1. மக்கள் துயர் தீர்க்கும் மக்கள்
புறக்கணிக்கப்பட்டு இன்னல்படும் சோதர்களின் துயர் துடைக்கவும் இன்னல் தீர்க்கவும் தமிழகத்தில் 31 மாவட்டங்களில் 541 இடங்களில் 8,000க்கும் மேற்பட்ட சேவைப் பணிகள் வாயிலாக மனிதாபிமான செயல்களில் ஈடுபடுகிறது ஆர்.எஸ்.எஸ் அன்பர்களின் சேவா பாரதி. எல்லா சமூகங்களையும் சேர்ந்த சுமார் 3,200 சகோதர சகோதரிகள் சேவா பாரதி கார்யகர்த்தாக்கள் ஆகியுள்ளது, சேவை செய்யும் தெய்வீக உந்துதல் மக்களிடையே நன்கு பரவி வேர்பிடித்துள்ளது என்பதன் அடையாளம். (2024 மார்ச் 3 அன்று புணேயில் மகாராஷ்டிர தொண்டு அமைப்பு ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க ஜன கல்யாண் சமிதி’ தென் தமிழக சேவா பாரதிக்கு ஸ்ரீ குருஜி புரஸ்கார் வழங்கி கௌரவித்த போது வாசித்தளித்த பாராட்டுப்
பத்திரத்தில் கண்டுள்ள தகவல்).
2. மாணவர்கள் பசியாற்றிய மடம்
கர்நாடகாவில் சிரா, துமகூரு பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 2,000 மாணவர்கள் தங்கிப் படிக்க 18 விடுதிகள் உள்ளன. ஒவ்வொரு காலாண்டும் உணவுப் பொருள் வாணிப கழகம், அந்தந்த மாவட்ட அதிகாரிகள் ஆகியோர் மூலம் அவர்களுக்கான அரிசியை வழங்கி வருகிறது அரசு. 2023 அக்டோபரில் வழங்கப்பட வேண்டிய அரிசி காலதாமதமாகி ஜனவரி வரை கிடைக்காததால் ஹாஸ்டலுக்கு அரிசி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதோடு துமகூரு மாவட்ட அதிகாரிகளிடம் அரிசி கையிருப்பும் இல்லாத நிலை. இதை கேள்விப்பட்ட சித்தகங்கா மடத்தினர் 180 குவிண்டால் அரிசி கொடுத்து உதவியுள்ளனர். தக்க சமயத்தில் குழந்தைகளின் பசியை ஆற்றியது ஸித்தகங்கா மடம் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனையோ ஹிந்து மடங்கள் பலகாலமாக மக்கள் நலனுக்கான சேவைகளை சந்தடியில்லாமல் செய்து வருகின்றன.
(ஆதாரம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், பங்களூரு, 9 – 2 – 2024)
3. பாடசாலை தரும் படிப்பினை
பாலக்காடு ராமநாதபரம் பகுதியில் வேத பாடசாலை ஆசிரியர் கிரிதர் பாழுங் கிணறுகள், குப்பை மண்டிய குளங்கள் இவற்றை தூர் வாரி ஜனங்களுக்கு பயன்படும் வண்ணம் உயிர் கொடுக்கும் ஜல சம்ரட்சண சேவையில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறார். வேத பாடசாலையில் 22 வித்யார்த்திகள் படிக்கிறார்கள். சுக்ல யஜுர் வேதம், ரிக் வேதம், க்ருஷ்ண யஜூர் வேதம் அங்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. படிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் மாணவர்களுடன் குடங்கள், கயிறு, சுத்தம் செய்யும் களைக்கொட்டு கருவி சகிதம் கிணறுகளை சுத்தம் செய்யப் புறப்படுகிறார். இதுவரை 15 கிணறுகளையும், 5 குளங்களையும் மக்கள் பயன்படுத்தும் வண்ணம் புனரமைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
(ஆதாரம்: தூர்தர்ஷன் (டிடி) மலையாளம் சேனல்)
4. தவமும் பலித்ததம்மா
ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரான சுவாமி அகண்டானந்தா (1864-1937), கல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆசுதோஷ் முகர்ஜியை (1864-1924) சந்தித்தார். ஸ்வாமிகள் வி.சி.யின் அறைக்குள் நுழைந்ததும் முழுதும் ஆங்கிலப் புத்தகங்களாக இருப்பதைப் பார்த்தார். அவர் முகர்ஜியிடம், “நீங்கள் ஒரு சக்திவாய்ந்த பதவி வகிக்கிறீர்கள். சமஸ்கிருதத்தை வளர்க்க ஏதாவது செய்ய வேண்டாமா? சமஸ்கிருதம் நம் நாட்டின் முதுகெலும்பு அல்லவா?” தூய்மையான இதயத்திலிருந்து வந்த வார்த்தைகள் ஆசுதோஷைக் கவர்ந்ததாகத் தெரிகிறது. லார்டு ரொனால்ஷேயின் ‘தி ஹார்ட் ஆஃப் ஆர்யவர்த்தா’ என்ற புத்தகத்தைப் படித்தால், துறவியார் அறிவுரையின் தாக்கத்தை நன்கு அறியலாம். அதில், “இப்போது லார்டு மெக்காலே கல்கத்தாவுக்கு வந்து இந்தப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டால், ‘ஒரே அலமாரியில் சமஸ்கிருத மொழியின் முழு இலக்கியத்தையும் அடக்கி விடலாம்’ என்று அவர் கூறிய அதே சமஸ்கிருதம், பல்கலைக்கழகத்தின் 12 துறைகளில் பயிற்றுமொழி ஆகியிருப்பதைக் கண்டு தனது முட்டாள்தனத்தை வெறுத்திருப்பார், சமஸ்கிருதத்தின் மகத்துவத்தை உணர்ந்திருப்பார்” என்று ரொனால்ஷே எழுதியிருக்கிறார்.
(ஆதாரம்: ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ 2008 செப்டம்பர் இதழ்)
5. வழியனுப்புவதே வாழ்க்கை
பாரதத் தலைநகர் டில்லியில் வசிக்கும் 26 வயது பூஜா சர்மா இதுவரை கேட்பாரற்ற 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்திருக்கிறார். “ஆண்டு 2022 ல் என்னது சகோதரர் என் கண்முன் கொலை செய்யப்பட்டார். என் தனிப்பட்ட சோகத்தை மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஆதாரமாக மாற்றினேன்” என்கிறார் பூஜா. தொடக்கத்தில் உரிமை கோரப்படாத உடல்கள் பற்றிய தகவல் பெற காவல் துறையிடமும் அரசு மருத்துவ மனைகளிலும் இவர்தான் தான் தொடர்பு கொண்டார். ஆனால் தற்போது அவர்கள் இவரை தொடர்பு கொள்கிறார்கள். ஒரு சடலத்திற்கு இறுதிச்சடங்கு செய்ய 1,200 ரூபாய் ஆகிறது. இறுதிச் சடங்கிற்காக கங்கா ஜலம் வாங்குவதற்கும் செலவிடுகிறார். இவர் தாத்தாவின் ஓய்வூதியம் கைகொடுக்கிறது. ஊரில் பூஜா சர்மாவுக்கு நல்ல வரவேற்பு. இவரது திருமணம் தள்ளிப்போனாலும் சமூக சேவையில் முதுகலை பட்டம் பெற்ற பூஜா ஏற்றுள்ள தொண்டு தொய்வில்லாமல் நடக்கிறது.
(ஆதாரம்: ‘தினத்தந்தி’ 28 – 12 – 2023)