நான் விவேகானந்தா கல்லூரியில் பயின்றபோது (1977-1981) என்னுடன் கவியரசு கண்ணதாசன்* அவர்களின் மகன் திரு.ஸ்ரீனிவாசன் புகுமுக வகுப்பில் படித்தார். அதன் பின்னர் அவர் வேளாண் பல்கலையில் இடம் கிடைத்து படிக்கச் சென்றார். அவர் பயின்ற வருடம் திரு.கண்ணதாசன் அவர்களை எங்கள் கல்லூரிக்கு ஒரு விழாவிற்கு அழைத்திருந்தனர். அப்போது அவர் பேசும்போது எனது மகனை இந்த கல்லூரியில்தான் சேர்க்கவேண்டும் என்று தீர்மானித்து சேர்த்தேன் என்றார். உடனே “ஐஸ் ஐஸ்” என்று மாணவர்கள் கூச்சலிட்டனர். அதனாலென்ன கோடையில் ஐஸ் இதமானது தானே என்றார்.
பின்னர் பேசும் போது தமிழின் அருமை பற்றி ஒரு சிறு சம்பவமாக சொன்னார். ஒருமுறை அறிஞர்கள், கவிஞர்கள் மாநாடு ஒரு மடத்தில் நடந்ததாம். அப்போது அந்த மாநாட்டிற்கு தலைவராக ஒரு புலவர் இருந்தாராம். ஒரு புலவர் கடைமடை என்ற ஊரிலிருந்து தாமதமாக வந்தாராம். அவர் தாமதமாக வந்ததை கேலியாக குறிப்பிட எண்ணிய தலைவர் “வாருங்கள் கடை மடையரே” என்றாராம். கடைமடை பகுதியிலிருந்து வருபவரை வரவேற்கும் விதமாகவும், அதே சமயம் தாமதமாக வந்ததையும் குறிக்கும் வண்ணம் அவர் அப்படி அழைத்தாராம். வந்த புலவரும் சளைத்தவர் அல்ல. “மன்னிக்கவும் மடத்தலைவரே” என்றாராம். மடத்தின் தலைவரே என்று பொருள்படும்படியும், அதே சமயம் மடையரே என்று இடித்துரைப்பது போலவும் சொன்னாராம்.
“கவியரசு கண்ணதாசனின் கிருஷ்ணகானம்” என்ற பாடல் தொகுப்பு பட்டிதொட்டியெல்லாம் பரவிய ஒன்று. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே உட்பட அனைத்துமே மக்களின் மனம் கவர்ந்தவை. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் என்ற பாடலில் என்னைக்கவர்ந்த எளிமையான அதே சமயம் மிக உயர்ந்த தத்துவ வரிகள் இதோ:
“படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால் வேதத்துக்கே பொருள் விளங்குது..” என்ற வர்கள்தான் அது
“இன்று கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள்”