அந்த 15 நாட்கள் – சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள்-10 (Those 15 days)

3
VSK TN
    
 
     
அந்த பதினைந்து நாட்கள்
ஆக.10, 1947
– பிரசாந்த் பொலெ
=====
ஆகஸ்ட் 10. அது, ஞாயிற்றுக்கிழமையின் மந்தமான காலை வேளை.
அவுரங்கசீப் சாலை 1ம் எண்ணில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் பங்களாவில் பரபரப்பான நடவடிக்கைகள் தொடங்கின.
சர்தார் படேல், அதிகாலையிலேயே கண்விழிப்பது வழக்கம். அவரது நாள், சீக்கிரமாகவே தொடங்கிவிடும். பங்களாவில் வசிப்பவர்களும் இதற்கு பழகிவிட்டார்கள். இதனால், பங்களாவின் தாழ்வாரத்தில் ஜோத்பூர் மன்னரின் பளபளப்பான சொகுசு கார் நிறுத்தப்பட்டிருந்ததை, ஊழியர்கள் ஒரு சாதாரண விஷயமாகவே நினைத்தனர்.
ஜோத்பூர் மன்னர் ஹனுமந்த் சிங், சாதாரண நபர் அல்ல. ஜோத்பூர், ராஜபுதனத்தின் மிகப்பெரிய ராஜதானி. அதற்கு, 1250ம் ஆண்டிலிருந்தே தொடங்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. 25 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த மிகப்பெரிய ராஜதானி, 26 ஆயிரம் சதுரமைல் பரப்பளவுக்கு விரிந்து பரந்துள்ளது.
முகமது அலி ஜின்னா, இந்த ராஜதானியை பாகிஸ்தானுடன் இணைக்க, கடந்த சில நாட்களாகத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றிய எல்லா தகவல்களையும் சர்தார் படேலிடம் தெரிவித்திருந்தார் வி.கே.மேனன். இதனால்தான், ஜோத்பூர் மன்னர் ஹனுமந்த் சிங்கை தனது பங்களாவுக்கு வருமாறு அழைத்திருந்தார் சர்தார் படேல்.
பங்களாவின் பிரமாண்டமான முற்றத்திற்கு, ஹனுமந்த் சிங்குடன் வந்தார் சர்தார் படேல்.
சில நொடிகள் சம்பிரதாயப் பேச்சுகளுக்குப் பின், நேரடியாக விஷயத்துக்கு வந்தார் சர்தார் படேல் : ‘‘நீங்களும் மவுண்ட்பேட்டனும் சந்தித்துப் பேசியதாகக் கேள்விப்பட்டேன்… என்ன ஆலோசனை நடந்தது?’’.
ஹனுமந்த் சிங் : ‘‘ஆமாம், சர்தார் சாகிப். அந்த சந்திப்பு நடந்தது. ஆனால், எதுபற்றியும் குறிப்பிட்டு பேசவில்லை’’.
சர்தார் படேல் : ‘‘ஆனால், நீங்கள் ஜின்னாவையும் சந்தித்ததாகவும், உங்கள் ராஜதானியை சுதந்திரநாடாக வைத்திருக்க நீங்கள் முடிவு செய்திருப்பதாகவும் நான் கேள்விப்பட்டேனே?’’
ஹனுமந்த் சிங் (தயக்கத்துடன்) : ஆம்… நீங்கள் கேள்விப்பட்ட தகவல் சரியானதுதான்.
சர்தார் படேல் : ‘‘சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் அல்லவா? நீங்கள் அப்படி ஒரு முடிவைத் தீர்மானித்தபின், ஜோத்பூர் ராஜதானியில் ஏதாவது கலகம் நடந்தால், இந்திய அரசிடம் எந்த உதவியையும் நீங்கள் எதிர்பார்க்கமாட்டீர்கள்… அப்படித்தானே?’’
ஹனுமந்த் சிங் : ‘‘ஆனால், ஜின்னா சாகிப் எங்களுக்கு பல வசதிகளையும் வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளார்… மேலும், ஜோத்பூரையும் கராச்சியையும் ரயில் மூலம் இணைப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இது நடக்காவிட்டால், எங்கள் ராஜதானியின் வர்த்தகம் பாதிக்கப்படும்’’.
சர்தார் படேல் : ‘‘நாங்கள், ஜோத்பூரை கட்ச் பகுதியுடன் இணைக்கிறோம். உங்கள் ராஜதானியின் வர்த்தகத்தில் எந்த மாற்றமும் வராது… ஹனுமந்த்ஜி, ஒரு விஷயம்… உங்கள் தந்தை உமேஷ் சிங்ஜி, என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தவர். அவர், உங்கள் நலனில் அக்கறையோடு செயல்படும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். நீங்கள் சரியான வழியில் செயல்படாவிட்டால், உங்களை சரியாகச் செயல்பட வைப்பதற்காக, நான் உங்கள் தந்தையைப் போல் செயல்பட வேண்டியிருக்கும்’’.
ஹனுமந்த் சிங் : ‘‘சர்தார் படேல் சாகிப், நீங்கள் அப்படி செயல்பட வேண்டியிருக்காது. நான் நாளையே ஜோத்பூருக்கு சென்று, இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விடுகிறேன்’’.
***
கல்கத்தா சோடேபூர் ஆசிரமம்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால், கல்கத்தாவின் சோடேபூர் ஆசிரமத்தில், காந்திஜியின் காலை நேர பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு பெரும் கூட்டம் திரண்டிருந்தது.
வழக்கம்போல் பிரார்த்தனை நடத்தி, ராட்டையில் கதர் நுால் நுாற்ற காந்திஜி, உரையைத் தொடங்கத் தயாராக இருந்தார்.
அமர்ந்தபடியே மக்களுடன் கலந்துரையாடுவது காந்திஜியின் வழக்கம்.
அவர் பேசத் தொடங்கினார்:
‘‘நான், நவகாளிக்கு செல்வதாக இருந்தது. ஆனால், ஏற்கனவே திட்டமிட்ட அந்த பயணத்தை, கல்கத்தாவில் உள்ள முஸ்லிம் நண்பர்கள் சிலர் கேட்டுக்கொண்டதால், சில நாட்களுக்கு ஒத்திவைத்திருக்கிறேன். நான் நவகாளிக்கு சென்றால், அந்த வேளையில் கல்கத்தாவில் ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், என் வாழ்க்கையின் நோக்கம் தோல்வியடைந்துவிடும் என்று கருதுகிறேன்’’.
அவர், மென்மையான தொனியில் பேச்சைத் தொடர்ந்தார்:
‘‘கல்கத்தாவின் பல பகுதிகளுக்கும் முஸ்லிம் சகோதரர்கள் செல்ல முடியவில்லை, பல பகுதிகளுக்கும் ஹிந்துக்கள் செல்ல முடியவில்லை என்று கேள்விப்படுகிறன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த நகரில் உள்ளவர்களில் 23 சதவீதம் பேர்தான் முஸ்லிம்கள். இந்த 23 சதவீத மக்கள் என்ன தீங்கை செய்துவிட முடியும்? சில ஹிந்து போலீசார், காங்கிரஸ் ஆட்சி வரப்போகிறது என்று முஸ்லிம்களை மிரட்டி, தொல்லை செய்துவருவதாகவும் கேள்விப்படுகிறேன். போலீஸ் படையில் அப்படி ஒரு இனவாத உணர்வு வந்திருக்கிறது என்றால், இந்தியாவின் எதிர்காலம் கண்டிப்பாக இருண்டுபோய் விடும்…’’.
பிரார்த்தனைக்கு கூடியிருந்தவர்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள், காந்திஜியின் பேச்சை ரசிக்கவில்லை. வெறும் 23 சதவீத முஸ்லிம்கள், கடந்த ஆண்டில் ‘நேரடி நடவடிக்கை நாள்’ அனுசரித்து, பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்களை ரத்தம்சிந்த வைத்தனர் என்றால், அவர்கள் பெரும்பான்மையாக மாறினால் நமக்கு என்ன நடக்கும்? என்று, அவர்கள் பரஸ்பரம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
பிரார்த்தனை நிகழ்ச்சி முடிந்தபின், காந்திஜி வழக்கம் போல் சிறிய அளவிலான காலை உணவை எடுத்துக்கொண்டார். ஒரு கப் ஆட்டுப்பால், கொஞ்சம் உலர் பழங்கள் மற்றும் பேரீச்சை ஆகியவைதான் அவரது காலை உணவு.
அதன்பின், காங்கிரஸ் அரசின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக, ஒரு அறைக்குச் சென்றார்.
எல்லா அமைச்சர்களும் அந்த அறைக்கு செல்லத் தொடங்கினர். 15 நிமிடங்களில், எதிர்கால முதல்வரான பிரபுல்ல சந்திர கோஷும் தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.
வழக்கம் போல் மெதுவான உரையாடலால், இந்த அமைச்சர்களுக்கு காந்திஜி விளக்கத் தொடங்கினார். அவர், ‘‘சுராவர்டியின் ஆட்சிகாலத்தில், ஹிந்துக்களுக்கு எதிராக சில கொடூரங்கள் நடந்திருக்கலாம், சில முஸ்லிம் போலீசார் ஹிந்துக்களை மோசமாக நடத்தியிருக்கலாம். ஆனால் அதற்காக, நாமும் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டாக வேண்டும் என்று ஆகிவிடாது. கல்கத்தாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதை, நீங்கள் அனைவரும் உறுதிசெய்ய வேண்டும்’’.
**
டில்லியின் மந்திர் சாலையில் அமைந்துள்ள ஹிந்து மகாசபா பவனில், ‘அகில இந்திய ஹிந்து பார்லிமென்ட்’ நடந்து கொண்டிருந்தது.
இன்று, இரண்டாவது நாள் கூட்டம்.
அகண்ட ஹிந்துஸ்தான் பரிஷத்தில் இருந்து இந்த கூட்டத்துக்கு வந்திருந்த எல்லா பிரதிநிதிகளும், நாட்டின் பிரிவினையில் கடும் கோபத்துடன் இருந்தனர். ஹிந்துக்களும் சீக்கியர்களும் சொந்தப் பகுதிகளில் இருந்து வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்களின் மனதை வேதனையில் குமுற வைத்துக் கொண்டிருந்தது.
இன்று, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் நாள். பல பேச்சாளர்களும், தங்களது கருத்தை திட்டவட்டமாக வெளிப்படுத்தினர்.
வங்காளத்தில் இருந்து வந்திருந்த ஜஸ்டிஸ் நிர்மல் சந்திர சட்டர்ஜி மிகச்சிறப்பாகப் பேசினார். ‘‘ஜூன் 3ல் பிரிட்டிஷ் அரசு முன்வைத்த பிரிவினை பரிந்துரையை ஏற்றதின் மூலம், காங்கிரஸ் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டதோடு, லட்சக்கணக்கான இந்தியர்களின் முதுகில் குத்திவிட்டது. இந்தியப் பிரிவினைக்கு ஒப்புதல் அளிப்பது என்பது, முஸ்லிம் லீக்கின் அடாவடித்தனத்தின் முன் தோல்வியை காங்கிரஸ் ஒப்புக்கொள்வதற்கு சமம்’’ என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டின் இறுதி அமர்வில், வீர சாவர்க்கரும் பேசினார். மேதமை நிறைந்த அவரது பேச்சுத்திறனும் தர்க்க வாதங்களும், அனைத்துப் பிரதிநிதிகளையும் சிலிர்க்க வைத்தன.
வீர சாவர்க்கர் இப்படி முழங்கினார்:
‘‘இப்போது, அரசுகளுடன் கெஞ்சிக்கொண்டிருப்பதில் எந்த பலனும் இல்லை. இப்போது நாம் நேரடியாகச் செயல்பட வேண்டியது அவசியம். ஹிந்து கூட்டமைப்பின் அனைத்து ஹிந்துக்களும், பிளவுபடாத இந்தியாவுக்காக, அகண்ட பாரதத்துக்கானச் சேவையைத் தொடங்க வேண்டும்.
‘ரத்தம் சிந்தப்படுவதைத் தவிர்க்கவே, பாகிஸ்தானை உருவாக்குவதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்’ என்று நேரு வாதிடுவது கோழைத்தனமானது. அது ஒரு மோசடி. ஏனென்றால், பிரிவினை ஏற்கப்பட்ட பிறகும், ஹிந்துக்கள் ரத்தம் சிந்துவதை முஸ்லிம்கள் தடுக்கவில்லை என்பதோடு, நாட்டின் பல பகுதிகளையும் அவர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இதையெல்லாம் இப்போதே தடுக்காவிட்டால், நாட்டில் பதினான்கு பாகிஸ்தான்கள் உருவாகும் அபாயம் வந்துவிடும். எனவே, ரத்தம் சிந்துவதற்கு அஞ்சாமல், ‘அடிக்கு அடி’ என்று நாம் பதிலடி கொடுத்தாக வேண்டும்.
நமது நாட்டின் பிரிவினையை அழித்தொழிப்பதற்காக, கட்சி உணர்வுகளை ஓரம்கட்டுவதின் மூலம் அனைத்து ஹிந்துக்களும் வலிமையானவர்களாக மாறவேண்டும்’’.
இந்த கூட்டத்தில், ‘ஐக்கிய இந்தியாவை உருவாக்க, அனைத்து ஹிந்துக்களும் ஒருங்கிணைய வேண்டும். காவிக்கொடிதான் நாட்டின் கொடியாக இருக்க வேண்டும். தேசிய மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியா, இந்து தேசமாக அறிவிக்கப்பட வேண்டும். பொதுத்தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்’ என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
***
வானம் மேகமூட்டமாக இருந்தது. மிதமான மழையால், எல்லா இடங்களும் ஈரமாக இருந்தன.
கராச்சி நகரம்.
சிந்து மாகாண சட்டசபை அரங்கில், பாகிஸ்தான் அரசியல் சாசன சபையின் முதலாவது குறுகிய கூட்டம் தொடங்கியது.
இன்று, முக்கியமான அலுவல் எதுவும் இல்லை. முக்கியமான அலுவல் எதுவாக இருந்தாலும், நாளைதான் அது செயல்படுத்தப்படும். ஏனெனில், ‘குவாய்த் இ ஆஜம்’ (மாபெரும் தலைவர்) ஜின்னா, அரசியல் சாசனை சபையில் நாளை உரையாற்றப் போகிறார்.
சபை, சரியாக 11 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் உள்ள 72 உறுப்பினர்களில், 52 பேர் வந்திருந்தனர்.
இந்த கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த மேற்கு பஞ்சாபின் 2 சீக்கிய உறுப்பினர்கள் வரவில்லை.
முன்வரிசையில் அமர்ந்திருந்த பாரிஸ்டர் முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக அறிவிக்கப்பட்டார். அவர் எழுந்து மேடையை நோக்கி சென்ற போது, அனைத்து உறுப்பினர்களும் மேஜை தட்டியும், கரகோஷம் எழுப்பியும் அவரை மதிப்போடு வரவேற்றனர்.
பாகிஸ்தானின் பார்லிமென்ட் அலுவல் பதிவேட்டில், ஜின்னா முதலில் கையெழுத்திட்டார்.
பாகிஸ்தான் அரசியல் சாசன சபையின் தலைவர் பதவிக்கு, வங்காளத்தின் ஜோகேந்திரநாத் மண்டலை அவர் பரிந்துரைத்தார். அது, உடனடியாக ஏற்கப்பட்டது.
பிரிக்கப்படாத இந்தியாவின் இடைக்கால அரசில் சட்ட அமைச்சராக இருந்த, தலித் தலைவரான ஜோகேந்திரநாத் மண்டல், பாகிஸ்தானின் முதலாவது அரசியல் சாசன சபையின் முதல் தலைவராக மாறினார்.
ஜோகேந்திரநாத் மண்டல், காங்கிரசில் இருந்து 1940ல் வெளியேற்றப்பட்டபின் முஸ்லிம் லீக்கில் இணைந்தார். இவர், வங்காளத்தில் இருந்த சுராவர்டி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். 1946ல், அவமானகரமான நேரடி நடவடிக்கை தினத்தில், வங்காளத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்த கொடூர வன்முறையின் போது, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று தலித்களை ஜோகேந்திரநாத் மண்டல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். வங்காளம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டார். முஸ்லிம் லீக்கும் ஜின்னாவும் ஜோகேந்திரநாத் மண்டலின் இந்த உதவியை ‘அங்கீகரித்து பாராட்டி’, சபைத்தலைவர் பதவியை அவருக்குப் பரிசளித்தனர்.
சபையின் இன்றைய அலுவல், ஒரு மணிநேரம் பத்து நிமிடங்களில் முடிந்தது. வெளியில், பெரிய அளவில் கூட்டம் எதுவும் கூடியிருக்கவில்லை. மக்களிடமும் உற்சாக உணர்வு எதுவும் காணப்படவில்லை.
***
ஞாயிறு பிற்பகல்.
பழைய டில்லியின் முஸ்லிம் லீக் அலுவலகத்தின் வெளியே கூடியிருந்த முஸ்லிம்கள் பலரும் கோபத்துடன் இருந்தனர். தங்களுக்குள் வேதனைகளைப் பகிர்ந்தபடி இருந்தனர்.
டில்லியின் முஸ்லிம் வர்த்தகர்கள், ‘முஸ்லிம் லீக் தலைவர்கள் எங்களை நெருக்கடிகளில் சிக்க வைத்துவிட்டு, பாகிஸ்தானுக்கு ஓடிக்கொண்டிருக்கின்றனர்’ என்று குற்றம்சாட்டினர்.
தினமும் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த சிறப்பு ரயிலில், ஒவ்வொரு நாளும் முஸ்லிம் லீக்கின் சில தலைவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
இப்படிப்பட்ட தலைவர்கள் மீதான அதிருப்தி கொந்தளிப்பு, டார்யகஞ்ச் சந்தை மூடலை எதிர்ப்பதற்கு முஸ்லிம் வர்த்தகர்களைத் துாண்டியது
டில்லி முஸ்லிம்கள், தங்களுக்கு எந்த ஒரு தலைமையும் இல்லாதது போல் உணர்ந்தனர்.
***
டில்லி முனிசிபல் கமிட்டி, கூட்டங்கள் மற்றும் சிறிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக, ஒரு அழகிய அரங்கை உருவாக்கியது. மதிய உணவுக்குப்பின், இந்த அரங்கத்தை நேரு பார்வையிட்டார்.
**
மாலை வேளை.
யார்க் சாலை 17ம் எண்ணில் அமைந்திருந்த தனது பிரமாண்ட பங்களாவில் வைத்து, நேரு தனது செயலருக்கு ஒரு கடிதத்தை டிக்டேட் செய்து கொண்டிருந்தார்.
அன்புள்ள மவுன்ட்பேட்டன்,
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, அரசு கட்டடங்களில் ‘யூனியன் ஜாக்’ (பிரிட்டிஷ் தேசியக்கொடி) கொடியேற்றுவது குறித்து நீங்கள் ஆகஸ்ட் 9ம் தேதி கடிதம் எழுதியதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
உங்களின் ஆலோசனைப்படி, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல், மூவர்ணக்கொடியுடன் (இந்திய தேசியக்கொடி) யூனியன் ஜாக் கொடியையும் நாங்கள் ஏற்றுவோம் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
ஜவகர்லால் நேரு.
– இதற்கு என்ன அர்த்தம்? எந்த ஒரு கொடியை எதிர்த்து தியாகிகளும் சத்யாக்கிரகிகளும் துப்பாக்கித் தோட்டாக்களையும் எதிர்கொண்டார்களோ, சித்ரவதைகளை அனுபவித்தார்களோ, அதே யூனியன் ஜாக் கொடி, சுதந்திர தினத்திலும் 12 முக்கியமான தினங்களிலும் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு கட்டடங்களிலும் பறக்கப் போகிறது..!
***
பிற்பகலின் நிழல்கள் மெல்ல மெல்ல நீளமாகத் தொடங்கின.
லாகூரின் பருத்கானா பகுதியில், ஏராளமான முஸ்லிம்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் சுற்றிக்கொண்டிருந்தனர்.
பட்டப்பகலில் கூட, இந்தப் பகுதிக்குச் செல்ல ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அஞ்சுவார்கள்.
இது, மியோ குடும்பங்களின் ஆதிக்கம் உள்ள பகுதி.
இதுதான், லாகூரின் முதல் குடிமகனின் (மேயர்) பகுதி.
இந்துக்கள் மற்றும் சீக்கியப் பெண்களைக் கடத்தும் சதி நோக்கத்தில், இந்த பகுதியில் முஸ்லிம் குண்டர்கள் தங்குவதற்கு ஒரு வசிப்பிடத்தை ஏற்பாடு செய்து அவர்களுக்கு உணவுகளையும் வழங்கி வந்தனர்.
இன்று, ஆகஸ்ட் 14ம் தேதி குறித்த சதித்திட்ட கூட்டம், ‘மியான் கி ஹவேலி’யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், ஆக.14ம் தேதிக்குப் பின், லாகூரில் எந்த ஒரு ஹிந்துவும் சீக்கியரும் வசிக்க அனுமதிக்கக்கூடாது என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதை மையப்படுத்தியே, இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டது.
***
இப்பொழுது, பிரிக்கப்படாத இந்தியாவின் நான்கு நாட்களின் மாலைப்பொழுதுகளின் அழகைப் பார்க்கலாம்.
இது, துார கிழக்குப்பகுதிகளான அசாமிலும் கல்கத்தாவிலும் விளக்குகளையும் மின்விளக்குகளையும் ஏற்ற வேண்டிய வேளை; கிழக்கில் பெஷாவரிலும் மான்ட்கோமரியிலும் சூரிய வெளிச்சம் மங்கி, மாலை தொடங்குவதற்காகக் காத்திருக்கும் வேளை.
இதே பின்னணியில், ஆல்வார், ஹபூர், லியால்பூர், அமிர்தசரஸ் போன்ற நகரங்களில் பயங்கர வன்முறைகள் நடப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. பல இந்து வீடுகளிலும், எரிந்துகொண்டிருக்கும் துணிமூட்டைகள் வீசப்பட்டு வருகின்றன. பல இந்து குடியிருப்புகளிலும், வர்த்தகர்களின் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.
***
லாகூரின் ஜெயில் சாலையில் வசித்து வந்தார், வீரபத்ரன். தொழில்துறை துணை இயக்குனர் என்ற மதிப்புமிக்க பதவியில் நியமிக்கப்பட்டவர். உற்சாகமான மனிதர். அனைவருக்கும் உதவும் நல்ல மனிதர்.
இவர், நகரின் நிலையற்ற, அபாயகரமான சூழலால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் நகரை விட்டு வெளியேற முடிவு செய்தார். இதற்காக, இரண்டு வாகனங்களை ஏற்பாடு செய்தார்.
இவரது டிரைவர், ஒரு முஸ்லிம். அவர், வீரபத்ரனிடம் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் நம்பிக்கைக்குரிய நபர்.
வீட்டு பொருட்களை வாகனங்களில் ஏற்றுவதற்காக ஒரு கூலியாளை அழைத்துவர டிரைவரை வீரபத்ரன் அனுப்பினார்.
அவர் நம்பிக்கை வைத்த அந்த முஸ்லிம் டிரைவரோ, கூலியாட்கள் என்று கூறி, லாகூரின் மொஜாங் பகுதியில் இருந்து சில முஸ்லிம் குண்டர்களை அழைத்து வந்தார்.
அவர்கள், வீட்டு பொருட்களை மூட்டைகட்டி இரு வாகனங்களிலும் ஏற்றினர்.
அவர்களுக்கு பணம் கொடுக்க வீரபத்ரன் முற்பட்டபோது, அனைவரும் சேர்ந்து கடுமையாகத் தாக்கினர். பல கத்திகளால் சரமாரியாகக் குத்தினர்.
வீரபத்ரன் ரத்தவெள்ளத்தில் வீழ்ந்ததைப் பார்த்து அவரது மனைவி மயங்கி சாய்ந்தார். அவரைத் துாக்கி வாகனத்துக்குள் திணித்த குண்டர்கள், இரவின் இருட்டு வேளையில் இரு வாகனங்களுடன் தாங்கள் விரும்பிய இடத்துக்குப் பறந்துவிட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, வீரபத்ரனின் இரு பதின்பருவ பெண் குழந்தைகளும் இந்த சம்பவங்களைப் பார்த்ததும் பின்வாசல் வழியாக, இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிஷான் நகருக்குத் தப்பி ஓடியதால் காப்பாற்றப்பட்டனர்.
ஆகஸ்ட் 10ம் தேதி மாலையில், பஞ்சாப் தலைநகரில், மூத்த அரசு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த பயங்கரம், மக்கள்நெருக்கம் மிகுந்த பகுதியில் நடந்தாலும், எந்த எதிர்ப்பும் இல்லை.
***
ரத்தவெள்ளத்தில் வீரபத்ரன் துடிதுடித்துக் கொண்டிருந்த வேளையில், அவரது மனைவியும் உடைமைகளும் முஸ்லிம் குண்டர்களால் கொள்ளையடிக்கப்பட்டன…
அதே வேளையில், 800 மைல்களுக்கு அப்பால் கராச்சியில், பாகிஸ்தானின் வசீர் இ ஆஜமாக (பிரதமர்) மாற உள்ள லியாகத் அலியின் அறிக்கை பத்திரிகை அலுவலகங்களுக்கு சென்று சேர்ந்தது. அந்த அறிக்கையில், ‘பாகிஸ்தானில் ஹிந்துக்கள் அல்லாதோருக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்பதோடு, சட்டப்படி முழு உரிமைகளும் வழங்கப்படும் என்பதை நாம் உறுதிசெய்கிறோம். இங்குள்ள ஹிந்துக்கள், முழு பாதுகாப்புடன் உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஹிந்துஸ்தானில் உள்ள பெரும்பான்மையான ஹிந்துக்கள் இதுபோல் சிந்திக்கவில்லை’ என்று லியாகத் அலி குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அதில் லியாகத் அலி இப்படி கூறியிருந்தார் :
‘இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், குறிப்பாக கிழக்கு பஞ்சாப், மேற்கு வங்கம், ஐக்கிய மாகாணங்களில் இருந்து வந்துகொண்டிருக்கும் செய்திகளில், பெரும்பான்மை ஹிந்துக்கள் நமது முஸ்லிம் சகோதரர்களை சித்ரவதை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவரே, சிந்து மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, நமக்கு எதிராக இங்குள்ள ஹிந்துக்களைத் துாண்டி விட்டிருக்கிறார்.
சிந்து மாகாண ஹிந்துக்கள், சட்டத்தைத் தங்களது கைகளில் எடுத்துக் கொள்வார்கள் என்றும், பீகாரில் நடந்த சம்பவங்கள் சிந்துவிலும் தொடரும் என்றும் கிருபளானி மிரட்டல் விடுத்திருப்பதாக, பல்வேறு செய்தி அறிக்கைகளில் இருந்து எனக்குத் தெரியவந்திருக்கிறது!’’
***
லாகூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்.
சிறிய இடமாக இருந்தாலும், ஏராளமான தன்னார்வலர்கள் மற்றும் ஸ்வயம்சேவகர்களால் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஆகஸ்ட் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, இந்த அலுவலகத்தில் பெரும் பரபரப்பு இருந்தது.
தன்னார்வலர்களின் முகங்கள், அவர்கள் மிகுந்த அழுத்தத்துடன் இருக்கின்றனர் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தின.
அனைவரின் மனதிலும், லாகூரில் உள்ள ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் இந்தியாவின் பஞ்சாப்புக்கு எப்படி பத்திரமாக அனுப்பி வைக்கலாம் என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.
அலுவலகத்தின் வெளிப்பகுதியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டிருந்தது. அருகில் உள்ள ஒரு வீட்டின் விளக்கின் மஞ்சள் ஒளியால், சிலையின் முகப்பகுதி ஒளிர்ந்து கொண்டிருந்தது.
இதுதான், நாட்டில் நிறுவப்பட்ட டாக்டர் ஹெட்கோவரின் முதல் சிலை.
இந்த சிலை, கடந்த காலங்களில் ஹிந்துக்களைப் பாதுகாக்க பஞ்சாப் மாகாண சுயம்சேவக்குகள் ஈடிணையற்ற வீரம், பொறுமை, விடாமுயற்சியால் வெளிப்படுத்திய முன்னுதாரண சேவையின் சாட்சி!
***

3 thoughts on “அந்த 15 நாட்கள் – சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள்-10 (Those 15 days)

  1. It is more than 70 years since these gruesome incidents happened .When reading our blood boils .Was human kindness totally dead ?What is the use of religion if it fails to inculcate kindness to fellow human beings ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Those Fifteen Days - National Scenario During Independence -13

Tue Aug 13 , 2019
VSK TN      Tweet     Those Fifteen days 13th August 1947 – Prashant Pole Mumbai, Juhu Airport Eight to ten women are at Tata Air Services counters. All are disciplines and their faces reflect utmost confidence. All of them are volunteers of “Rashtra Sevika Samiti”. Pramukh Sanchalika, Laxmibai Kelkar also known as “Mausiji”, […]