VSK TN
சேது
——————————————————————–
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 கர பங்குனி 17 ( 2012 மார்ச் 30)
——————————————————————–
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 கர பங்குனி 17 ( 2012 மார்ச் 30)
கூடங்குளம் கிணற்றில் புறப்பட்ட பூதங்கள்
கிணறு வெட்ட பூதம் புறப்பட்டிருக்கலாம். புறப்படாமலும் இருந்திருக்கலாம். ஆனால் கூடங்குளத்தில் அணுமின் நிலைய ‘கிணறு’ வெட்டப்போக, பல பெரிய ‘பூதங்கள்’ புறப்பட்டிருக்கின்றன. ரஷ்ய நிறுவனம் என்பதால் அமெரிக்க ஆதரவாளர்கள் எதிர்க்கிறார்கள். இது முதலில் பலர் வெளியிட்ட கருத்து. கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு பின்பலமாகவும் இருப்பது பிஷப்களும் பாதிரிகளும் என்ற விஷயம் மத்திய அரசின் உள்துறை மூலம் அம்பலமாகியதால் ‘வகுப்புவாதிகள் காட்டும் பூச்சாண்டி’ என்ற வாதம் தலைதூக்கவே இல்லை. பாதிரி அமைப்புகள் யாருக்கு விசுவாசமாக இருந்துவருகின்றன என்று இப்போது தெள்ளத் தெளிவாகி விட்டது அறிவியலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் அப்துல் கலாம் கூடங்குளம் மக்களின் நன்மைக்கான நலத்திட்ட தொகுப்பை பரிந்துரைத்ததுடன் அணுமின் நிலையத்தால் ஆபத்தில்லை என்று தெளிவாகக் கூறிய பின்னும் கிளர்ச்சியாளர்கள் அடம் தொடர்ந்தது. மலை மலையாய் ஆதாரம் இருந்தும் மத்திய அரசு ரூ. 14 000 கோடி செலவிடப்பட்டுள்ள அணுமின் வளாகத்தை, பாதிரிகள் தூண்டிவிட்ட கிளர்ச்சியாளர்கள் தயவில் பல மாதங்கள் வரை விட்டுவைத்து வேடிக்கை பார்த்தது. அரசியல் வானிலிருந்து இடைத்தேர்தல் மேகம் விலகிய சூட்டோடு மாநில அரசு பிரம்பைக் கையிலெடுத்ததும் அடங்காதவர்கள் அடங்கியது போலத் தெரிகிறது. மாநிலத்தில் மின் பஞ்சம் இவ்வளவு கடுமையாக இல்லாதிருந்தால் செல்லப் பிள்ளைகளான சிறுபான்மையினர் மீது இந்த நடவடிக்கை கூட வந்திருக்குமா என்பது சந்தேகப் பிராணிகளின் கேள்வி.
சர்ச்சைகளுக்கு ஒரு பரிகாரம்?
ராணுவ அமைச்சர் ஏ கே அந்தோணியும் பாரத ராணுவ தலைமை தளபதி ஜெனரல் வி கே சிங்கும் பல வார கால சர்ச்சையை ஒதுக்கி வைத்துவிட்டு ஏப்ரல் 3 அன்று தமிழகம் வருகிறார்கள். 1971 ல் பாரத ராணுவத்திற்குத் தலைமை தாங்கி பாகிஸ்தானை போரில் முறியடித்த பீல்டு மார்ஷல் மானக் ஷா நினைவிடத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருவரும் ஊட்டிக்கு வருகிறார்கள். மானக் ஷாவின் புதல்விகள் இந்த நினைவிடத்தை அமைத்திருக்கிறார்கள்.
பக்தியும் கலையும் யார் கண்ணை உறுத்தும்?
தமிழகத்தில் மகாபலிபுரத்திற்கு அடுத்தபடியாக அற்புத சிற்ப வேலைப்பாடு உள்ள ஆலயம் கிருஷ்ணன்கோவில் என்ற ஊரில் உள்ள வெக்கடேசப் பெருமாள் கோயில். நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பாளையங்கோட்டைக்கு பக்கத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் மார்ச் 29 அன்று வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் கிடைத்து அங்கு சென்ற போலீசார் ஒரு வெடிகுண்டுப் பொட்டலத்தைக் கண்டெடுத்து செயலிழக்கச் செய்தனர்.குண்டுவைத்தவர்களை பிடிப்போம் என்று காவல்துறை அறிவித்திருக்கிறது. தனது சிற்ப அற்புதங்களால் ஏராளமான பக்தர்களை ஈர்த்து வரும் இந்த ஹிந்துக் கோயில் யார் கண்ணை உறுத்துகிறது என்பதும் புலனாய்வில் தெரிய வரும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் காலத்திய கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.