கார்கில் ! இந்தியா– பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பனி படரும் மிக உயர்ந்த இமயமலை பிரதேசம். பாரத மாதாவின் மணி மகுடத்தில் அழகுக்கு அழகு சேர்க்கும் அழகிய நகரம். ஸ்ரீநகரில் இருந்து 205 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மட்டும் தான் கார்கில் வழியாக செல்கிறது.
1999–ம் ஆண்டு குளிர்காலத்தில் பாகிஸ்தான் படைகள் கீழே இறங்குவதற்கு பதில் அங்கேயே முகாமிட்டு இருந்தன. இந்திய படைகள் கீழே இறங்கி விட்டதால் காலியாக இருந்த இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது. கார்கிலில் ஊடுருவி எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர். 130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவி விட்டனர். பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளும் இணைந்து செயல்பட்டனர்.
இந்திய அரசு, ஆக்கிரமிப்புக்காரர்களுக்குப் பதிலடி கொடுக்க ‘ஆபரேஷன் விஜய்’ எனும் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 20,000 வீரர்களோடு இணைந்து சில ஆயிரம் இந்திய துணை இராணுவ வீரர்களும் இந்திய வான்படையும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தினர்.
எக்காரணத்தைக் கொண்டும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடக்க கூடாது என்ற கட்டுப்பாடு ராணுவத்துக்கு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் நேருக்கு நேராக தாக்கி அவர்களை ஓட வைப்பது மட்டும் தான் சாத்தியமாக இருந்தது. பாகிஸ்தான் வசம் இருந்த ஒவ்வொரு சிகரத்தையும் நமது ராணுவத்தினர் மிகப்பெரிய போராட்டத்துக்கு இடையே கைப்பற்றினார்கள். மலை உச்சியில் இருந்து தாக்கிய பாகிஸ்தான் ராணுவத்தினரை மலை பாறைகளுக்கு இடையே ஊர்ந்தபடி சென்று வீழ்த்தினார்கள். நமது ராணுவத்துக்கு வலு சேர்க்க விமானப்படை விமானங்களும் குண்டுகளை வீசியது.
இந்திய வீரர்களின் சிறப்பாக போரிட்டு நமது பகுதிகள் ஒவ்வொன்றாக கைப்பற்றினர். அத்துடன் ராணுவ வீரர்களையும் அதிகளவில் இழந்தது பாகிஸ்தான். ஒரு கட்டத்தில், ஒரு வாரம் தாக்குப் பிடிப்பதே கடினம் என்கிற சூழலில், உலக நாடுகளை பஞ்சாயத்துக்கு அழைத்தது பாகிஸ்தான். ஆனால் இந்தியா பக்கமே நியாயம் இருந்ததால், பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. உடனே போரை நிறுத்தாவிட்டால் அழிவு நிச்சயம் என்று அறிந்த படைகளை விலக்கி கொண்டது பாகிஸ்தான். ஆனாலும் தீவிரவாத குழுக்கள் போரை தொடர, ஒரே வாரத்தில் அவர்களை சிதறடித்தது இந்திய ராணுவம். ஜூலை 26 போரில் இந்தியா முழு வெற்றி பெற்றது.
நமது வீரர்கள் 527 பேர் வீர மரணம் அடைந்தார்கள், 1,363 வீரர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.