கடையெழு வள்ளல்களை அரசர்களாக நாம் படித்துள்ளோம்… ஆனால் கையிலெதும் இல்லாமல், காண்பவர்களிடமெல்லாம் கையேந்தி, ஒரு வருடம், இரு வருடமல்ல நூற்றியைம்பத்தாறு ஆண்டுகளாக அணையாமல் அடுப்பெரிந்து, மக்களின் வயிறு பசியால் எரியாமல் உணவளித்துக் கொண்டிருக்கும் வள்ளலாரைப் பற்றிக் காண்போமா! வடலூரில் 1867ஆம் ஆண்டு அவர் பற்ற வைத்த அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்திலும் ஒருநாள் கூட விடுபடாத அன்னதானம், அவரது ஆத்மசக்திக்கு சான்றாய் திகழ்கிறது.
ஆம்! அதனால் தான் அவர் வள்ளலார்! வாடிய பயிரையேக் கண்டு வாடிய கருணாமூர்த்தி..பசியால் வாடும் மனிதர்களுக்கெல்லாம் உணவளித்ததில் ஆச்சர்யம் என்ன!
சிதம்பரம் அருகிலுள்ள மருதூரில் 1823 ஆம் ஆண்டு இராமலிங்கம் எனும் பெயரில் அவதரித்தது ஆத்ம ஜோதி. மிகசிறுவயதில் தந்தையை இழந்தவரை, தமையனார் சபாபதி அவர்களே வழிநடத்தினார். அவர் தமிழ் ஆசிரியராகவும் புராண சொற்பொழிவாளராகவும் இருந்தார். தனது சகோதரனை நன்கு படிக்க வைத்து நல்ல நிலைக்கு உயர்த்தி விட வேண்டும் என்று மிகவும் விரும்பிய சபாபதி அவர்கள் ராமலிங்கத்தை ஒரு சிறந்த ஆசானிடம் கல்வி பயில அனுப்பினார். ஆனால் ராமலிங்கத்திற்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை, ஆன்மீகத்திலேயே அதிக ஈடுபாடு செலுத்தினார்.
ஒருநாள் கந்தகோட்டத்தில் முருகனை நோக்கி
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”
என்று மனமுருகி பாடியதைக் கேட்ட அவரது ஆசான், இத்தகைய அருளுடைய குழந்தைக்கு நான் பாடம் சொல்லித் தர என்ன இருக்கிறது என்று விலகிக் கொண்டார்.
ஒரு நாள் சபாபதி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால், சொற்பொழிவிற்கு என்னால் இன்று வர இயலாது என்று தெரிவித்துவிட்டு வா என்று ராமலிங்கத்தை அனுப்ப…12 வயது பாலகன் அங்கு சென்று ஞானசம்பந்தரின் தேவாரப் பாடலுக்கு அற்புதமாக விளக்கம் அளித்துவிட்டு வந்து அனைவரது பாராட்டையும் பெற்றார். அது முதல் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஆன்மீகப் பணியினில் தொடர விட்டார் அவரது தமையனார்.
இராமலிங்கருக்கு திருமணம் செய்வித்தாலும், இல்வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் வெண்ணிற ஆடை உடுத்தி துறவு வாழ்வே வாழ்ந்தார். வீட்டிலேயே விளக்கேற்றி தீப ஒளியில் இறைவனைக் கண்டு, மணிக்கணக்கில் தியானத்தில் அமர்ந்திருப்பாராம்.
அனைத்து மக்களிடமும் ஜீவகாருண்யம், சமத்துவம், பசிப்பிணி நீக்குதல், தியானம்,யோகம் இவற்றை வலியுறுத்தினார். உயிர்ப்பலியை தடுத்து நிறுத்தினார். பசிப்பிணி நீக்க சத்ய தர்மசாலையையும், அனைவருக்கும் பண்பாட்டு கல்வி அளிக்க சத்திய வேத பாடசாலையும் நிறுவினார்.
இறைவனை உணர சித்து வேலைகள் தேவையில்லை… எல்லா உயிரையும், தன் உயிராய் பார்க்க பழகும் ஒருமையே இறைவனை அடையும் வழி என்றார். இதனை “எங்குமாய் விளங்கும் சிற்சபை” என்றார்.
இவர் முருகப்பெருமானை நினைத்து தெய்வ மணிமாலை எனும் நூலை முதன் முதலில் இயற்றினார். இவர் வழங்கிய 6000 பாடல்களின் திரட்டு “திருவருட்பா” ஆகும். இவர் மொத்தம் 40 ஆயிரம் பாடல்களை இயற்றினார். வள்ளலார் தன் கைப்பட எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் மூலப்பிரதி இன்றளவும் தருமச்சாலையில் உள்ளது.
எளியோர்களும் கற்கும் வகையில் எளிய தமிழ் பாடல்களை இயற்றினார் வள்ளல் பெருமானார். முதல் முதியோர்களுக்கான கல்வி, முதல் மும்மொழி பாடசாலை, முதல் தனிக்கொடி, முதல் ஜோதி வழிபாடு, முதல் திருக்குறள் வகுப்பு என்று பல முற்போக்கான விஷயங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
பசியை உணர்வாகவே எண்ணிய காலகட்டத்தில், அதைப் பிணியாக அடையாளம் காட்டியவர். உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறைவனை அடையும் தகுதி பெற்றவை என்பதை ஆணித்தரமாக நம்பியவர். அதற்கான வழிகளை பாமரனும் பின்பற்றும் வகையில் கூறியவர்.
ஒன்பது வயதில் கந்தகோட்ட முருகனிடம் கனிந்த பக்தி, தன் இறுதி பயணத்தை அந்த முருகனின் விசேஷ நாளான தைப்பூசத்தன்று உலகிற்கு ஓங்கி ஒளித்து, இறவா நிலையை அடைவேன்..பிறவா நிலையை அடைவேன்…என்று உலகிற்கு தெரிவிக்க…
அங்கிருந்த அன்பர்களிடம் அருட்பெரும்ஜோதியுடன் ஜோதி மயமாகக் கலக்கப் போகிறேன் என்று அறிவித்து விட்டு, ஒரு அறைககுள் சென்று தியானத்தில் அமர்ந்து கதவைப் பூட்டச் சொன்னார். கூறியபடி ஜோதியில் கலந்தார்.
இறைவனை அடைய இப்படியும் வழியுள்ளதா??? இறைவன ஜோதி வடிவாய் நம்மை ஆகர்ஷித்துக் கொள்வாரா??? ஆன்மீக ஆழிப்பேரலையைக் கடக்க இப்படி ஒரு எளிமையான வழியா?? என்று ஒவ்வொரு சாமானியனையும் ஆன்மீகத்தை சிந்திக்க வைத்த வள்ளலார் பெருமானின் ஜீவகாருண்யத்தைப் போற்றுவோம்!! ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியில் கலப்போம்!
– சுமதி மேகவர்ணம்