ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) வட தமிழகம் பத்திரிக்கை செய்தி

VSK TN
    
 
     

17-03-2022
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்)
வட தமிழகம்

பத்திரிக்கை செய்தி
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வருடாந்திர அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) கூட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 2022 மார்ச் 11, 12, 13 தேதிகளில் நடைபெற்றது. தேசத்திற்காகவும், தர்மத்திற்காகவும் பணியாற்றி சமீபத்தில் இறைவனடி சேர்ந்த 110 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் பத்மபூஷண் டாக்டர் நாகசாமி, திருக்கோவிலூர் ஜீயர் சுவாமி ஸ்ரீனிவாஸ ராமானுஜாச்சாரியார், எழுத்தாளர் ம.வே.பசுபதி, திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷண தபோவனத்தின் தலைவர் ஸ்வாமி சதானந்த மஹராஜ், வித்யாபாரதி தலைவர் டி.சக்ரவர்த்தி, சென்னை மாநகர ஆர்.எஸ்.எஸ் முன்னாள் செயலாளர் பி.கோவிந்தராஜ் ஆகிய ஆறு பெரியோர் இடம்பெற்றனர்.

சங்க வேலை விரிவாக்கம்
1925ம் ஆண்டு சங்கம் தொடங்கியதன் நுாற்றாண்டு என்பதால் அந்த நேரத்தில் சங்க வேலையானது நாட்டின் எல்லா பகுதியிலும் கொண்டு செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் கடந்த ஆண்டில் சங்க வேலை, தற்போதைய நிலை ஆகியவை விவாதிக்கப்பட்டது.
அதன்படி நாடு முழுவதும் இப்போது 34,559 ஊர்களில் சங்க வேலையானது தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஷாகா (தினசரி கூடுதல்) 60, 929; வாரக் கூடுதல் 20,681; மாதக் கூடுதல் 7,923. தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச் செயலாளர் திரு.தத்தாத்ரேய ஹொசலபலே அவர்கள் வெளியிட்ட அறிக்கை

சுதந்திரத்தின் 75வது ஆண்டு அர்த்தமுள்ளதாக
தேவை முழு சுயத்தன்மை
சுதந்திரத்தின் அம்ருத மகோத்சவத்தை (பவள விழா ஆண்டு) பாரதம் இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது. தேசம் தன் சுயத்தன்மையை மீட்க நடைபெற்ற பல நூற்றாண்டு கால போராட்டத்தையும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் சிறப்பான முறையில் நினைவுகூர்வதற்கான கொண்டாட்டம் இது. வெறும் அரசியல் கிளர்ச்சியாக அல்லாமல் தேசிய வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தொட்ட, சமுதாயத்தின் எல்லா தரத்தினரும் பங்களித்த சமூக – கலாசார இயக்கமாக திகழ்ந்ததுதான் பாரத சுதந்திர போராட்டத்தின் மகத்தான அம்சமாகும். நமது அடையாளத்தின், அதாவது நமது வாழ்வின் அடிப்படை அம்சத்தை, அதாவது தேசிய சுயத்தன்மையை மேலோங்கச் செய்யும் முயற்சியின் தொடர்ச்சி என்றே தேச விடுதலை இயக்கத்தைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
காலனிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு வணிக ரீதியான நோக்கங்களோடு, பாரதத்தை அரசியல் ரீதியாகவும் ஏகாதிபத்திய முறையிலும் மதரீதியாகவும் அடிமைப்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருந்தது. பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் பாரத மக்களிடம் அடிப்படையிலேயே இருந்த ஒருமைப்பாட்டை சீர்குலைத்து நமது தாய்நாட்டின் மீதான உணர்வுபூர்வமான, ஆன்மிக ரீதியிலான தொடர்பை பலவீனமடையச் செய்தனர். நமது உள்நாட்டு பொருளாதார – அரசியல் முறைகள், வழிபாட்டு நம்பிக்கைகள், கல்விமுறைகள் ஆகியவற்றைத் தாக்கி சீர்குலைக்க அவர்கள் முயன்றனர்.
ஒட்டுமொத்த பாரதத்தையும் உள்ளடக்கியதாக இந்த தேசிய இயக்கம் இருந்தது. ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, ஸ்வாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர் போன்ற ஆன்மிகத் தலைவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கான எதிர்ப்பை தக்கவைக்க பாடுபட்டனர். கலை, கலாசாரம், இலக்கியம், அறிவியல் என தேசிய வாழ்க்கையின் அனைத்து பிரிவினரிடத்திலும் பெண்கள், பழங்குடியின மக்கள் மத்தியிலும் விடுதலை உணர்வை இந்த இயக்கம் தட்டியெழுப்பியது. லாலா லஜ்பத்ராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பால், மகாத்மா காந்தி, வீர சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சந்திரசேகர ஆசாத், பகத்சிங், வேலு நாச்சியார், ராணி கைடினில்யு

போன்ற எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் தன்மான உணர்வையும் தேசியத்தன்மையையும் மேலும் பலப்படுத்தினார்கள். தீவிர தேசபக்தரான டாக்டர் ஹெட்கேவாரின் தலைமையில் ஸ்வயம்சேவகர்களும் விடுதலைப் போரில் தங்கள் பங்களிப்பை செய்தார்கள்.
ஒரு சில காரணங்களால் விடுதலை இயக்கத்தின்போது சுயத்தன்மை படிப்படியாக பலவீனப்பட்டதால் தேசப் பிரிவினையின் கொடூரத்தை இந்த நாடு சந்திக்க நேர்ந்தது. விடுதலைக்குப் பிறகு சுயத்தன்மையை தேசிய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படுத்தும் வாய்ப்பை நம்மால் எந்த அளவுக்கு செயல்படுத்த முடிந்திருக்கிறது என்பதை கணிக்க இதுவே சரியான தருணம்.
பாரத சமுதாயத்தை ஒரே நாடாக நிலைநிறுத்தி எதிர்கால சோகங்களிலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும் என்றால் சுயத்தன்மையுடன் வாழும் கனவை நனவாக்குவது அவசியம். இந்த வழியில் தொடர்ந்து அர்ப்பணித்துக் கொள்ள சுதந்திரத்தின் 75வது ஆண்டு நமக்கு நல்ல வாய்ப்பு.
தடைகள் பல இருந்தபோதிலும் தொடர்ந்து பல்வேறு துறைகளில் பாரதம் வளர்ச்சி அடைவது திருப்தியளிக்கிறது. ஆனால் பாரதத்தை முழு சுயத்தன்மையுடன் திகழச் செய்யும் இலக்கை நாம் இன்னும் எட்டவில்லை என்பதே உண்மை. எனினும் தொலைநோக்குப் பார்வையுடன், சுயத்தன்மையுடைய பாரதத்தைப் படைக்க நாடு சரியான திசை நோக்கி ஆயத்தமாகி வருகிறது. இந்த மாபெரும் முயற்சியில் மாணவர்களையும் இளைஞர்களையும் ஈடுபடுத்துவது அவசியமாகும். பாரதிய கண்ணோட்டத்தை மையமாகக் கொண்ட கல்வித் திட்டத்தை திறம்பட அமல்படுத்துவதன் மூலம் அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கவேண்டும். இதன்மூலமே பாரதத்தை உலகின் குருவாக உயர்த்த முடியும்.
நமது வேர்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பை அளிக்கக்கூடிய, நமது சுயத்தன்மையை மீட்டெடுத்து தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்திட சுதந்திரத்தின் அம்ருத மகோத்சவ நேரத்தில் நாம் உறுதி ஏற்கவேண்டும்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
சுயசார்பு பாரதம் உருவாக வேலைவாய்ப்பு அதிகரிப்பு அவசியம்

இயற்கை வளம், மனித ஆற்றல், தொழில் முனைவுத் திறமை இவையெல்லாம் நிறைந்துள்ள நம் நாடு, விவசாயம், உற்பத்தி, சேவைத் துறைகளில், எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை முற்றிலுமாக உயர்த்தும் வல்லமை கொண்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்படுத்திய வேலையிழைப்பு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையில், முளைத்த புதிய வாய்ப்புகளால் சில பிரிவினர் ஆதாயம் பெற்றதையும் பார்த்தோம். அதுபோன்ற சாத்தியங்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு சவாலை எதிர்கொள்ள முழு சமுதாயமும் முனைய வேண்டும் என அகில பாரத பிரதிநிதி சபை விரும்புகிறது.
மனித உழைப்பு, அதிகம் பேருக்கு வேலை, சிநேகிதமான சூழல், பரவலாக்கம், பலனை சீராகப் பங்கிடுவது என்று பொருளாதாரத்தில் பாரதிய பாணி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பிரதிநிதி சபை கருதுகிறது. ஊரக பொருளாதாரம், சிறு குறு தொழில்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள் இவை பாரதிய பாணியால் பலன் அடையும். ஊரக மக்களின் பணித் தகுதி, முறைசாரா துறைகளில் வேலைவாய்ப்பு, மகளிருக்கு வேலைவாய்ப்பு, ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் மகளிர் பங்கேற்பு இவற்றுக்கு அதிக ஊக்கம் தர வேண்டும். நமது சமுதாயத்தின் தேவைக்குப் பொருத்தமான புதிய தொழில் நுட்பங்களையும் மென்திறன்களையும் புகுத்திட முயற்சிப்பது முக்கியம்.
இது போல வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெற்றிகரமான முன்மாதிரிகள் பல நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த முன்மாதிரிகள் உள்ளூரின் சிறப்பம்சம், திறமை, தேவை இவற்றை கணக்கில் கொள்கின்றன. பல இடங்களில் தொழில் முனைவோர், சிறு கடன் அளிக்கும் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் , தன்னார்வ அமைப்புகள், பொருட்களின் மதிப்பு கூட்டுவது , கூட்டுறவு துறை , உள்ளூர் உற்பத்திப் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவது, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களில் பல முயற்சிகளை மேற் கொண்டுள்ளனர். இத்தகைய முன்முயற்சிகளின் விளைவாக கைவினைத் தொழில், உணவு பதப்படுத்துதல் தொழில், வீட்டு தயாரிப்பு பொருட்கள், குடும்ப நிறுவனங்கள்

ஊக்கம் பெற்றுள்ளன. அவர்களின் அனுபவத்தை கேட்டறிந்து, தேவையான மற்ற பகுதிகளிலும் அதை நடைமுறைப்படுத்த முழுமனதுடன் முயற்சி செய்ய வேண்டும்.
சில கல்வி / தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளன. எளிய, அடித்தட்டு மக்களை உள்ளடக்கிய சமுதாயத்தின் பெரும்பகுதிக்கு இது போன்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளவர்களை பிரதிநிதி சபை பாராட்டுகிறது. சமுதாயத்தில் ’சுதேசி, சுயசார்பு’ குறித்து விழிப்புணர்வூட்டுவதால் இந்த முன்முயற்சிகள் உரிய உத்வேகம் பெறும்.
நமது உற்பத்தித் துறை அதிக வேலை வாய்ப்பு சாத்தியம் கொண்டது.அதை ஊக்குவிப்பது அவசியம். இதனால் இறக்குமதியை நம்பியிருப்பதும் குறையும். வேலை தேடும் மனப்பான்மையிலிருந்து மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் விடுபட, சுயதொழில் நடத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்க வேண்டும். அதே போன்று பெண்கள், கிராம மக்கள், தொலைதூர பழங்குடி மக்கள் மத்தியிலும் சுயதொழில் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். கல்வியாளர்கள், தொழில் துறையினர், சமுதாய பெரியவர்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் இதில் திறன் மிக்க பங்களிப்பு வழங்க வேண்டும். அரசாங்கரீதியிலான முயற்சி இவற்றுக்கு இசைவாக அமைய வேண்டும்.
வேகமாக மாறி வரும் சர்வதேச பொருளாதார/ தொழில்நுட்ப சூழலை எதிர்கொள்ள, அதற்கேற்ற வழிகளை சமுதாயம் கண்டறிய வேண்டும் என்று பிரதிநிதி சபை கருதுகிறது. வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பு, தொழில்முனைவு வாய்ப்பு, ஏற்றுமதி சாத்தியங்கள் இவை குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும். வேலைக்கு முன்பும், வேலையின் போதும் பணிப் பயிற்சியளிப்பது, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உத்வேகம் அளிப்பது போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நம் நாட்டை மையப்படுத்திய வேலை வாய்ப்புகளை உருவாக்குமாறு மக்களை பிரதிநிதி சபை கேட்டுக் கொள்கிறது; அதுதான் பொருளாதரத்தை பலப்படுத்தும்; அனைவருக்குமான நிலைத்த வளர்ச்சியை சாத்தியமாக்கும். சமுதாயத்தில் அனைவரும் என்றும் அழியாத நமது பண்புகளை மையப்படுத்தி ஆரோக்கியமான பணிக் கலாச்சாரம் நிறுவிட வேண்டும் அதன் வாயிலாக அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உலக பொருளாதாரத்தில் தனக்கே உரிய உன்னத இடத்தை பாரதம் நிலைநிறுத்திக் கொள்ள வழி வகை செய்ய வேண்டும் என்று அகில பாரதிய பிரதிநிதி சபை வலியுறுத்துகிறது.

——–

Next Post

பங்குனி உத்திரம்

Thu Mar 17 , 2022
VSK TN      Tweet    தமிழ்நாட்டில் பங்குனி உத்திரம் – வானுலக திருமண கொண்டாட்டம் பங்குனி உத்திரம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான பங்குனியில் உத்திரம் மற்றும் பௌர்ணமியுடன் இணைந்த திருவிழாவாகும். இந்த மாதத்தில் மட்டும் உத்திரம் நட்சத்திரத்துடன் பௌர்ணமி வருகிறது. இந்த விழாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த நாளில் பல வான் திருமணங்கள் நடந்ததாக அறியப்படுகிறது, இது இன்றும் தமிழ்நாட்டின் பல கோவில்களில் கொண்டாடப்பட்டு மீண்டும் மீண்டும் நடத்தப்படுகிறது.முருகப்பெருமான் […]