VSK TN
விசாரணையின்றி யாரையும் காவலில் வைக்க வகைசெய்யும் ரௌலட் சட்டம் மார்ச் 1919 ல் பிரிட்டீஷ் அரசால் கொண்டு வரப்பட்டது. பஞ்சாபில் சத்யபால் மற்றும் ஸைபுதின் கிச்லா என்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டதை மக்கள் எதிர்த்ததால் அமிர்தஸரஸில் பொதுக்கூட்டம் போடக் கூடாதென்ற ஆணை பிறப்பித்தார் மைக்கேல் ஓட்வையர் என்ற பிரிட்டிஷ் கவர்னர். அந்த ஆணை மக்களைச்சென்று சேர்வதற்கு முன்னரே, 13 ஏப்ரல் 1919 அன்று பஞ்சாப் அமிர்த சரஸில் பைசாகி புத்தாண்டு திருநாளைக் கொண்டாட ஜாலியன்வாலாபாக் பூங்காவில் திரண்டிருந்தனர் நிராயுதபாணிகளான பாமர மக்கள். அவர்களுள் ரௌலட் சட்ட எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள் என்று பிரிட்டிஷ் தளபதி டயரென்னும் கொடியவன், அந்த இடத்திலிருந்து யாரும் தப்பி விடாதபடி வெளியே செல்லும் பிரதான வழியை முன்னதாகவே அடைக்கச்செய்து, 150 பிரிட்டீஷ் இந்தியச் சிப்பாய்களை ஏவி கூட்டத்தை கலைந்து செல்லும்படி எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல், ஆயுதமில்லாத பாமரமக்களின் மேல் ஈவு இரக்கமின்றி துப்பாக்கி சூடு நடத்தி கொன்று குவித்தான். பதறியோடிய பாமர ஜனங்களை நம் சிப்பாய்களே, சிதறும் பனங்காய்களாய் இரக்கமின்றி சுட்டு வீழ்த்தினர். லெப்டினன்ட் கவர்னர் மைக்கேல் ஓட்வியர், “நன்று செய்தீர்” என்று குறிப்பு அனுப்பினார்.
பதைத்தது பாரதம், பூமாதேவியும் தான்.
அமிர்தசரஸ் (அமுதச்சுனை) என்ற பேர் கொண்ட இடத்தில் குருதி பீறிட்டு ஓடிய கொடுமை நிகழ்ந்தது.
பலியானோர் 379 பேர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும் உண்மையில் பலியானவர்கள் ஆண், பெண், சிறுவர் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என்பதும், காயம்பட்டு, கை, கால், உறுப்புகளை இழந்தவர் மேலும் 1500க்கு மேல் என்பதும் தனியார் விசாரணையில் தெரியவந்தது. பத்து நிமிடங்கள் முழுவதுமாக, 1650 சுற்றுக்கள் விடாமல் சுடப்பட்டன. விசாரணையின் போது, வெடிமருந்து தீர்ந்ததால் சுடுவதை நிறுத்தினேன் என்று கொக்கரித்தான் கயவன் திமிருடன்.
பிரிட்டிஷ் அரசின் பொதுமக்கள் சபை இந்த நிகழ்ச்சியை வன்மையாகக் கண்டித்தும், வின்ஸ்டன் சர்ச்சில் இது நாம் வெட்கப்படவேண்டிய அராஜகம் என்று கூறிய போதும் பிரிட்டிஷ் பிரபுக்கள் சபை கொடியவன் டயரின் செய்கையைப் பாராட்டியது. குற்ற உணர்வே இல்லாமல் டயர் 1927ல் பக்கவாதம் வந்து மூளை இரத்தநாளம் பிளந்து இறந்துபோனான்.
அராஜகம் செய்த பிரிட்டிஷ் அரசிற்குப் பாடம் புகட்டிப் பழிவாங்கச் சூளுறைத்து உத்தம்சிங் என்ற பஞ்சாபி இளைஞன் 21 வருடங்கள் காத்திருந்து, அமிர்தசரஸில் சுடுவதற்கு அதிகாரம் கொடுத்த மைக்கேல் ஓட்வியரை, 1940 மார்ச் 13ஆம் நாளன்று, லண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில், தன் புத்தகத்துள் மறைத்து எடுத்துவந்த துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினான். பின், தப்பிக்க முயலாமல், என் பாரதத் தாய்க்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்ததில் பெருமை அடைகிறேன் என்றுகூறி தண்டனையேற்று 31.07.1940 அன்று வீரமரணம் அடைந்தார். அத்தகைய சீக்கியச்சிங்கம் உத்தம்சிங் பிறந்த தினம் 26.12.1899. அன்னாரது அஸ்தி நம்மவர் வணங்கும் வகையில் ஜாலியன்வாலாபாக்கில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் எழுந்த கோரிக்கை காரணமாக, இந்நிகழ்வின் நூறாண்டு நினைவுதினம் அன்று அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் தெரஸா மே “பிரிட்டன் இந்திய உறவில் இதுஒரு வெட்கப்பட வைக்கும் காயம்” என்று பார்லிமென்ட்டில் உரைத்தாலும், 102 ஆண்டுகள் கழிந்த நிலையிலும், இன்றுவரை பிரிட்டிஷ் அரசு தாங்கள் செய்த இந்த அரக்கத்தனத்திற்கு மன்னிப்புக்கேட்கவில்லை என்பதுவே கசப்பான உண்மை.
இந்த நிகழ்வே, பிரிட்டிஷ் ஆட்சியின் மேல் இந்தியர் வைத்திருந்த நம்பிக்கை குலைய முக்கிய காரணமாகவும், அதன்பின் காந்திஜி கொண்டு வந்த ஒத்துழையாமை, அஹிம்சை மற்றும் சத்தியாக்கிரக வழிகளின் மூலகாரணமாகவும் பார்க்கப்படுகிறது.