Vaidyanatha Iyer – who spearheaded the temple entry movement in Madras Presidency in 1939.

VSK TN
    
 
     

பாரத மாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்!

 

ஆலயப்பிரவேச நிகழ்ச்சியின் நாயகன் தியாகி மதுரை அ.வைத்தியநாத ஐயர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
A. Vaidyanatha Iyer (16 May 1890 – 23 February 1955), also known as Madurai Vaidyanatha Iyer or Ayyar was an Indian activist, politician and freedom-fighter who spearheaded the temple entry movement in Madras Presidency in 1939.
மதுரை அளித்த தேசபக்தர்களில் அ.வைத்தியநாத ஐயர் குறிப்பிடத்தக்கவராவார்.
மகாத்மா காந்தியடிகள், தமிழ்நாட்டு விஜயமொன்றின்போது குற்றால அருவிக்குச் சென்றுவிட்டு அங்கிருந்த குற்றாலநாத ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை என்றறிந்து கோயிலுக்குச் சென்று வழிபடாமல் திரும்பிவிட்டார். பின்னர் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்திலும் அதே போல நடந்தது.
தமிழ்நாட்டில் என்று அனைவரும் சமமாகக் கோயிலில் அனுமதிக்கப்படுகிறார்களோ அதன்பிறகுதான் நான் கோயிலுக்குள் நுழைவேன் என்று சபதமேற்கொண்டார்.
1936 ஆம்ஆண்டிணல் தேர்தலில் வென்று இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமராக (அன்று முதல்வர் பதவிக்கு அப்படித்தான் பெயர்) பதவியேற்றுக் கொண்டபின் ஆலயப் பிரவேசச் சட்டம் கொண்டு வந்தார். எல்லா ஆலயங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கப் போராட வேண்டியிருந்தது.
மதுரையில் அ.வைத்தியநாத ஐயரிடம் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஆலயப்பிரவேசம் நடத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அவரும் பல தொண்டர்களுடன், பின்னாளில் அமைச்சராக இருந்த மேலூர் திரு கக்கன் உட்பட பலர் தயாராக குளித்து, திருநீறணிந்த கோலத்தில் ஆலயத்திற்குள் நுழைய முற்பட்டபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டிருந்தனர்.
இந்த செய்தி இராஜாஜிக்குத் தெரிந்து அவர் முதுகுளத்தூர் திரு முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பார்த்துக் கொள்வார், நீங்கள் திட்டமிட்டபடி ஆலயப்பிரவேசம் செய்யுங்கள் என்று மதுரை வைத்தியநாத ஐயருக்கும் தெரிவித்து விட்டார்.
தொண்டர்கள் ஆலயத்துக்குள் நுழைய தயாரான சமயம், எதிர் தரப்பில் தடி, கம்பு, வேல், அரிவாள் முதலிய ஆயுதங்களுடன் மற்றொரு கூட்டம் இவர்களைத் தடுக்க தயாராக இருந்தது.
அந்த நேரம் பார்த்து முதுகுளத்தூர் தேவரின் ஆட்கள் அங்கு வந்து இறங்குவதைப் பார்த்ததுதான் தாமதம், அதுவரை வரிந்துகட்டிக்கொண்டு தொடை தட்டியவர்கள் காணாமல் போய்விட்டனர்.
ஆலயப் பிரவேசம் வைத்தியநாத ஐயர் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின் மதுரை வந்த காந்தியடிகள் கோயிலுக்குச் சென்று வழிபட்டார் என்பதெல்லாம் வரலாற்றுச் செய்திகள். அந்த புகழ்வாய்ந்த ஆலயப்பிரவேச நிகழ்ச்சியின் நாயகன் அ.வைத்தியநாத ஐயர் அவர்கள்.
மதுரை அ.வைத்தியநாத ஐயர் மதுரையில் புகழ் பெற்ற வழக்கறிஞர். காங்கிரஸ் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இவருக்கு அந்நாளில் மதுரையில் ஏராளமான சீடர்கள், பலதரப்பட்டவர்கள். இராஜாஜியின் அத்தியந்த தோழர்; இல்லையில்லை பக்தர்.
அந்நாளில் அப்பகுதி முழுவதிலும் ஹரிஜனங்கள் அனைவரும் இவரைத் தங்கள் தந்தைபோல எண்ணிப் போற்றி வந்தனர். இவரது குடும்பத்தில் ஒருவராகவும், தொண்டராகவும் இருந்தவர்களில் முதன்மையானவர் முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் திரு பி.கக்கன் அவர்கள்.
தோற்றத்தில் இவர் மிக ஆசாரசீலராக இருப்பார். பஞ்சகச்ச வேஷ்டி, கதர் ஜிப்பா, மடித்துத் தோள்மீது போட்ட கதர் துண்டு, நெற்றி நிறைய விபூதி, தலையில் உச்சிக்குடுமி, மெலிந்த உடல் இதுதான் அவரது தோற்றம். அனைவருக்கும் புரியும்படியான எளிய பேச்சு வழக்கில் இவர் பேச்சு அமைந்திருக்கும்.
இவர் வீடு தேசபக்தர்களுக்கு ஒரு சத்திரம். எப்போதும் இவர் வீட்டில் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். சிறைசென்றுவிட்ட காங்கிரஸ் தொண்டர்களின் குடும்பத்தினர் வந்தால் அவர்களுக்கு பண உதவி உடனே செய்வார். இராஜாஜி மதுரை வந்தால் இவர் வீட்டில்தான் தங்குவார்.
இவர் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த விஷ்ணம்பேட்டை. கொள்ளிடக்கரை ஊர். தந்தையார் அருணாசலம் ஐயர், தாயார் இலட்சுமி அம்மாள். வைத்தியநாதையர் இவர்களது இரண்டாவது மகன். அருணாசலம் ஐயர் புதுக்கோட்டை மகாராஜா பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்தார். அங்கிருந்து அனைவரும் மதுரையில் குடியேறினர். இவர் மதுரையில் பாரதியார் ஆசிரியராக சிறிது காலம் இருந்த சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளி இறுதி வகுப்பில் தங்கப்பதக்கம் வென்றார். அரசாங்க உதவித்தொகை கிடைத்தது, அதில் மேற்கல்வி பயின்றார். மதுரையிலும், பின்னர் மாநிலக் கல்லூரியிலும் படித்துத் தேறினார். அப்போது சென்னையில் விபின் சந்திர பால் வந்து கடற்கரையில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில் மனம் ஈடுபட்டு இவர் தேசபக்தர் ஆனார்.
இவருக்குச் சுந்தரராஜன், சங்கரன், சதாசிவம் என்ற மூன்று குமாரர்கள். சுலோசனா, சாவித்திரி எனும் இரண்டு புதல்விகள். மதுரைக்கு வந்த பெருந்தலைவர் சி.ஆர்.தாஸ் அவர்களை வைத்தியநாத ஐயர் சந்தித்தார். அவர் அறிவுரைப்படி வழக்குரைஞர் தொழிலை விடாமல், அதன் மூலம் பலருக்கு உதவி செய்து கொண்டும், நாட்டுப்பணியாற்றிக்கொண்டும் இருந்தார்.
பல தேசியத் தலைவர்கள் சிறையிலிருந்து வெளிவரும்போது அவர்களை எதிர்கொண்டு வரவேற்கும் நல்ல பணியைச் செய்து வந்தார். ஜார்ஜ் ஜோசப், துர்க்காபாய் போன்றவர்களை இவர்தான் வரவேற்றுத் தன் இல்லம் அழைத்து வந்தார். மதுரையில் ஏற்படும் வெள்ளம், தீ விபத்து காலங்களில் இவர் ஓடிச்சென்று உதவி ஏற்பாடுகளைச் செய்து வந்தார். கருப்பையா பாரதி எனும் தொண்டர் கொலை செய்யப்பட்ட போது அவரது குடும்பத்துக்கு நிதி வசூல் செய்து உதவி செய்தார்.
1946இல் வைகை நதியின் வடகரையில் திராவிடக் கழக மகாநாடு நடைபெற்றது. சில தி.க.தொண்டர்கள் மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குச் சென்று அங்கு கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்த பக்தர்கள் அவர்களைத் துரத்திக் கொண்டு போய் மகாநாட்டு பந்தல் வரை விட்டனர். மகாநாட்டு பந்தலும் தீயில் எரிந்தது.
அப்போது ஷெனாய் நகரில் ஈ.வே.ரா தங்கியிருந்த வீட்டைச் சுற்றியும் கூட்டம் கூடியது. போலீசும் தடுமாறியது. தகவல் அறிந்த ஐயர் அங்கு விரைந்து சென்று நடுவில் நின்று பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார். பெரியாரையும் அவரது தொண்டர்களையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். (தகவல்: திரு ஐ.மாயாண்டி பாரதி – நூல்: “விடுதலை வேள்வியில் தமிழகம்”)
இவர் 1947-52 இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1947இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. அப்போது ஒரு ரயில்வே ஸ்ட்ரைக் நடந்தது.
தலைமறைவாக இருந்த பி.ராமமூர்த்தி மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு முக்கிய வேலையாகச் செல்ல வேண்டி இருந்தது. பி.ஆர். வைத்தியநாத ஐயரை அணுகினார். சென்னைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். எதிர் கட்சியைச் சேர்ந்தவர், ஒரு கம்யூனிஸ்ட் இருந்தாலும் சரியென்று இவரைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். வழியில் போலீஸ் வண்டியை நிறுத்தியபோது, பி.ஆர்.அடியில் படுத்துக் கொண்டார், ஐயர், “நான் எம்.எல்.ஏ. அவசரமாக செல்கிறேன்” என்று சொல்லவும் வழிவிட்டனர். பி.ராமமூர்த்தியும் தலை தப்பினார். இவர் 1946இல் மதுரையில் மூளவிருந்த மதக் கலவரத்தையும் இலாவகமாக தடுத்து நிறுத்தினார்.
1930இல் இராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையிலிருந்து ஐயர் தலைமையில் ஒரு படை வேதாரண்யம் சென்று உப்பு எடுத்தது. அங்கு புளிய மிளாறினால் அடி வாங்கி சிறையிலும் அடைக்கப்பட்டார். 1932இல் சட்ட மறுப்பு இயக்கத்துக்காக சட்டத்தை மீறி பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இவர் பாதுகாப்புக் கைதியாக சிறை பிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டார்.
தீண்டாமை ஒழிப்புக்காக இவர் நடத்திய ஆலயப் பிரவேசம் குறித்து இக்கட்டுரையின் முதலில் கூறியபடி, இவர் என்.எம்.ஆர்.சுப்பராமன், டாக்டர் ஜி.ராமச்சந்திரன், நாவலர் சோமசுந்தர பாரதி, முனகலா பட்டாபிராமையா, சிவராமகிருஷ்ணய்யர், சோழவந்தான் சின்னச்சாமி பிள்ளை, மட்டப்பாறை வெங்கட்டராமையர் ஆகியோருடன் ஐ.மாயாண்டி பாரதி போன்ற மாணவர்களோடும் சேர்ந்து ஆலயப் பிரவேசப் பிரச்சாரம் மேற்கொண்டார். இவரது அரிஜன சேவையும், தீண்டாமை ஒழிப்பும் அவரது இறுதிக் காலம் தொடர்ந்தது.
1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் சிறைப்பட்டபோது இவர் அபராதம் செலுத்த மறுத்ததால் இவரது கார் ஏலம் விடப்பட்டது. ஆனால் மதுரையில் இவரது காரை ஏலத்தில் எடுக்க எவருமே முன்வரவில்லை. இவரது குடும்பமே நாட்டுக்காகச் சிறை சென்ற குடும்பம். மகன் வை.சங்கரன் ஆறு மாதம் அலிப்பூர் சிறையில் இருந்தார். அய்யரின் தம்பியும் சிறை சென்றார். மனைவி அகிலாண்டத்தம்மாள், கக்கன் அவர்கள் தன் தாயாகக் கருதிய இவரும் சிறை சென்றார்.
தியாகசீலர் மதுரை அ.வைத்தியநாதையர் பற்றி பார்த்தோம். இவர் மட்டுமல்ல, இவரது மனைவி திருமதி அகிலாண்டத்தம்மாள், மகன் ஏ.வி.சங்கரன் ஆகியோரும் நாட்டுக்காகச் சிறை சென்ற தியாகிகளாவர். குடும்பத்தார் மட்டுமா? இல்லை, குடும்பத்தில் ஒருவராக இருந்து மதுரை ஏ.வி.ஐயரின் குடும்பப் பொறுப்புக்களையெல்லாம் கவனித்து வந்த வளர்ப்பு மகன் தியாகசீலர் பூ.கக்கன் அவர்களும் ஒரு சிறைசென்ற தியாகி. இப்படி இவரும் இவரோடு சேர்ந்தவர்களும் நாட்டுக்காக உழைத்தவர்கள்.இவர் 1955ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மதுரையில் காலமானார்.
மதுரை ஏ.வைத்தியநாத ஐயரின் மனைவி திருமதி அகிலாண்டத்தம்மாள் 1899இல் பிறந்தவர். மதுரைக்கு இவர் வீட்டுக்கு வரும் தொண்டர்களுக்கெல்லாம் அலுப்பு சலிப்பு இல்லாமல் மலர்ந்து இன்முகத்தோடு உபசரித்து உணவு வழங்கியவர் இவர். இவரை ‘அன்னபூரணி’ என்றே தொண்டர்கள் எல்லாம் புகழ்ந்து பேசுவார்கள்.
அன்றைய தொண்டர்கள் மதுரைக்கு வந்த எவரும் இவர் கையால் உணவருந்தாமல் போனதில்லை. இவர் 1932 மற்றும் 1933ஆம் ஆண்டுகளில் மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டு 2 மாத சிறை தண்டனையும், 1941இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் 3 மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டார். இவர் மதுரை, வேலூர் ஆகிய சிறைகளில் இருந்திருக்கிறார். ஐயருக்குச் சிறந்த மனைவியாகவும், காங்கிரஸ் இயக்கத்துக்கு ஒரு ஊக்கமுள்ள தொண்டராகவும், காங்கிரஸ் தொண்டர்களுக்கெல்லாம் உணவு அளித்து அன்னபூரணியாகவும் திகழ்ந்தார்.
இவர்களது குமாரர்தான் பிரபல வழக்கறிஞர் ஏ.வி.சங்கரன், எம்.ஏ.,பி.எல். இவர் 1942இல் சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது மகாத்மா காந்தி ஆகாகான் அரண்மனையில் உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற செய்தி கேட்டுத் தானும் உண்ணாவிரதம் இருந்து, மறியலிலும் ஈடுபட்டார். இவர் மறியல் செய்தமைக்காக அன்றைய இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் 6 மாத காலம் தண்டனை விதிக்கப்பட்டார்.
இவர் ஒருமுறை திருச்சி தேவர் அரங்கத்தில் நடந்த எம்.ஆர்.ராதாவின் கீமாயணம் நாடகம் பார்க்கப் போயிருந்தார். அந்த நாடகத்தில் எம்.ஆர்.ராதா ராமனை இழிவு படுத்தியும், சீதையைப் பற்றிக் கொச்சையாகப் பேசியும் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எழுந்து சங்கரன், நீங்கள் சொல்லும் இந்த ‘கீமாயண’க் கதைக்கான விஷயங்கள் எந்த நூலில் இருக்கிறது. இவற்றுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா என்று கேள்வி எழுப்பினார். திராவிட இயக்க நிகழ்ச்சிகளில் இதுபோன்ற நியாயமான கேள்விகளை யாராவது கேட்டால் என்ன ஆகுமோ அது அன்று சங்கரனுக்கு ஆயிற்று. இது நமது சுதந்திர இந்தியாவில் எல்லா உரிமைகளும் பெற்றிருந்த நேரத்தில், அரசாங்கத்தால் அல்ல குடிமக்களில் ஒரு பகுதியினரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. எனினும் மதுரை ஏ.வி.ஐயர் குடும்பம் ஒரு தியாகக் குடும்பம்.
வாழ்க அவர்களது புகழ்!
வாழ்க தியாகி வைத்தியநாத ஐயரின் புகழ்!
நன்றி = Pressbooks.com

Next Post

His name is synonymous with Harijan Temple Entry

Thu May 16 , 2024
VSK TN      Tweet    M R Jambunaathan While studying in Madras Presidency College,  a student listens to Bipin Chandra Pal’s address at the Marina beach. On knowing this, the college principal (an Englishman) , ordered the young man to stand upon the bench from morning to evening in the class for two weeks. […]