ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் செயற்குழு கர்நாடக மாநிலத்தின் தார்வாட் நகரில் அக்டோபர் 30 நிறைவடைந்தது. செயற்குழுவில் ஐயாறப்பட்ட தீர்மானங்களை பற்றி பத்திரிகையாளர்- ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் சர்கார்யவாஹ் (பொதுச் செயலர்) எடுத்துரைத்தார்.
அமிர்தோத்சவ் என்னும் பவள விழா:
நம் நாடு சுதந்திரத்தின் 75வது ஆண்டினை அமிர்தோத்சவ் எனக் கொண்டாடி வருகிறது. சங்கமும் அதன் துணை அமைப்புகளும் அவ்வாறே பல வித நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அவற்றின் வாயிலாக சுதந்திரத்திற்காக அனைத்து வழிகளிலும் போராடிய தியாகிகள் பலர் பல் வேறு அதிகம் பிரபலம் ஆகாமல் போற்றப்படாமல் போயிருக்கிறார்கள். ஒரு மாநிலத்தில் அறியப்பட்டவர்கள் மற்ற மாநில மக்களுக்கு அறிமுகமில்லாதவர்கள். உதாரணமாக, தமிழ்நாட்டின் வேலு நாச்சியார், கர்நாடகாவின் அபக்கா, நாகாலந்தின் ராணி கைதின்லியு போன்றவர்களை தேசிய அளவில் அவர்களின் புகழை ஒங்கச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப் பட்டு செயல் திட்டங்கள் நிறைவேறி வருகின்றன.
சுதேசி இயக்கம்
நம் நாட்டின் விடுதலை இயக்கம் உலகிலேயே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். நம் மக்களின் சொந்த முயற்சியில், மிக நீண்ட காலம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட்டதாகும். இது அரசியல் விடுதலைக்கான ஒன்று மட்டுமல்ல. நம் நாட்டின் மொழி- பண்பாடு- வாழ்வியல் முறைமைகள் என்று அனைத்தயும் தழுவிய சுதேசி இயக்கமுமாகும். சுவாமி விவேகானந்தர் போன்ற பற்பல மகான்கள் நம்மவர்களின் ஆன்ம பலத்தை விழிப்படையச் செய்து பாரதம் அனைத்து துறைகளிலும் மேம்பட வேண்டும் என்று தத்தம் இயக்கங்கள் மூலம் பல வித வடிவங்களில் செயலாற்றினர். நம்முடைய இன்றைய இளைய தலைமுறையினர் அத்தகைய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு எல்லோருக்கும் ஏற்றம் என்பதனை நடைமுறை படுத்திக் காட்ட வேண்டும்.
குரு தேஜ் பகதூர் ஜியின் 400வது பிறந்தநாள்
ஹிந்து தர்மத்தின் வாட்கரமாய் விளங்கிய சீக்கிய பிரிவின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூர் ஜியின் 400வது பிறந்தநாளை பல ஆன்மீக- கலாச்சார அமைப்புகளுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்த சங்கம் முடிவு செய்துள்ளது. நம் ஆன்மீக- கலாச்சாரத்த்தைப் பாதுகாக்க குரு தேஜ் பகதூர் தன் உயிரைத் தியாகம் செய்தார். அவரது வாழ்க்கையை நினைவில் இருத்தினால் இன்றைய தலைமுறைக்கு தம் வாழ்விலும் செயற்கரிய சாதனைகளை நிகழ்த்த உத்வேகம் பெறலாம்.
புதிய சவால்கள்- புதிய தீர்வுகள்
செயற்குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டிலும் , பிரதிநிதிகள் சபைக்கு முன்பும் (தோராயமாக பிப்ரவரி- மார்ச் மாதத்தில் ), தசராவுக்கும் தீபாவளிகும் இடைப்பட்ட காலத்திலும் என்று இரு முறை நடைபெறும். கொரானா காரணமாக சென்ற ஆண்டு இணைய வாயிலாக சந்தித்த வேளையில், இந்த ஆண்டு வழக்கம் போல மூன்று நாள் கூட்டம் நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சங்கத்தின் தன்னார்வலர்கள் லட்சக்கணக்கில் சேவைப் பணிகளை மேற்கொண்டனர். கொரோனா காரணமாக, சங்கப் பணிகளின் விரிவாக்கமும் தடைபட்டுள்ளது, கிளைகளை சரியாக நிறுவ முடியவில்லை, நாடு முழுவதும் இயக்கப் பணிக்கான சுற்றுப் பயணங்களும் தடைபட்டன. ஒவ்வொரு ஊரிலும் தினசரி கூடும் கிளையின் அன்றாட நடைமுறைகளும் பாதிக்கப்பட்டன. ஆயினும், சுயம்சேவகர்கள் சமுதாய சேவை வழியில் பல்லாயிரக்கணக்கான புதிய தன்னார்வலர்களுடன் இணைந்து மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றினர்.
மூன்றாவது அலை வந்தாலும்
கொரானா வின் மூன்றாவது அலையும் வரலாம் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். அப்படி ஒரு நிலை வர வேண்டாம் இறைவனைப் பிரார்த்திக்கும் வேளையிலும், அத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கான பாதிப்புகளை மட்டுப் படுத்தவும் மக்கள் மீண்டு எழுவதற்கு தன்னார்வலர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நூற்றாண்டை நோக்கி
34 ஆயிரம் இடங்களில் தினசரி கிளை, 12780 இடங்களில் வாராந்திர கூட்டம், 7900 இடங்களில் மாதாந்திர சந்திப்புகள் என்று 55 ஆயிரம் இடங்களில் சங்கத்தின் நேரடிப் பணி நடை பெறுகின்றன, 2025-ம் ஆண்டு சங்கம் துவங்கி த்தின் 100 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு முன்னேற ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அமைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இந்தக் கண்ணோட்டத்தில் நமது இயக்கப் பணி வட்டார நிலை வரை சென்றடைய வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம். தற்போது, நாட்டில் உள்ள 6483 வட்டாரங்களில், 5683 இடங்களில் நம் பணிகள் நடைபெறுகின்றன . அதேபோலத் தான் 910 மாவட்டங்களில் பணி 900 மாவட்டங்களில் கிளைகள் உள்ளன. 560 மாவட்டங்களில் மாவட்டத் தலைநகரத்தில் 5 கிளைகள் உள்ளன, 84 மாவட்டங்களில் அனைத்து வட்டாரங்களிலும் கிளை உள்ளது. எதிர் வரும் மூன்று ஆண்டுகளில் சங்கப் பணிகள் (ஆண்டு 2024) அனைத்து வட்டாரங்களையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். முழுநேர ஊழியர்களுக்கான திட்டமும் உள்ளது. 2022 முதல் 2025 வரை, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சங்கப் பணிக்காக தங்கள் பங்களிப்பை நல்க முன்வரும் தன்னார்வலர்களை களப்பணிக்கு ஏற்ற பயிற்சி அளிக்கப்படுவார்கள். இவற்றைப் பற்றிய விவரங்கள் 2022 மார்ச் மாதத்தில் வெளிவரும். இவற்றின் வாயிலாக, 2024 ஆண்டு நாட்டில் 105938 இடங்களில் குரு பூஜை நிகழ்த்தப்பட வேண்டும் என்பது எமது இலட்சியம்.
கொரானாவின் விளைவுகளினின்று மீள
கொரானாவால் கல்வி, தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்புகள் என்று பல முனை பாதிப்புகளைக் கண்டு வருகிறோம். பொது மக்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்த க்காக சங்க சுயம்சேவகர்கள் பணியைத் தொடங்கியுள்ளனர். தன்னார்வலர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குதல், திறன் பயிற்சி, உள்ளூர் மக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துதல், வங்கிக் கடன் பெறுவதற்கான வழி முறைகளை ஆலோசனைகளை வழங்குதல் போன்ற பணிகளில் உதவுகின்றனர். இனிவரும் காலங்களில் இத்தகைய விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த முயற்சிப்போம்.
அதன் பின்னர், பத்திரிகை நிருபர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடை அளித்தார்.
மக்கள்தொகைக் கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு நாட்டிலும் அதன் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பொருந்துவதாக, இயற்கை வளங்களின் இருப்பைக் கருத்தில் கொண்டு மக்கள்தொகைக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். நடைமுறைப் படுத்தப் பட வேண்டும். முன்னர் சங்கம் இது தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தான் சர்சங்சாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி பொது மக்களுக்கு நினைவூட்டும் விதத்தில் பல நிகழ்ச்சிகளிலும் உரையாற்றுகிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் வாழ்வியலின் அங்கமாகி விட வேண்டும். தீபாவளியன்று பட்டாசுக்கு தடை விதித்தால் மட்டுமே பிரச்னை தீர்ந்து விடும் என்பது சரியான அணுகு முறை ஆகாது.. உலகின் பல நாடுகளில் பட்டாசு பயன்படுத்தப்படுகிறது. எனவே, எந்த வகையான பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த பிரச்சினையின் அனைத்து பரிமாணங்களையும் நாம் ஆராய வேண்டும். அதிரடி முடிவுகள் பயன் தர மாட்டா. முழுமையானதும் உகந்த முறையிலும் விவாதிக்க வேண்டும். தொழில் வளர்ச்சியும் வேலை வாய்ப்பு பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அழுத்தம் கொடுத்து அச்சுறுத்தி ஆசை காட்டியோ எந்த வகையிலாவது மதம் மாற்றி தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ள நினைக்கும் போக்குகளை சங்கம் கண்டிக்கிறது; ஏற்காது. ஹிமாச்சல பிரதேசத்தில், அருணாச்சலத்தில் காங்கிரஸ் அரசு மதமாற்றத் தடை மசோதாவை நிறைவேற்றியது, நாங்கள் ஆதரித்தோம். அதே போல, மத்திய அரசினால் தேசிய அளவில் மதமாற்றத்தை தடுக்க சட்டம் இயற்றப்பட்டால் அதை வரவேற்போம் என்று சர்கார்யாவாஹ் கூறினார்.