VSK TN
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) 95-ஆவது ஆண்டு தொடக்க விழாவும் (விஜயதசமி), குருநானக்கின் 550-ஆவது ஆண்டு ஜெயந்தியும், மகாத்மா காந்தி ஜியின் 150-ஆவது ஜெயந்தியும், ஜாலியன் வாலாபாக் துயரச் சம்பவத்தின் 100-ஆவது நினைவையும், ஆஸாத் ஹிந்த் சர்க்கார் (நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு) அமைக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டையும் ஒட்டி சமுதாய நல்லிணக்க ஊர்வலம் (பதசஞ்சலன்) மற்றும் பொது நிகழ்ச்சி 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை அரக்கோணத்தில் நடைபெற்றது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அருகிலுள்ள ஆதிபராசக்தி கோயிலிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்ட அணிவகுப்பு ஊர்வலத்தை வேலூர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் வி. பழனி மேஸ்திரி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அணிவகுப்பு ஊர்வலமானது பிரதான சாலை வழியாக (2.8 கி.மீ.) கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நிறைவுற்றது.
மாலை 5.30 மணிக்கு கல்லூரி வளாகத்திலுள்ள அரங்கத்தில் பொது நிகழ்ச்சியானது துவங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அரக்கோணம் ஆர்.கே.ஜி. எண்டர்பிரைசஸ் உரிமையாளர் திரு. ஆர். மணிகண்டன் அவர்கள் தலைமைற்க, லயன்ஸ் கிளப் முதல் துணை ஆளுநர் திரு. கே. அருண்குமார் அவர்கள் மற்றும் அக்ஷயா சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் திரு. ஆர். ஆனந்தன் அவர்கள் முன்னிலை வகித்தனர். பரம பவித்ரமான காவிக்கொடியை கைனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு. சி. பாண்டியன் அவர்கள் ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் உத்தர் பிராந்த் பௌத்திக் பிரமுக் திரு. ம. விவேகானந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வையொட்டி அரக்கோணம் காய்கறி மொத்த வியாபாரி திரு. வி.ஆர்.பி. துரை, கம்ம நாயுடு சங்க பொருளாளர் மற்றும் டாக்டர் வி.ஜி.என். மெட். மேல்நிலைப்பள்ளி செயலாளர் திரு டி. தனபால், தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாநில பொதுச் செயலாளர் திரு. கே.ஏ. வரதராஜன், பிராமணர் சங்க வேலூர் மாவட்டத் தலைவர் திரு. கே.கே.சி. ராஜா மற்றும் தேவர் பாத்திர கடை உரிமையாளர் ஏ. அருள்வேலன் ஆகிய 5 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய ம. விவேகானந்தன் ஜி, வேற்றுமையில் ஒற்றுமை என படைக்கப்பட்ட ஒரே தேசம் இந்தியா. இங்கு பல மொழிகள் பேசுபவர்கள் இருந்தாலும், நாம் எல்லோரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். சில அரசியல் சுயநலவாதிகள் ஜாதி, மதத்தால் நம்மை பிரிக்கப் பார்க்கிறார்கள். நாம் எப்போதும் இந்து என்ற ஒற்றுமையோடு இருக்க வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சமஸ்கிருதம் இருந்தாலும் தமிழ் அழியவில்லை. அதுபோல் வேறு மொழி வந்தாலும் அதாவது இந்தி வந்தாலும் தமிழ் மொழி அழியாது. தமிழை யாராலும் அழிக்க முடியாது.
நிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் கண்டுபிடித்தது நாம்தான். அதுபோன்று இன்னும் பல பல சாதனைகளை படைப்போம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கணவேஷ் அணிந்தவர்கள் 402, பொதுமக்கள் 108, பெண்கள் 35 என மொத்தம் 545 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பிரார்த்தனைக்குப் பிறகு கல்லூரி சார்பில் ம. விவேகானந்தன் ஜிக்கு பொன்னாடை கையில் தந்து சிறப்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மேடையில் வீற்றிருந்த அனைத்துப் பெரியவர்களுக்கும் பாரதமாதா படம் மற்றும் டெங்கடி ஓர் அறிமுகம் புத்தகம் தந்து மரியாதை செய்யப்பட்டது.
டெங்கடி ஓர் அறிமுகம் புத்தகம் வெளியீட்டு விழாவும் உடன் நடைபெற்றது. புத்தகத்தை விபாக் சங்கசாலக் திரு. இராமா. ஏழுமலை அவர்கள் வழங்க மேடையில் வீற்றிருந்த அனைத்துப் பெரியவர்களால் வெளியிடப்பட்டது.