்கை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘நான் தொடக்கப் பள்ளியில் சேர்ந்த முதல் நாள் – இல்லை இல்லை என் இளம் வயது வாழ்வின் முதல் நாள் எனக்கு கற்றுக் கொடுக்கப் பட்ட முதல் பாடம் ‘ஒழுக்கமும், தன்னை கட்டுப் படுத்திக் கொள்ளும் குணமும்’. மேலும் பின்னாளில் தனது பல உரைகளில் சுவாமி வைத்த வேண்டுகோள் இதுதான் ..”சாலை ஓரத்தில் கவனிப்பார் இன்றிக் கிடக்கும் தரித்திர நாராயணர்களை நமது வழிபட வேண்டிய தெய்வங்களாகக் கொள்ள வேண்டும்’.
புதுச்சேரி மணக்குள விநாயகரிடம் பாரதி வேண்டியது….”கடமையாவன தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டல் …”. ஒழுக்கம், சுயக் கட்டுப்பாடு, பிறருக்காக வாழ்வது நமது கடமை என உணர்த்துகிறார் பாரதி. 
‘இறைவனை காண முடியுமா’ என்ற ஏக்கக் கேள்வி கேட்ட ஸ்வாமிஜிக்கு ….”இறைவனை காண வேண்டும் என்ற உண்மையான மனத்தோடு, அவனைக் கூவி அழைத்தால் அவன் கண்டிப்பாக வருவான்’ என்ற நம்பிக்கையை ஊட்டியவர் அவரது குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.
பாரதி கூறுகிறார் …” வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி, மண் போலே, சுவர் போலே வாழ்தல் வேண்டும். அப்போது தேசுடைய பரிதி உரு கிணற்றுக்குள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய்’ என வாழ்வின் ரகசியத்தை உணர்த்தினார் சித்தர் குள்ளச்சாமி. 
ஸ்வாமிஜி, பாரதி இருவருக்கும் ‘இறைவனை காண வேண்டும்’ என்ற வேட்கை இருந்துள்ளது. இருவருக்கும் இதில் வழிகாட்ட சிறந்த குருமார்கள் கிடைத்துள்ளனர். 
ஸ்வாமிஜியின் சிஷ்யை சகோதரி நிவேதிதை. பாரதி தனது குருமாமணியாக ஏற்றுக் கொண்டதும் இதே சகோதரி நிவேதிதை தான். 
பாரதம் ஸ்வதந்திரம் பெரும் முன்னரே தீர்க்கதரிசியாக பாரதி பாடினான் ….”ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே” 1897 ல் ஸ்வாமிஜி ஒரு கலந்துரையாடலில் குறிப்பிடுகிறார் …. இன்னும் 50 ஆண்டுகளில் பாரதம் சுதந்திரம் பெறும் என்று. இவர்கள் இருவரும் நினைத்த படியே பாரதம் சுதந்திரம் பெற்றது 1947 ல்.
ஸ்வாமிஜியும், பாரதியும் வாழ்ந்தார்கள், சிந்தித்தார்கள் பாரதத்தின் எதிர்காலம் பற்றி … எதிர்கால சந்ததியர்களைப் பற்றி. இருவரின் வாழ்வும் முடிந்தது அவர்களின் 39 வது வயதில். 
அமைதியான முறையில் இருவர் வாழ்வும் முடிந்து விட்டது. இருவரும் நம்முடன் ஒரு பெரிய, முக்கிய பொறுப்பினை விடுத்து சென்றுள்ளனர். ‘உலகின் குருவாய் பாரதம் ஆகிட’ உழைக்கும் பொறுப்பை அளித்து சென்றுள்ளனர். அது நிறைவேற்ற நாம் உழைப்போம். இதுவே நாம் செலுத்தும் ஸ்ரதாஞ்சலி ஆகும் 
வாழ்க பாரதம், வந்தே மாதரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Education in mother tongue, Gateway to Glory: Shri Atul Kothari

Thu Sep 15 , 2016
VSK TN      Tweet     “Bhartiya Bhasha Manch” organized a symposium on Indian languages in the Constitution club, New Delhi. Main speaker for this program was Shri Atul Bhai Kothari, National Secretary of “Shiksha Sanskriti Uthan Nyas”. He expressed his views on Indian languages and its expansion and pragmatism. He showed his pleasure […]