SREE CHANDRASEKHANDRA SARASWATHI SWAMIGAL.

VSK TN
    
 
     

சிவபெருமானின் அவதாரமாக 2500 ஆண்டுகளுக்கு முன் காலடியில் சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த சங்கரர், சிறுவயதிலேயே ஆன்மிக தேடலால் துறவு பூண்டு, அத்வைத கோட்பாடினை இந்த உலகுக்கு விளக்கி, ஷன்மத முறையை நிறுவி, பல்வேறு ஸ்லோகங்கள் எழுதி, இருள் சூழ்ந்திருந்த சனாதன தர்மத்தை ஒளியடையச் செய்தவர் ஆதிசங்கர பகவத்பாதர். பாரதத்தை முழுவதுமாக சுற்றிவந்து வேதநெறி தழைத்தோங்க பல மடங்களை நிறுவிய அவர், கடைசியில் ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றான காஞ்சியில் தன்னுடைய பீட பரம்பரையாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவினார். அதன் முதல் பீடாதிபதியாக இருந்து பின் ஸ்ரீஸ்ரீ சுரேஷ்வராச்சார்ய ஸ்வாமிகள் என்று பல ஆச்சார்யர்களால் வழிநடத்தப்பட்டு வந்தது. அந்த மடத்தின் 68வது ஆச்சார்யராக தன் பதிமூன்று வயதில் சந்நியாச தீக்ஷை பெற்று, கருணையே வடிவமாக, எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும், நடமாடும் தெய்வமாக 100 ஆண்டு காலம் துறவின் இலக்கணமாக வாழ்ந்தவர் ஸ்வாமிநாதன் என்ற பூர்வாஸ்ரம பெயர் கொண்ட ஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், பக்தர்களால் “மஹா பெரியவா” என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

மஹா பெரியவரும் பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கால் நடையாகவே யாத்திரை சென்று, பலதரப்பட்ட மக்களை சந்தித்து தர்மம் தழைத்தோங்கி, பக்தி மார்க்க சிந்தனைகளை விளக்கி வேத நெறியை கடைப்பிடிக்க வைத்தார். அவரின் யாத்திரையில் நடந்த சம்பவங்களையும், அவர் ஆற்றிய உரைகளையும் தொகுத்து “தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பில் ஏழு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் இடம்பெறாத கருத்துக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நம் ஞானத் தேடலுக்கு ஓர் வரமாக இருக்கின்றது என்றால் அது மிகையல்ல.

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி மஹானின் அறிவாற்றல் அளப்பரியது. அவருக்கு வேதம், உபநிடதம், காவியங்கள், தர்க்க சாஸ்திரம், தமிழ் இலக்கியங்கள், பல மொழிப் புலமை, இசை, நடனம் மற்றும் கலைகள், தேவாரம், திருவாசகம் போன்ற எண்ணற்ற நூல்களை கற்றுணர்ந்தவராக காமகோடி பீடத்தை அலங்கரித்தவர். தன் யாத்திரையின் வாயிலாக பக்தர்களையும், பொதுமக்களையும் தர்மத்தை நிலைநாட்ட வலியுறுத்தி பல்வேறு இடங்களிலும் வேத,ஆகம பாடசாலைகள் தொடங்கி தடையில்லாது நடக்க வழிவகை செய்தார்.
சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அதை காப்பாற்ற ஒரு மகனை அர்ப்பணிக்க ஒவ்வொரு குடும்பமும் முன்வர வேண்டும் என்ற காஞ்சி பெரியவரின் கோரிக்கை முக்கிய அம்சமாக இன்றளவும் உள்ளது.

அவர் 1918 முதல் சுதேசி கருத்துக்கு மதிப்பளித்து கதர் ஆடை அணிவதையே வழக்கமாக கொண்டார், தான் மட்டுமல்லாது மடத்தில் உள்ள அனைவரையும் அதை கடைபிடிக்க சங்கல்ப ஏற்க வைத்தார்.

1924 ல் திருக்காட்டுப்பள்ளி சிவ சுவாமி ஐயர் உயர்நிலைபள்ளியில் அவர் ஆற்றிய உரையில் ஆசிரியரிடத்தில் எவ்வாறு பக்தியும்,மாணவரிடத்தில் எத்தகைய அன்பும் இருக்க வேண்டும் என்று விளக்கினார். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கோட்பாடினை விளக்கி கூறியது ஆசிரியர மாணவரின் உறவை வலுப்படுத்துகின்ற விதமாக இருந்தது.

பின் யாத்திரை தஞ்சை மாவட்டம் செல்லூர் வழியாக செல்கையில் அவரை தரிசிக்க பல நூறு பட்டியல் சமுதாய மக்கள் பக்தியோடு காத்திருக்க, அவர்களுக்காக பல்லக்கிலிருந்து இறங்கி ஒவ்வொரு குடும்பத்தையும் ஆசிர்வதித்து, மடத்தின் மூலமாக ஆடை உதவிகள் செய்து, தெய்வ வழிபாட்டு முறைகளை எடுத்துக்கூறி ஊக்கப்படுத்தினார். இதுபோ‌ன்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளது அவரது யாத்திரையில். அதேபோல் பிற மதங்களின் மீது காட்டிய மரியாதையும், சமமாக பாவித்த விதம், அவரவர் மதத்தில் இருந்து கொண்டே உயர்நிலையை அடைய முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

காஞ்சி ஸ்வமாகளின் தமிழ் பற்று சொல்லில் அடங்காத தனித்துவமானது. தன்னை தரிசிக்க வருபவர் அனைவரிடத்திலும் தமிழும், சமஸ்கிருதமும் நம் இரு கண்கள் என்பதை பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டி விளக்கங்கள் அளித்துள்ளார். வேதநாயகம் பிள்ளை இயற்றிய கீர்த்தனைகளின் மீது அலாதி பற்று வைத்திருந்தார். பாபநாசம் சிவனுக்கு 1950-ல் “சிவ புண்ணிய கானமணி” என்னும் பட்டமும், உ.வே . சுவாமிநாத ஐயரின் தமிழ் தொண்டினை பாராட்டி அவருக்கு 1925-ல் ‘ தாக்ஷிணாத்ய கலாநிதி”என்னும் பட்டத்தையும் வழங்கினார்.

பாரதநாடு முழுவதும் ஸ்வாமிகள் மேற்கொண்ட பாதயாத்திரையாக பல திவ்ய பிரதேசங்களை தரிசிக்கவும், புண்ணிய நதிகளில் நீராடவும், சிஷ்யர்களுக்கு உபதேசங்களை செய்யவும் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிவராத்திரி அமாவாசை அன்று கும்பகோணத்திலிருந்து விஜய யாத்திரை துவங்கினார். அவர் கும்பகோணத்திலிருந்து ,ராமேஸ்வரம், நெரூர், கேரளா, காஞ்சிபுரம், சித்தூர், திருப்பதி அங்கிருந்து பாரத நாட்டின் ஆன்மீக தலைநகரான காசிக்ஷேத்திரம், பாட்னா, பீஹார், ஒரிஸா, மஹாராஷ்ட்ரா , கல்கத்தா முதலிய பகுதிகளிலுள்ள பெருநகரங்கள் மற்றும் கிராமங்கள், வைணவ,சைவ ஆலயங்களுக்கும், விஜயம் செய்தார்.

2- 11- 1920ல் தர்மபுரி ஆதினகர்த்தர் சுவாமிகளை மாயவரத்தில் தரிசித்து அவர்களுக்கு தக்க மரியாதை செலுத்தினார் .

1917ல் தர்பங்கா மகாராஜா தமது தென்னாட்டு யாத்திரையின்போது கும்பகோணத்திற்கு வந்து மூன்று நாள் சுவாமிகளை தரிசித்து வடஇந்தியஎவையும் தென்னிந்தியாவையும் ஒற்றுமைப்படுத்தும் கோயில்கள், பண்பாடு இவைகளை பற்றி பேசினார் . மகாராஜா ஸ்வாமிகளை வடஇந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
1922- அக்டோபர் மாதம் 10ஆம் தேதி, ராமநாதபுரம் ராஜா ஸ்ரீ முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் சுவாமிகளை அரண்மனைக்கு அழைத்து எல்லாவித மரியாதைகளையும் செய்தார் .

15 10 1927 -ல் பாலக்காட்டைச் சேர்ந்த நல்லிச்சேரியில் காஞ்சி பெரியவரும், காந்தியடிகளும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நிகழ்ந்தது .
ஸ்வாமிகளுடைய தரிசனத்தால் தான் மிகவும் பெரிய பயனை அடைந்ததாகவும், ஸ்வாமிகளின் புலமையை கண்டு வியந்ததாகவும் காந்தியடிகள் கூறினார்.

யாத்திரையின் போது காசி பண்டிதர்களிடமும், பல்கலைக்கழக மாணவர்கள் முன்பாக அவர் ஆற்றிய தத்துவார்த்த உரைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டுயவை.

காஞ்சி ஸ்வாமிகளின் வாழ்க்கை சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாத ஓர் பாடமாக, மனிதர்களை பக்தியின் மூலமாக ஓர் உயர்ந்த நிலையை அடையச் செய்வதாகவும் இருக்கிறது. உலகின் பல பகுதிகளில் இருந்து தன்னை காண வந்தவர்களும், வேற்று சம்பிரதாயத்தை கொண்ட சந்நியாசிகளாகட்டும், எதிர் கருத்து கொண்ட நாஸ்திகர்கள்களும் ஏற்றுக் கொள்ளும் மனிதருள் மாணிக்கமாக, தெய்வப்பிறவியாக வாழ்ந்த மஹானின் வழிநடந்து வாழ்வில் உயர்நிலையடைவோம்.
ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர

Next Post

Narad Jayanti.

Sat May 25 , 2024
VSK TN      Tweet    உலகின் முதல் நிருபர் மற்றும் செய்தித் தொடர்பாளர். அறிமுகம் :- நாரத என்ற வார்த்தையில் நார என்றால் ‘தண்ணீர்’ என்றும் ‘அஞ்ஞானம்’ என்றும் இரு பொருள் உண்டு. த என்றால் ‘தருவது’ அல்லது ‘நீக்குதல்’ என்று பொருள். அதாவது, “யவர் ஒருவர் முன்னோர்களுக்கு தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் செய்கிறாரோ” அவரே நாரதர் என்று பொருள். இன்னொருவிதமாக நாரதர் என்றால், ” அறியாமை இருள் நீக்கி ஞான ஒளியை கொடுப்பவர்” […]