இந்தியத் திருநாட்டின் தமிழகத்தையே தனது ஆளுகையில் கொண்டுவந்தவர் எம்.ஜீ ஆர் என்று அனைவராலும் அறியப்பட்டவர். மருதூர் கோபால ராமச்சந்திரன் அவர்கள்.1977 – 1987 ஆண்டுகளில் தமிழக முதல்வராகப் பணியாற்றியவர். 1988 ஆம் ஆண்டில் அவருக்கு பாரத நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ அவரது இறப்பிற்குப் பின் வழங்கப்பட்டது. இவையெல்லாம் ஏதோ தற்செயலாக நடைபெற்றவை அல்ல.
நீண்ட காலமாகத் திரையுலகில் சிறப்பு மிக்க பற்பல கதாபாத்திரங்களில்- விவசாயியாக, படைவீரனாக, குடும்பத் தலைவனாக, இரட்சகராக, மேலும் பலவாறாக மக்கள் மனத்தில் விலகாத, விலக்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவர். அதிஉன்னதமான திறமை, கடின உழைப்பு இவற்றின் துணையோடு திரு எம் ஜீ ஆர் அவர்கள் தமிழ்த் திரைப்பட உலகிலும், தமிழக அரசியல் உலகிலும் தனி இடம் பெற்று, அதனைத் தக்க வைத்துக் கொண்டார். தமிழ்த் திரையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகர் திரு சிவாஜி கணேசன், காதல் மன்னன் திரு.ஜெமினி கணேசன் அவர் காலத் திரைப்பட நடிகர்கள்.
எம் ஜீ ஆரின் வரலாறு, இக்காலத்தின் மிக முக்கிய உணர்ச்சியூட்டும் ஒன்று. இந்திய கேரள மாநிலத்தைச் சேர்ந்த மேலக்கத் கோபாலன் மேனன்-மருதூர் சத்தியபாமா என்னும் பெற்றோருக்கு, அந்நாளைய பிரிட்டிஷார் சிலோனில் உள்ள கண்டியில்- (இன்றைய ஸ்ரீலங்கா) பிறந்தவர். அவருடைய தந்தையார் மரணத்திற்குப் பிறகு அவரது தாயார் அவரையும், அவரது சகோதரர் எம். ஜீ சக்ரபாணியையும் கேரள மாநிலத்திற்கு அழைத்து வந்து விட்டார்.
ஆனால் அவரது உறவினர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் மூன்று பேரும் தமிழ் நாட்டிலுள்ள கும்பகோணத்திற்கு குடிபெயர்ந்தனர். அன்னையின் அந்த ஒரு முடிவு சரித்திரத்தையே மாற்றியது. தமிழ்நாடு நல்லவர்களும் உயர்ந்தவர்களும் நிரம்பப்பெற்ற பூமி, நல்ல பாரம்பரியமும், நாகரிகமும் அமையப்பெற்ற பூமி எம். ஜீ ஆருக்கு புகழையும், மரியாதையையும் அளிக்க இருந்த மாநிலம். எம். ஜீ ஆர் தனது அருமைத் தாயார் சத்தியபாமா மேல் அதிகமான பற்றும் பாசமும் கொண்டிருந்தவர். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது, அவர் மாணவர் இயக்க நாடகக் குழுவில் நடிக்கத் துவங்கினார். தமிழ் திரைப்பட்த்தில் நுழைந்த பின்னர் மிக உறுதியாகவும், நிதானமாகவும் நல்ல நிலைக்கு உயர்ந்தார். முதல் சில திரைப்படங்கள், சாதாரணமாக அமைந்தன.
1936ஆம் ஆண்டின் சதி லீலாவதியில் தொடங்கி பல படங்களில் நடித்தார். மேலும் 1938ல் வீர ஜகதீஷ், 1944ல் ஹரிச்சந்திரா, 1950ல் மந்திரி குமாரி,1954ல் மலைக் கள்ளன், 1956ல் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரை வீரன், 1957ல் புதுமைப் பித்தன், 1958ல் நாடோடி மன்னன், 1960ல் பாக்தாத் திருடன், போன்ற வேறு வணிக அளவில்
சிறந்த திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் 1961ல் நல்லவன் வாழ்வான், 1962ல் மாடப் புறா, 1964ல் வேட்டைக் காரன், 1965ல் எங்க வீட்டுப் பிள்ளை, 1965ல் ஆயிரத்தில் ஒருவன், 1966ல் அன்பே வா, முகராசி, பறக்கும் பாவை, 1968ல் ரகசிய போலீஸ் 115, 1969ல் அடிமைப் பெண், நம் நாடு, 1971ல் ரிக்ஷாக்காரன் போன்ற பல மிக வெற்றிப்
படங்களில் நடித்தார். எம் ஜீ ஆரின் மற்ற சில முக்கியமான திரைப்படங்கள் 1973ல் உலகம் சுற்றும் வாலிபன், 1974ல் நேற்று, இன்று, நாளை ஆகியவை திரைப்பட உலகில் நீங்கா இடம் பிடித்தவை.
இதிலிருந்து 1960கள் எம் ஜீ ஆரின் பிரம்மாண்டமான புகழையும், வெற்றியும் பெற்றுத் தந்த ஆண்டுகள் என்று அறியலாம். ரகசிய போலீஸ் 115 எம்.ஜீ.ஆர்-ஜெயலலிதா இணைந்து நடித்த மிக அழகான, அருமையான திரைப்படமாகும். நினைவில் நிற்கும் மற்ற ஒரு திரைப்படம் பறக்கும் பாவை. திருமணத்தைப் பற்றிய தமிழ்க்
குடும்பங்களின் உணர்ச்சியைத் தூண்டிய ஒரு திரைப்படம் ’கணவன்’ தமிழ் திரையில் எம் ஜீ ஆரும் ஜெயலலிதாவும் ஓர் ’ஆதரிச திரைக் கணவன் மனைவி, ஆவர். பின்காலத்தில் இருவருமே தமிழக முதல்வர்களானார்கள்.
அனைவரையும் அவர்கள் இருவருமே தமது உடலாலும் உள்ளத்தாலும் கவர்ந்தவர்கள். அவர்களுக்கு, அவர்களுக்கே உரித்தான திரைப்பட விசிறிகளும்,, பின்பற்றுபவர்களும் இருந்தனர். சில கருத்துப் போக்குகளை மிகவும் துல்லிதமாக ஒருவர் காண முடியும். 1950களில் எம் ஜீ ஆர் அவர்கள் ஆக்கத்திறம் பெற்ற சாரம் கொண்ட ஒரு நடிகனாகவே இருந்தார். 1960ல் இருந்து அவரது திரைப் படங்கள் அரசியல் செய்திகளையும் தாங்கி வந்ததை உணரமுடியும்.
பெண்களைக் காப்பது, சாதிக் குழப்பங்களை எதிர்த்துப் போராடுவது, ஏழைகள், பாதிக்கப் பட்ட மனிதர்களிடம் அன்பும் பரிவும் காட்டுதல் போன்ற நல்ல பாத்திரங்களில் கதைத் தலைவனாக நடித்ததைக் காண
முடியும். தமிழ் திரையில் மிகப்பெரிய இடத்தைக் கொடுத்தது 1954ல் வெளிவந்த ‘மலைக் கள்ளன்’ திரைப் படம். தான் படைக்கப்பட்டதே, ஏதோ ஒரு உயரிய நோக்கத்திற்காக என்று எம்.ஜீ ஆர் அவர்களை நினக்கத் தூண்டியதோ என நினைக்க வைக்கிறது. எளிமையோடு மிக நல்ல பாத்திரங்களில் நடிக்கும் பொழுது தம்மை மக்கள் நேசிக்கின்றனர் என்பதை உணரத் தொடங்கினார். மற்றொரு சரித்திரப் புகழ் படைத்த திரைப்படம் ’நாடோடி மன்னன்’ எம். ஜீ.ஆரின் துவக்க கால இரு வேடப் படம். இந்த கருப்பு-வெள்ளைத் திரைப்படம் அரண்மனைச் சூழலில் எடுக்கப்பட்டிருப்பினும், எம். ஜீ ஆர் ஒரு அரசன் பாத்திரத்திலும், ஒரு சாதாரண மனிதன் பாத்திரத்திலும் கிட்டத்தட்ட ஒரே பாணியில் இருந்தாலும், அரசன் பாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருந்தார்.
1950 இறுதியில் வெளியான இந்தத் திரைப்படம் எம்.ஜீஆரின் அரசியல் ஆசைகளுக்கு அடித்தளம் இட்டது போலும்!
சாதாரண மனிதன் பாத்திரம் ஏழைகளிடம் காட்டும் பரிவாக அமைந்தது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜீ. ஆரின் அரசியல் குறிக்கோளிற்கு அருகே இட்டுச் சென்றது. ’எங்க வீட்டுப் பிள்ளை’யும் ‘ஆயிரத்தில் ஒருவனும்’ அரசியல் செய்தியை ஐயமின்றி காட்டியது.
இங்கே ஒரு முன்னுக்கு வரும் ’ஹீரோ’ ஏழைகளுக்காகப் பரிவு காட்டுபவர், பொதுமக்களின் இன்னல்களைக் களைய விரும்புபவர், ஆதிக்க ஆட்சியை எதிர்ப்பவர், பெண்களுக்கு மதிப்பளிப்பவர், ஏழைகள், முதியோர், தனியாக இருப்பவர்கள், நோயுற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், மற்ற முறையில் இயலாதவர்கள் ஆகியோருக்குப் பரிவும் கருணையும் காட்டுபவர், எம்.ஜீ ஆரின் அருமையான திரைப் படங்களில் ஒன்றாய் ‘அன்பே வா’. அருமையான சில நகைச்சுவைக் காட்சிகளில் நடித்திருக்கிறார் இந்தப் படத்தில். தமிழ் நாட்டின்
எதிர்கால முதல்வராக ஆவதைக் கோடிட்டுக் காட்டியது அன்பே வா. 1972ல் ரிக்ஷாக்காரன் திரைப் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய திரைப்படப் பரிசைப் பெற்றார். ‘நேற்று, இன்று, நாளை’ (1974) ‘இதயக் கனி’ (1975) ஆகிய திரைப் படங்கள்’ அவரது அரசியல் வாழ்க்கையை உயர்த்தின.
அவரது திரைப் படப் பயணம், முழுமையான பிரமாதமான திரைப் படங்களால், சிறந்திருந்தாலும், சொந்த வாழ்க்கை துயரங்களால் நிறைந்திருந்தது. அவருடைய முதல் மனைவியும், இரண்டாம் மனைவியும் அடுத்தடுத்து இறந்தனர். அவரது முதல் இரண்டு மனைவிகள் தங்கமணி என்ற சித்தரிக்குளம் பார்கவி, சத்யானந்தவதி இருவரும் மிகக் குறுகிய காலத்தில் மரணம் அடைந்தனர். ஒரு தமிழ் நடிகையான அவரது மூன்றாவது மனைவி வி.என்.ஜானகி எம். ஜீ.ஆர் மரணத்திற்குப் பிறகும் உயிர் வாழ்ந்திருந்தார். அவரது மூன்றாவதும், இறுதி மனைவியும் கடைசிவரை கணவன் மனைவியாக வாழ்ந்தனர்.
துவக்கத்தில் எம் ஜீ ஆர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, 1953ஆம் ஆண்டு வரை இருந்தார். அதன் பிறகு தி.மு.க எனும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். பின்னர் 1972 அக்டோபர் 17ஆம் நாள் அதிமுக வை அகில இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தை அவரது அரசியல் ஆசான் திரு சி.என். அண்ணாதுரையின் மறைவிற்குப் பிறகு தோற்றுவித்தார். எம்.ஜீ ஆர் தி. மு. கவில் இருந்த பொழுது, திரு மு.கருணாநிதி கட்சியின் பொருளாதார (பண)த்தில் தவறுகள் இழைப்பதாக ஐயப்பட்டார். எம்.ஜி ஆர் காலத்தில் அ இ அ திமுக, அ தி முக வாகத்தான் இருந்தது. திரு எம். ஜீ. ஆர் அறிஞர் அண்ணாவின் உண்மையான சீடனாக இருந்தார். எம் ஜீ.ஆர் பணம் , பொருள் சம்பாதிப்பதற்காக அரசியலில் சேரவில்லை. மற்ற சில அரசியல்வாதிகளைப் போலன்றி, தமிழக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற. எண்ணத்தோடு அரசியலில் நுழைந்தார். தனது 50 வது வயதில், முதன்முதலாக 1967ஆம் ஆண்டில் செய்ண்ட் தாமஸ் மௌண்ட் தொகுதியிலிருந்து தி மு க கட்சியின் சார்பாக, தமிழக சட்ட சபை உறுப்பினர் ஆனார். 1972ல் அ தி மு க கட்சி துவக்கிய பிறகு, 1977ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சியை வெற்றி பெறச் செய்தார். 1977ஆம் ஆண்டு தமிழக முதல்வரானார். எம் ஜீ ஆர் வாழ்ந்திருந்தவரையில், ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றது. 1977, 1980, 1984 தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தொடர்ந்து எம் ஜீ ஆர் அ தி மு க வை வெற்றிபெறச் செய்தார்.
தமிழ்நாட்டில் எம்.ஜீ. ஆரின் வானுயர்ந்த மதிப்பை, அமெரிக்காவில் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்த பொழுது, ஆண்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்கே செல்லாமல், 1984 சட்ட மன்றத்தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இந்திய தேர்தல் சரித்திரத்தில், ஏன் உலக அளவிலேயே,
தனது போட்டியிடும் தொகுதிக்குச் சென்று, ஆதரவு வேண்டாமலேயே, ஒருவர் வெற்றிபெற்றார் என்றால் அவர் எம்.ஜீ ஆரைத் தவிற வேறு யாரும் இருக்க முடியாது! அப்படிப் பட்டது தமிழ் மக்களின், தமிழ் நாட்டின், தமிழ் மொழியின், தமிழ் பண்பாட்டின் வெளிப்பாடு , ஒருவரை ஒருமுறை தலைவராகத் தமது உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு விட்டால், அவரது மரணம் வரை மதிப்பு மாறாது என்பதற்கு எடுத்துக் காட்டு! எம்.ஜீ ஆர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால்,
திரு மு.கருணாநிதி அவர்கள் இரண்டாவது முறையாகத் தமிழக முதல்வராக ஆகியிருக்கமாட்டார்! திரு .எம்.ஜீ.ஆர் ஒருவரே தமிழக முதல்வராக இருந்துகொண்டே, மீண்டும் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ஆவார். அனைவரையும் கலந்து ஆலோசித்து ஒரு முடிவை எடுக்கும் முறையை ஏற்படுத்தியவர் அவர். அந்த முறையை தொடர்ந்து செயல் படுத்தியவர் ஜே. ஜெயலலிதா ஆவார். எம்.ஜீ ஆரின் ஒரு மிகப் பெரிய சாதனை முந்நாள் தமிழக முதல்வர் கே.காமராஜ் அவர்களின் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக
’சத்துணவுத் திட்டமாக, மாற்றியதே!.
இந்த உணவுத் திட்டம் மிகப்பெரிய வெற்றித் திட்டம். இந்தத் திட்டத்தை இந்தியா முழுமையும் ஏற்று, நடத்தி வருகின்றனர். இச் சத்துணவுத் திட்டத்தின் முக்கிய பயனாளர்கள், ஏழைக் குடும்பதினின்று பள்ளிக்குச் செல்லும்
குழந்தைகளே ஆவர். தமிழ் நாட்டில் சாராய ஒழிப்புச் செய்தவரும் அவரே. ‘பாரத ரத்னா’ எம்.ஜீ.ஆர் ஏழைகளின் ரட்சகர். ஏழைகளுக்கு இரக்கத்தைக் காட்டி, பெருந்தன்மையோடு நடந்து கொண்டவர். தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு மாத்திரம் அன்றி, ஈழத் தமிழர்களுக்கும் இரக்க குணம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. திரை உலகிலும், அரசியல் வாழ்விலும் பல புகழையும், பரிசுகளையும் பெற்றவர். எம்.ஜீ ஆர் அவர்கள் தங்க மனம் படைத்த தலைவர் என இன்றும் தமிழகத்தில் மதிக்கப் படுகிறார். அவர் ’பொன்மனச் செம்மல்’ எனப்
போற்றப் பட்டவர். தமிழ் நாட்டில், ஏழைப்பங்காளன் ஆக விளங்கி, பல அருமையான திட்டங்களை ஏழைகளுக்காக நிறை வேற்றியதற்காக தமிழக மக்கள் அன்பு, பற்றுறுதி, நன்றியுணர்வோடு நினைவில்
வைத்துள்ளனர்.
அன்போடு, புரட்சித் தலைவர், மக்கள் திலகம், என்று நினைவில் கொண்டுள்ளனர். இன்று சென்னையில் அவருக்காக இரண்டு மாபெரும் நினைவகங்கள் உள்ளன. சென்னை மத்திய ரயில் நிலையத்தை, 2019ஆம் ஆண்டு, புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜீ ஆர் மத்திய ரயில் நிலையம் என்றும், கோயம்பேட்டில் உள்ள சென்னை மத்திய பேருந்து நிலையத்தை 2018ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜீ ஆர் பேருந்து நிலையம் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
அவ்வாறே சேலம் பெருந்து நிலையம் பாரத ரத்னா டாக்டர் எம் ஜீ ஆர் மத்திய பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. சில சாலைகளும் பூங்காக்களும் அவர் பெயரைத் தாங்கி நிற்கின்றன. திரு எம் ஜீ ஆர் நமக்காக பல சொத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார்- அவரது பல முக்கியமான திரைப்படங்கள், மதிய சத்துணவுத் திட்டம்,
ஏழைகளுக்கான பல நலத் திட்டங்கள், பிரம்மாண்டமான அரசியல் அமைப்பு ’அ இ அ தி மு க’ – அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – அவர் கிட்டத்தட்ட தனிமனிதனாக உருவாக்கியது! ,அவரிடம் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் திறமை, கருணை, வலிமை, நல்ல தேச பக்தி ஆகியவை இருந்தன. திரு எம் ஜீ ஆர் தமிழ் திரைப் படத்திலும், தமிழக அரசியலிலும் வலிமையான பேர் உருவ மனிதர் ஆவார்.
ஆங்கிலத்தில் டாக்டர் S.பத்மப்ரியா பி.எச்.டி
எழுத்தாளர், சிந்தனையாளர், சென்னை
தமிழாக்கம்: முனைவர், கவிஞர் என்.வி. சுப்பராமன், சென்னை.