2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 , 2 ஆகிய தேதிகளில், கேரளா மாநிலத்தில், பாலக்காட்டில் சங்கத்தின் அகில பாரத ஒருங்கிணைப்பு (சமன்வய ) கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கவலைக்குரிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல அமைப்புகள், களத்தில் இருந்து அளித்த தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தன. கிறிஸ்தவ மிஷினரிகள் மூலம் மதமாற்றம் அதிகமாக நடைபெற்று வருவது, கவலைக்குரிய அம்சம். வரும் காலங்களில் சங்கத்தின் செயல்பாடுகள் ஆழமாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எங்களுக்கு அது உணர்த்தின.
சமுதாயத்தில் சாதி ஒரு உணர்ச்சிபூர்வமான விஷயமாக உள்ளது. நமது தேசத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும். அரசியல் அல்லது தேர்தல் ஆதாயத்தை மனதில் வைத்து செய்யக் கூடாது. எனவே, ஆர்.எஸ்.எஸ். கருதுவது என்னவென்றால் சமுதாய நலத்திட்டங்கள், குறிப்பாக குறிப்பிட்ட சில சமுதாயங்களுக்கு, பின் தங்கியவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டிய அவசியம் இருப்பின், அதற்காக அரசுக்கு புள்ளிவிவரங்கள் தேவை. அதற்காக தகவல்கள் சேகரிப்பார்கள். இதற்கு முன்பும் சேகரித்துள்ளார்கள். எனவே அவ்வாறு சேகரித்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இது அந்த குறிப்பிட்ட சமுதாயத்தின் நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும், அது தேர்தலுக்கான அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படக் கூடாது. இது குறித்து அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் .
மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவருக்கு நடைபெற்ற கொடூரம் குறித்து விவாதிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடூரங்கள் குறித்த செய்திகளை, பல அமைப்பினர் பகிர்ந்துக் கொண்டார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழக் காரணம் என்ன என்பது குறித்தும், இது போன்ற குற்றங்களில் அரசின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும், என்ன மாதிரியான சட்டங்கள், தண்டனைகள் இருக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. இது போன்ற குற்றங்களை களைய, விரைவு நீதிமன்றங்கள் அமைத்தால் , பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நியாயம் வழங்க முடியும் எனும் யோசனைகள் முன்வைக்கப்பட்டது.
இது போன்ற குற்றங்களை தடுக்க 5 விதமாக அணுக வேண்டும்
1. சட்டபூர்வமாக என்ன செய்ய வேண்டும் ?
2. சமுதாயத்தில் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ?
3. குடும்பங்கள் மூலம் பண்பாட்டை போதிப்பது எப்படி ?
4. கல்வி மூலம் சிந்தனையை மேம்படுத்துதல்
5. தற்காப்பு பயிற்சியளித்தல்.
பங்களாதேஷில் நடைபெற்று வரும் சம்பவங்கள் தொடர்பாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் குறித்த கவலை அனைவருக்கும் உள்ளது. பங்களாதேஷ் அரசுடன் நமது அரசு பேசி, அங்குள்ள ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று, பல அமைப்புகளின் பிரதிநிதிகள் நமது அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.