Tamil Nadu government pushing social justice to the grave: Bharatiya Mazdoor Sangh condemned!

VSK TN
    
 
     

தமிழ்நாடு அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான அரசு போக்குவரத்து கழகம் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிப்பதற்கு பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

தற்பொழுது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அரசு பேருந்துகளை இயக்கும் பொறுப்பை தனியார்வசம் ஒப்படைப்பதற்கான டெண்டரை (Outsourcing) தமிழ்நாடு அரசாங்கத்தின் போக்குவரத்து கழகம் 17.06.2024 அன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு பேருந்து சேவை பாதிக்கப்படாமல் இருக்க நிரந்தர தொழிலாளர்களை நியமிக்கும்வரை ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள் என்ற ஆட்சியாளர்களின் அறிக்கை தேன் தடவப்பட்ட விஷம் என பாரதிய மஸ்தூர் சங்கம் கருதுகிறது. காலி பணியிடங்கள் திடீரென உருவாகவில்லை, உரிய நேரத்தில் காலி பணியிடங்களை நிரப்பாமல் தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்கி பொதுமக்கள் சேவை பாதிக்கும் என்ற போர்வையில் ஆட்சியாளர்கள் தனியார் மயத்தை போக்குவரத்து கழகங்களில் புகுத்துகின்றனர். ஆட்சியாளர்களின் இந்த முடிவை பாரதிய மஸ்தூர் சங்கம் கடுமையாக எதிர்க்கின்றது.

  1. தனியார் முதலாளிகள் தங்களது ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை அழைத்து வந்து குறிப்பிட்ட வழிதடத்தில் பேருந்துகளை இயக்கி டிக்கெட் வசூல் தொகையை போக்குவரத்து கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என வெளியிடப்பட்டுள்ள டெண்டர் மூலம், அரசு போக்குவரத்து துறையின் நிரந்தர வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள தமிழக இளைஞர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. தமிழக அரசின் இந்த செயல்பாடு காலப்போக்கில் வேலைவாய்ப்பு அலுவலகங்களை இழுத்து மூடுவதற்கான துவக்கம் என பாரதிய மஸ்தூர் சங்கம் அஞ்சுகிறது. எனவே, இளைஞர்களின் கனவை நாசமாக்கும் டெண்டரை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
  2. ஆண்டு முழுவதும் வேலை இருக்கக்கூடிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலைகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் (Core Activity) அடிப்படை வேலைகள் ஆகும், அந்த வேலைகளில் தனியார் முதலாளிகள் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களை புகுத்துவது ஒப்பந்த தொழிலாளர் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே, சட்டத்திற்கு எதிரான
    மேற்கண்ட டெண்டரை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும்.
  3. ஆண்டு முழுவதும் வேலை இருக்கக்கூடிய நிரந்தர பணியிடங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்பதன் மூலம், அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய இளைஞர்களுக்கான இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு “சமூக நீதியை” தமிழக அரசு குழிதோண்டி புதைக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பில் பாலின அடிப்படையில் பெண்களுக்கான 30% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு மேற்கண்ட டெண்டரை மூலம் புறக்கணிப்பதாக பாரதிய மஸ்தூர் சங்கம் கருதுகிறது. எனவே, தமிழகத்தில் “சமூக நீதியை” காத்திட மேற்கண்ட டெண்டரை ரத்து செய்யவேண்டும்.

ஏற்கனவே தமிழ்நாடு அரசு, 77,000 கோடி ரூபாய் மதிப்பு உடைய 14,500 மெகா வாட் நீர் மின்சார உற்பத்தி நிலைய கட்டுமான வேலைகள் மற்றும் அந்த மின்சார உற்பத்தி நிலையங்களை நீண்ட காலத்திற்கு இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்தல் ஆகிய இரண்டு வேலைகளையும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கொடுக்காமல் “பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்” PPP அடிப்படையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுப்பதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, டிசம்பர் 2023-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கான அரசு வேலை மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு ஏற்கனவே சாவு மணி அடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசு போக்குவரத்து கழகங்களால் ஏற்கனவே நேரடியாக நியமிக்கப்பட்டு தினக் கூலி, கேஸ்வல் லேபர் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பணியாற்றி வரக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நியமன ஆணை, அடையாள அட்டை, சம்பளப் பட்டியல் உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களைகூட ஒப்பந்த தொழிலாளர் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழிப்பு) சட்டத்தின்படி அரசு போக்குவரத்து கழகங்கள் இதுவரை வழங்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்கான ESI, PF உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள அவலநிலை தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவுகின்றது. மேலும்,

தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் பணமாக கையில் வழங்கப்படுவதைப் போன்று அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் சம்பளம் கையில் பணமாக வழங்கப்படுகிறது. சம்பளத்தை தொழிலாளர்களுக்கு காசோலையாக வழங்க வேண்டும் அல்லது அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் எக்காரணம் கொண்டும் கையில் பணமாக கொடுக்கக் கூடாது என்ற சட்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. அதனால், தொழிலாளர்களுக்கு சம்பளம் முழுமையாக கிடைக்கின்றதா அல்லது இடைத்தரகர்களுக்கு கூறு போடப்படுகிறதா என்கின்ற சந்தேகமும், “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கப்படுகின்றதா என்ற – கேள்வியும் எழுகின்றது. தமிழகத்தில் தொழிலாளர் சட்ட அமலாக்கம் தோல்வியடைந்து சீர்கெட்டு இருப்பதை இந்த விஷயங்கள் காட்டுகின்றன.

நேரடியாக தமிழ்நாடு அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கே இந்த கதி எனில் தனியார் முதலாளிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற மிகப்பெரிய அச்சம் பாரதிய மஸ்தூர் சங்கத்திற்கு எழுந்துள்ளது. அதன்படி, தமிழக அரசின் இந்த ஒப்பந்த புள்ளி அறிவிப்பு, தனியார் முதலாளிகள், தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கு சிவப்பு கம்பளம் விரிப்பதாக அமைந்துள்ளது. எனவே, தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் சமூக பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் மேற்கண்ட டெண்டரை ரத்து செய்யவேண்டும்.

  1. ஒப்பந்த காலம் ஓர் ஆண்டு எனவும், இருதரப்பு கருத்தொற்றுமையின் அடிப்படையில் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படும் எனவும் டென்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு பேருந்து போக்குவரத்து நீண்டகால அடிப்படையில் தனியார்வசம் ஒப்படைக்கப்படுகிறது என இதன் மூலம் தெரியவருகிறது. கேரளா மாநிலத்தை பார்த்த தமிழ்நாடு அரசாங்கம் தங்களது போக்குவரத்து பொதுத்துறை நிறுவனமான அரசு போக்குவரத்து கழகத்தைகழகத்தை தனியார்வசம் ஒப்படைக்க டெண்டர் வெளியிட்டு உள்ளது. பொதுத்துறை நிறுவனமான அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் தமிழக அரசின் முடிவை பாரதிய மத்தூர் சங்கம் எதிர்க்கின்றது. மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில், அரசுப் பேருந்து இயக்கத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் 17.06.2024 அன்றைய டெண்டரை தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களும், அரசு போக்குவரத்துக் கழகமும் உடனடியாக ரத்து செய்யவேண்டுமென BMS சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Post

You People Will Come Like Jhansi Rani

Thu Jun 27 , 2024
VSK TN      Tweet    ராஷ்ட்ரீய சேவிகா சமிதி சார்பில் மகளிர் பண்பாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா 25 / 26 ஜூன் அன்று நாக்பூரில் நடைபெற்றது. அப்போது பேசிய சமிதியின் தலைவர் சாந்தா அக்கா, “பெண்கள் தங்களை சுற்றி விரிக்கப்படும் மாயவலையில் விழாது, சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும், இது கல்வியின் மூலமே சாத்தியம். இது பற்றிய விழிப்புணர்வை வீடு தோறும் ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.   இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பத்மஸ்ரீ […]