VSK TN
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
அறநிலையத்துறையின் அலட்சியத்தை போக்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழகத் திருக்கோயில்களில் விடப்படும் பசுக்கள் கசாப்பிற்கு விற்கப்படுவதும், கோசாலைகள் என்ற பெயரில் தனியார் சிலர் நடத்துவோருக்கு அளிக்கப்பட்டு முறைகேடுகள் நடைபெற்ற செய்திகள் வெளிவந்துள்ளன. அதுவும் திருத்தணி கோயிலில் 6000 பசுக்கள் கணக்கில் காணவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கக்ககூடிய விஷயம். மக்கள் புண்ணியத்திற்கு கோயிலுக்கு என அளிக்கும் பசுக்கள் இப்படி முறைகேடாக கொலைக்களம் அனுப்பப்படுமானால் அதனால் பாவம் வந்து சேரும் என்பதை அறநிலையத்துறை அதிகாரிகள் உணர வேண்டும். முறையாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோசாலைகள் இயங்கி, பசுவின் புனிதத்தை காத்து வருகின்றன. அத்தகைய இடங்களுக்கு முறையாக பசுக்களை அனுப்ப வேண்டியது காணிக்கை பெறும் கோயில் அதிகாரிகளின் பொறுப்பு. ஒவ்வொரு கோயில்களிலும் பசுமடம் வைத்து பராமரிக்க அறநிலையத்துறை ஆவண செய்ய வேண்டும். பசுமடம் வைத்தால் அந்த இடமே தெய்வீகமாக மாறிவிடும். தினசரி வழிபாடு, விழாக்கள் தவிர பசுமடம், வாரந்தோறும்சமய வகுப்பு, தேவரா, திவ்யபிரபந்த பாடசாலை, திருவிளக்குப் பூஜை, சமய சொற்பொழிவுகள் போன்றவைக்கே ஆலய வருமானம் செலவழிக்கப்பட வேண்டும். பணத்திற்காகப் பாவத்திற்குத் துணைபோய் காணிக்கை பசுக்களை விற்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
சமீபத்தில் பழனித் திருக்கோயில் தங்கும் விடுதி கட்டணம் மிகவும் உயர்த்தப்பட்டுள்ளதை இந்து முன்னணி கண்டிக்கிறது. கட்டண உயர்வை கைவிட அறநிலையத்துறையைக் கேட்டுக்கொள்கிறோம். பக்தர்களின் வசதிக்காகவே தங்கும் விடுதிகள் கோயில்கள் கட்டியுள்ளன. வெளி ஊர்களிலிருந்து வரும் ஏழை எளிய பக்தர்களுக்கு இது உதவ வேண்டும். தனியார் விடுதி போல் லாப நோக்கத்தோடு கட்டணத்தை உயர்த்துவது கூடாது. அறநிலையத்துறைக்கு வர வேண்டிய வாடகை, குத்தகை பாக்கியை முறையாக வசூலித்தாலே இதுபோன்ற நற்காரியங்கள் தொடர்ந்து, சிறப்பாக நடத்த முடியும். இப்படிப்பட்ட நல்ல நடவடிக்கையால் பக்தர்களும் இந்த சேவைப்பணிகளில் தங்களை இணைத்துக்கொள்வர்.
நீலகரியில் கிராமக் கோயிலுக்குச் சொந்தமான இடம் எம்.ஜி.ஆர். சிலை வைக்க ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை அவ்வூர் மக்கள் எதிர்த்துள்ள செய்தியும் வந்திருக்கின்றது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆன்மீக நம்பிக்கையோடு மக்களுக்காக வாழ்ந்தவர். கோயில்களுக்கு ஏராளமாக காணிக்கை அளித்தவர் என்பது ஊர் அறிந்த விஷயம். அப்படிப்பட்ட தலைருக்கு சிலை வைக்க அரசு இடத்திலோ, கட்சியின் மூலமாகவோ வைக்க வேண்டுமே தவிர கோயில் இடங்களில் கைவைக்கக்கூடாது. இத்தகைய செயல் எம்.ஜி.ஆரின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசு உணர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தனியார், சமூக கோயிலானாலும், அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயிலானாலும் ஆலய நிலங்கள், கோயில்கள், அசையா, அசையும் சொத்துக்கள் எல்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்து முன்னணி தொடர்ந்து போராடிவருகிறது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு முறைகேட்டை கைவிட ஆவண செய்ய வேண்டும்.