VSK TN
சிவனடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களில் காலத்தால் மிகவும் முற்பட்டவர் காரைக்காலம்மையார். இன்று (ஏப்ரல் 9) காரைக்கால் அம்மையார் குருபூசை என்று நாட்காட்டி தெரிவிக்கிறது.
எத்தனையோ நூற்றாண்டுகள் முன்பு சோழ நாட்டில் (இன்று புதுச்சேரி மாநிலத்தின் பகுதியான காரைக்காலில்) வணிகர் மகளாகப் பிறந்தாள் புனிதவதி. சிவ பக்தியில் திளைத்தவாறு வளர்ந்து வந்தாள். திருமணம் ஆயிற்று. ஒரு முறை வணிகரான கணவர் கொடுத்து வைத்திருந்த இரண்டு மாம்பழங்களில் ஒன்றை சிவனடியாராக வந்த சிவபெருமானுக்கு படைத்துவிட்டாள் புனிதவதி. மீதி இருந்த மாங்கனியை சுவைத்த கணவன் இரண்டாவது மாம்பழத்தை கேட்டான். சிவபெருமானையே வேண்டிப் பெற்று கணவனுக்கு மாம்பழம் படைத்தாள். இதைப் பார்த்த கணவன் இவள் தெய்வப்பிறவி என்று இவளை விட்டு விலகினான். பாண்டிய நாடு சென்று குலசேகரன்பட்டினத்தில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தான். அப்போது பிறந்த குழந்தைக்கு புனிதவதி என்று பெயர் சூட்டினான். குலசேகரன்பட்டினம் சென்ற புனிதவதி ஊருக்கு வெளியில் ஒரு மண்டபத்தில் அமர்ந்துகொண்டு, விலகிய கணவனை வரச் செய்தாள். கணவனும் மனைவியும் குழந்தையும் வந்தார்கள். ஊர் மக்களும் திரண்டு வந்து புனிதவதியை நிலம் படிய விழுந்து வணங்கினார்கள். அதன்பின் தனக்கு பேய் உருவம் தருமாறு சிவபெருமானை வேண்டிப் பெற்றாள் புனிதவதி. கயிலாயம் சென்று சிவதரிசனம் பெற எலும்புக்கூடாக திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்டாள். “அம்மையே வருக!” என்று சிவபெருமானே இவரை அழைத்து அருள்புரிந்தார். காரைக்கால் அம்மையார் விரும்பியபடி திருவாலங்காடு என்னும் திருத்தலத்தில் சிவபெருமானின் நடனத் திருக்கோலத்தை தரிசித்தபடி இருக்க அருளினார்.
இது புராணம். பெரிய சிவாலயம் தோறும் அறுபத்துமூவரில் ஒருவராக பூசிக்கப்படுகிறார் காரைக்கால் அம்மையார்.
ஆனால் இரண்டாவது மாங்கனி கேட்டபோது திகைத்து சிவனையே வேண்டி மாங்கனி பெற்ற தங்கள் ஊர் பெண் புனிதவதியை காரைக்கால் மக்கள் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் மறந்துவிடவில்லை. ஆனி மாதம் பவுர்ணமி நாளன்று காரைக்காலில் சிவபெருமான் திருவீதி உலா வரும்போது ஊர்மக்கள் பக்தர் கூட்டத்தின் மீது மாங்கனிகளை வாரி இறைத்து அந்த சம்பவத்தை சமுதாயத்தின் உள்ளத்தில் ஆழப் பதியச் செய்து வருகிறார்கள். ’மாங்கனித் திருவிழா’ என்று அந்த நிகழ்வுக்கு பெயர். 2020 ஜூலை 4 அன்று ஆனி மாத பவுர்ணமி வருகிறது.
அது இருக்கட்டும். உன்னதமான தெய்வீக சம்பவம் எதையும் ஊரார் மறந்துவிடக்கூடாது என்பதற்காக திருவிழாவாக அல்லது சம்பிரதாயமாக அல்லது சடங்காக ஹிந்துக்கள் கட்டிக் காப்பாற்றி வருகிற உதாரணங்கள் கணக்கற்றவை. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கோ ஓர் வனத்தின் நடுவே திரௌபதியின் அட்சய பாத்திரத்தில் ஒரு பருக்கை இருந்து, கண்ணபிரான் அருளால் பாண்டவர்களை துர்வாசரின் சாபத்திலிருந்து காப்பாற்றிய சம்பவத்தை சராசரி ஹிந்து இல்லத்தரசி இன்றும் மறக்காமல் கடைபிடித்து வருவதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்? வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பிறகும் இரவு சில பருக்கைகளை பாத்திரத்தில் விட்டுவைப்பது அந்த சம்பவத்தை நினைவூட்டும் சம்பிரதாயம்.
நீண்ட நெடிய கால நடையில், கடவுள் அருள் உள்பட உன்னதமான தன்மைகளை அன்று போல் இன்றும் பசுமையாக கட்டிக் காப்பாற்றி வரும் ஹிந்துக்களின் மரபு சார்ந்த மதியூகம் தான் ஹிந்துத்துவம்.
திருவிழா தானே, சடங்கு தானே, சம்பிரதாயம் தானே என்று யாரும் ஹிந்துத்துவத்தை லேசாக எடுத்துக் கொள்வதில்லை. கண்ணன் ஆண்ட துவாரகையை ஆழ்கடல் தொல்லியல் அடையாளம் காட்டியது; ராமன் கட்டுவித்த சேதுவை செயற்கைக்கோள் அறிவியல் சுட்டிக்காட்டியது. இவையெல்லாம் வீண்போகவில்லை. அறிவியல் உரைகல்லில் ஹிந்துத்துவம் பத்தரை மாற்றுத் தங்கமாக இன்றைய தலைமுறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாருங்களேன், கொரோனா தொற்றுக்கு பாரத தேசத்திடம் மருந்து கேட்டு கையேந்தும் 30 நாடுகளில் ஒன்றான பிரேசில், என்ன சொல்லி மருந்து கேட்கிறது! ராம-ராவண யுத்தத்தின் போது களத்தில் மயங்கி விழுந்து கிடந்த லட்சுமணனைக் காப்பாற்ற மருந்து கொண்டுவந்த அனுமன் போல மருந்து கொடுங்கள் என்றல்லவா கேட்கிறது!!
விமானத்தில் மருந்தை அனுப்பி வைப்பதற்கு அதிக நேரம் பிடிக்காது. பாரதத்திற்கு அது பெரிய விஷயமும் அல்ல. பாரதத்தைப் போலவே, ஆனால் சற்று தாமதமாக, தங்களை ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திக் கொண்டுவரும் உலக நாடுகள் நெடுக, மக்கள் தனிமையில் தவிப்பது ரகசியம் அல்ல. தனிமை தரும் மன அழுத்தத்தை சமாளிக்க சூனியக்காரர்களின் கதையைச் சொல்லும் ஹாரி பாட்டர் நாவல் குறிப்பாக சிறு பிராயத்தினருக்குக் கைகொடுப்பதாக நம்மூர் ’தி இந்து’ நாளிதழ் (நேற்று) தமுக்கடிப்பதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது. ராமாயண – மகாபாரத – புராண கதைகளின் மூலம் நம் முன்னோர் ஏராளமான பாண்டஸிகளை பாரத சிறார் மனவெளியில் பரிமாறி அறநெறி நிற்கவும் வழிசொல்லி விட்டுப் போயிருப்பதை சைல்டு சைக்காலஜிஸ்டுகள் கொண்டாடுகிறார்கள் என்ற விஷயத்தை உலகத்தாருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றுகூடத் தோன்றாதா இதுகளுக்கு?
அப்படி என்ன பாரத கதைக் களஞ்சியம் பூட்டப்பட்டா கிடக்கிறது? ஆயிரக்கணக்கான கதைகளை சித்திரங்களாக வழங்கும் ’அமர் சித்திர கதா’வையே எடுத்துக் கொள்வோமே? ஊரடங்கு காலகட்டத்தில் தனது இணைய தளத்தை இலவசம் என்றல்லவா அறிவித்திருக்கிறது அந்த நிறுவனம்? எதற்காக உலகம் காத்துக் கிடக்கிறதோ அது பூத்துக் குலுங்குவதைக் கண்ணாரக் கண்டு மகிழ்கிறான் சராசரி ஹிந்து.
எஸ்.எஸ். மகாதேவன்
மூத்த பத்திரிகையாளர், சென்னை