இந்து முன்னணி மாநில செயலாளர் சு. வெள்ளையப்பன் படுகொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும்!
இந்து முன்னணியின் மாநில செயலாளர் சு. வெள்ளையப்பன், தமிழகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர், ஏராளமான ஊழியர்களை உருவாக்கியவர். அவர் வேலூரில் இன்று பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் அளிக்கிறது.
இந்து சமுதாய ஒருங்கிணைப்புப் பணியில் கடந்த 16 ஆண்டுகளாக இந்து முன்னணியின் முழு நேர ஊழியராக பணியாற்றியவர். சங்கரன்கோவிலைச் சேர்ந்த வெள்ளையப்பன் ஜலகண்டேஸ்வர் கோயிலில் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்ட புனர்நிர்மாணப்பணியில் முக்கிய பணியாற்றியவர். தொடர்ந்து அந்த ஆலயத் திருப்பணிக்கு சேவையாற்றி வந்தவர். சமீபத்தில் அறநிலையத்துறை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தை எடுத்தத்தை எதிர்த்து தொடர்ந்து போராடங்களை நடத்தி வருபவர்.
சு. வெள்ளையப்பன் பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர். சமுதாயத்திற்கு ஒரு பிரச்னை என்றால் அங்கு இந்து சமுதாயத்தின் பிரதிநிதியாக முதல் நபராக பங்கேற்பவர். நியாயத்தை எடுத்துக்கூறுவார்.
அத்தகைய நல்ல உள்ளம் படைத்தவரை கொடூர மனம்படைத்தவர்கள் கொன்று குவித்துள்ளார்கள். வேலூரில் தொடர்ந்து படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன. தமிழகத்தில் அரசியலைச் சார்ந்தவர்கள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் நாள்தோறும் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழகம் கொலை களமாக மாறி வருவதை எண்ணிப் பார்க்கையில் கவலை அளிக்கிறது. அரசு இனி கொலைகள் நடக்காது என்று உறுதி அளிக்கும் வகையில் அதன் செயல்பாடு இருக்க வேண்டும். இல்லையேல் நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் எதவும் நடக்கும் என்பது அரசாட்சிக்கு அழகல்ல. தமிழக காவல்துறை புலனாய்வுக்குத் தெரியாமல் இது நடந்திருக்க முடியாது, அல்லது புலானய்வுத் துறை செயலிழந்துவிட்டதா? காவல்துறை புலனாய்வுத் துறையின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்துகிறதா? காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இந்தப் படுகொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து, உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும்.
இந்தப் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை அமைதியான முறையிலும், ஜனநாயக வழியிலும் நமது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் கடையடைப்புக்கு இந்து முன்னணி அழைப்பு விடுக்கிறது. இந்து முன்னணியின் வேண்டுகோளை ஏற்று வணிகர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் கடையடைப்புக்கு ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம்.
வெள்ளையப்பனின் ஆன்மா நற்கதியடை தமிழகத்தின் அனைத்து ஆலயங்களிலும் மோட்ச தீபம் ஏற்றி கூட்டுப் பிரார்த்தனை செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.