ஆகஸ்ட் 1, 1947 அன்று இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்தது, இது காஷ்மீர் மாநிலத்தின் வரலாற்றில் மிக முக்கியமானது.
அதில் ஒன்று காந்திஜி இந்தத்தேதியில் ஸ்ரீநகர் சேர்ந்தது. மகாராஜா ஹரி சிங் 20 வயது இருந்தபொழுது, காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோது அவரை காஷ்மீருக்கு வரவேற்றார், ஆனால் 1947 பிறகு அவரை வரவேற்க விருப்ப படவில்லை. மகாராஜா ஹரி சிங் லார்ட் மவுண்ட் பேட்டன்னுக்கு இதை பற்றி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “விரிவான சிந்தனைக்கு பிறகு, நாங்கள் என்ன பரிந்துரைக்கிறோம் என்றால் மஹாத்மா காந்தி இக்காலத்தில் தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்ய வேண்டும். அப்படி அவர்கள் வரவேண்டும் என்றால் குளிர் காலத்தில் பிறகுதான் வரவேண்டும். நாங்கள் திரும்பவும் சொல்கிறோம், காஷ்மீரின் நிலவரம் மேம்படாத வரையில் அவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் யாவரும் காஷ்மீருக்கு வரவேண்டாம்”
காந்திஜிக்கு அதைப்பற்றி சிறிது தெரியவந்தபோதிலும்கூட, அவர் காஷ்மீர் சென்றார். காஷ்மீர் ஒரு முக்கியமான மாநிலமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் திகழ்ந்தது. சுதந்திரம் இன்னும் இரண்டே வாரத்தில் பெறுகிற சமயத்திலே காஷ்மீருக்கு இன்னும் ஒரு தீர்வு வரவில்லை. இதனால் காந்திஜி காஷ்மீருக்கு சென்றபொழுது தனது பிரச்சாரத்தில் இந்த மாநிலத்தை இந்தியாவின் எல்லைக்குள் சேர்கவேண்டும் என்று எண்ணவில்லை.
காஷ்மீருக்கு போவதற்குமுன், அவர் டில்லியில் தனது பிரார்த்தனை சபையில் ஜூலை 29 அம் தேதி அன்று கூறியபோது, “நான் மஹாராஜாவை இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ சேருவதற்கு சொல்ல மாட்டேன். காஷ்மீரின் மக்களே காஷ்மீருக்கு சொந்தம், அவர்களே எங்கு சேரவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும். அதனால் நான் எந்த சமூகப்பணியும் காஷ்மீரில் செய்யமாட்டேன், என்னோட பிரார்த்தனையும்கூட நான் தனித்தே செய்வேன்” என்றார்.
ஸ்ரீநகர் வந்த காந்திஜி கிஷோரி லால் என்பவரின் வீட்டில் தங்கினார். கிஷோரி லால் காங்கிரஸ் மற்றும் பிரிவினைவாத தேசிய மாநாடு கட்சி இரண்டுக்குமே நெருக்கமானவராக இருந்தார். தேசிய மாநாடு கட்சி தலைவர் ஷேக் அப்துல்லாஹ் (காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தாத்தா), காஷ்மீர் மன்னருக்கு எதிராக சதி செய்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
காஷ்மீர் மன்னரின் அதிகாரபூர்வ பிரதிநிதி, காஷ்மீர் பிரதமர் ராமச்சந்திர கக் காந்தியை சந்தித்தார். (தற்பொழுது முதல்வர் பதவி, அப்பொழுது காஷ்மீரில் மட்டும் பிரதமர் பதவி என்று அன்றைய காலகட்டங்களில் அழைக்கப்பட்டது). வந்தவர் காஷ்மீர் அரசர் எழுதிய கடிதம் ஒன்றை காந்தியிடம் வழங்கி, ஆகஸ்ட் 3 அன்று மன்னரை சந்திக்க வருமாறு கேட்டுக்கொண்டார்.
மே 15 1946 அன்று தேச விரோத செயலுக்காக ஷேக் அப்துல்லா சிறையில் அடிக்கப்பட்டதும், அவரது நண்பரான ஜவஹர்லால் நேரு, அவரை விடுவிப்பதற்காக காஷ்மீர் விரைந்தார், ஆனால் ராமச்சந்திர கக், நேரு உள்ளே நுழைய தடை விதித்தார். இதன் காரணமாக ராமச்சந்திர கக் மீது நேருவிற்கு வெறுப்பு இருந்தது. காந்திஜியுடனேயே இருக்க வேண்டும் என நேரு தேசிய மாநாடு கட்சி தலைவர்களுக்கு ஆலோசனை கூறியிருந்ததால், காந்திஜியின் இந்த பயணத்தின் அனைத்து நேரங்களிலும் தேசிய மாநாடு கட்சியின் தலைவர்கள் அவருடன் இருந்த வண்ணம் இருந்தனர். 3 நாட்களில், ஷேக் அப்துல்லாவின் குடும்பத்தினர் காந்தியை பல முறை சந்தித்தனர். ஆனால் ஹிந்து அமைப்புக்களின் தலைவர்களில் ஒருவரைக்கூட காந்தி சந்திக்கவில்லை.
காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜிட் பிரதேசத்தை 1935ல் பிரிட்டிஷ் தனி மாகாணமாக அறிவித்தனர். அந்த பிரதேசம் ராணுவ ரீதியாக முக்கியமான ஒன்றாகும், காரணம் 3 நாடுகளின் எல்லைகள் அதையொட்டி இருந்தது. குறிப்பாக ரஷ்யாவின் எல்லை கில்ஜிட்டை ஒட்டியிருந்தால், பிரிட்டிஷ் அதை தனது வசமாக்கியது. அடுத்து வந்த இரண்டாம் உலக போரில் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, இந்தியாவை விட்டு வெளியேற பிரிட்டிஷ் முடிவு செய்திருந்ததால், தனி துண்டாக கில்ஜிட்டை வைத்திருக்க விரும்பவில்லை. காஷ்மீர் அரசரிடம் முறைப்படி அதிகாரத்தை ஒப்படைக்காமல் திடீர் முடிவாக, ஆகஸ்ட் 1 அன்றே இந்த பிரதேசத்தில் தனது கொடியை இறக்கிவிட்டு, நமது மூவர்ண கொடியை பறக்கவிட்டது.
இதையறிந்த அரசர் பிரிகேடியர் கன்சாரா சிங் என்பவரை இந்த பிரதேசத்தின் ஆளுநராக நியமித்தார். அதுமட்டுமின்றி மேஜர் ப்ரவுன் மற்றும் கேப்டன் மேதிசன் என்பவர்களை இருவருக்கும் கில்ஜிட் பிரதேசத்தின் பாதுகாப்பை படையை வழிநடத்தும் பொறுப்பையளித்தார். இந்த பாதுகாப்பு படையினரில் மேஜர் பாபர் கான் உள்ளிட்ட பெரும்பாலோனோர் முஸ்லிம்கள். அடுத்த 2 மாதங்களில் பல துரோகங்கள் நடைபெற இது காரணமாக அமைந்துவிட்டது.
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கலவரங்கள் நடந்தவண்ணம் இருந்தன. இதை கட்டுப்படுத்த பஞ்சாப் எல்லை பாதுகாப்பு படையை ஏற்படுத்தியது. 50,000 பேர் கொண்ட படையின் பிரிகேடியர்களாக முஹம்மத் அயூப் கான், நசீர் அஹமது, திகம்பர் பிரார் மற்றும் திம்மையா இருந்தனர். லாஹூரில் தற்காலிக முகாம் கொண்டிருந்தனர், ஆனால் அடுத்த 15 நாட்களில் அந்த முகாம் எரிந்து சாம்பலானது.
கல்கத்தாவில், நேதாஜியின் சகோதரர் சரத் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார், நேருவின் நெருங்கிய நண்பராகவும் காங்கிரஸ் கட்சியின் 40 ஆண்டுகால தலைவராகவும் இருந்தும், அவரது ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டன. 1937ல் நடைபெற்ற வங்காள மாகாண தேர்தலில் காங்கிரஸ் 54 இடங்களையும், க்ரிஷக் பிரஜா கட்சி 37 இடங்களையும், ஜின்னாவின் முஸ்லீம் லீக் 37இடங்களையும் பிடித்தன. அதிக இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, க்ரிஷக் பிரஜா கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று சொன்னார் சரத். ஆனால் காங்கிரஸ் எதிர் கட்சியில் அமர முடிவு செய்தது, இதனால் பிரஜா கட்சியும் முஸ்லீம் லீகும் இணைந்து ஆட்சி அமைத்தது. இதனால் காங்கிரஸ் அங்கு வீழ்ச்சி கண்டது, 9 ஆண்டுகள் கழித்து முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி 5000 பேரை கொல்வதற்கு இதுவே காரணமானது.
மேலும் சுபாஷ் சந்திர போஸ் மீது நேரு காட்டிய வெறுப்பும் அவரை அதிருப்தி கொள்ள செய்திருந்தது. உச்சக்கட்டமாக தேச பிரிவினைக்கு காந்தி -நேருவின் ஆதரவு அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது, அதனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். “தேசத்தின் பிரிவினை மற்றும் கொந்தளிப்பிற்கு காரணம் நேருவின் ஆளுமைத்திறனின் தோல்வியே” என்று கூறினார்.
பஞ்சாப், பலூச்சிஸ்தான் மாகாணங்கள் பற்றி எரிந்துக்கொண்டிருந்தன. பஞ்சாபில் 58000 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், ஹிந்து மற்றும் சீக்கிய மக்களை காப்பாற்றும் பணியை இரவு பகலாக செய்துக்கொண்டிருந்தனர். வங்காளமும் கலவரத்தின் பிடியில் சிக்கியிருந்தது.