நம்மில் பலருக்கு குறிப்பாக சென்னையில் வசிப்பவர்களுக்கு தில்லையாடி வள்ளியம்மை என்ற பெயர் பரிச்சயமானது, பாந்தியன் சாலையில் அமைந்துள்ள முதன்மையான கோஆப்டெக்ஸ் கண்காட்சியகம் இதே பெயரைக் கொண்டுள்ளது.
பிப்ரவரி 22, 1898
ஜோகன்னஸ்பர்க் – தென்னாப்பிரிக்காவின் தங்க நகரம்,இந்நாளில் முனுசாமி முதலியாருக்கும் மங்களத்தம்மாளுக்கும் பெண் குழந்தை பிறந்தது.
இந்த இளம் தம்பதி, தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள தில்லையாடி என்ற சிறிய கிராமத்திலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு பிழைப்பிற்காக குடியேறியிருந்தனர்.
முனுசாமி தனது வாழ்வாதாரத்திற்காக சிறு கடை நடத்தி வந்தார். குழந்தைக்கு வள்ளியம்மை என்று பெயரிட்டனர்.
வள்ளியம்மை இந்தியர்களுக்கு விரோதமான சூழலில் வளர்ந்தாள். ஆனால், இளமைப் பருவத்தில் இருக்கும் வரை இப்படிப் பாகுபடுத்தப்படுவது சரியல்ல என்று அந்தக் குழந்தைக்குத் புரியவில்லை.
தென்னாப்பிரிக்காவின் சர்ச் அல்லது திருமணச் சட்டத்தின்படி இல்லாத எந்தத் திருமணமும் செல்லாது என்று சட்டம் இயற்றப்பட்டது. இதனால் பெரும்பாலாக ஹிந்துவாக இருந்த இந்தியர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டனர். மனைவிகள் கணவர்களின் சொத்து மீதான உரிமை மற்றும் கணவரின் பாதுகாப்பை இழந்தனர். திருமணம் அவர்களின் சட்டத்தின் படி நடக்காததால் இந்து குழந்தைகள் எவருக்கோ பிறந்தவர்கள் என்ற நிர்கதி நிலைக்கு தள்ளப்படும் அச்சம் ஏற்பட்டது. பெற்றோரின் வாரிசுச் சொத்து குழந்தைகளைப் போய்ச் சேருமா என்ற சந்தேகம் எழுந்தது. பாதுகாப்பின் உத்திரவாதம் இல்லாததால், பெண்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும்போல் இருந்தது.
மோகன்தாஸ் காந்தி தனது எதிர்ப்பைத் தொடங்கினார்.
மார்ச் 14, 1913
15 வயதான வள்ளியம்மை தனது தாயுடன் பெண்கள் நடத்திய பேரணியில் டிரான்ஸ்வால் மாகாணத்திலிருந்து நுழைவுச்சீட்டு இல்லாமல் நடால் மாகாணத்தை நோக்கிச் சென்றார்கள். செல்லும் வழியில் அவர்கள் நியூகாசிலில் உள்ள இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் பேசி, உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட வைத்தனர். சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
அவர்கள் நடாலுக்குள் நுழைந்தபோது, பலருடன் வள்ளியம்மையும் கைது செய்யப்பட்டார். 3 மாதங்கள் சிறையில் இருந்தாள். சிறையில் இருந்த கடுங்குளிர் மற்றும் சுகாதாரமற்ற சூழல் அவரை பெரிதும் பாதித்தது. அவள் ஒரு கொடிய காய்ச்சல் வந்து படுத்துவிட்டாள். அவள் விடுவிக்கப்பட்டபோது அவளது மன உறுதிய மட்டுமே எலும்பையும் தோலையும் ஒன்றாக உயிரோடு வைத்திருந்ததே தவிர வேறு எதுவும் இல்லை.
யாரோ, “நீங்கள் ஏன் பேசாமல் தென்னாப்பிரிக்கர்களாக பதிவு செய்து மாறக்கூடாது? இந்தியர்கள்! இந்தியாவில் கொடி கூட இல்லை! நீங்கள் உண்மையில் எதற்காக போராடுகிறீர்கள்?” எனச்சொல்வதை அவள் காதில் விழுந்தது.
கொடிதான் இந்தியாவுக்கு வடிவம் கொடுக்கும் என்றால், இதோ,” என்று கூறி, தன் புடவையைக் கிழித்து, அதை வெற்றிகரமாய் அசைத்து, “என் கொடி! என் தாய்நாடு!” என்றாள் வள்ளியம்மை.
காந்தி, இரும்புமனம் கொண்ட இளம் வள்ளியம்மையைப் பற்றி கேள்விப்பட்டு, சிறையில் இருந்து வெளியே வந்தவர்களைச் சந்திக்க வந்தபோது அவளைக் குறிப்பாகக் கேட்டார். அந்த உயரந்த பெண்ணை எலும்பும் தோலுமாய்ப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
“குழந்தை, இவ்வளவு சிறிய வயதில் நீ இந்த சிரமம் மிக்க காரியங்களில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை,” என்று அவர் கூறினார்.
அவள் கண்கள் ஒளிர, பலஹீனமான குரலில்,”இதுதான் நமக்கு விடிவு கொடுக்கும் வழி என்றால், நான் மீண்டும் சிறைக்குச் செல்ல தயார்!” என்று பதிலளித்தாள்.
பிப்ரவரி 22, 1914
இரும்பு இதயம் கொண்ட வள்ளியம்மை இறுதி மூச்சை விட்டாள். சற்று அவசரப்பட்டுவிட்டாள். “வள்ளியம்மையின் இழப்பு என் மூத்த சகோதரனின் (லட்சுமிதாஸ்) இழப்பை விட என்னை அதிகம் பாதித்தது, ” என்று காந்தி பின்னர் எழுத்தினார்.
ஆபிரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை வழங்குவதை விட, போயர் போருக்குப் பிறகு ஆப்பிரிக்கானர்களின் (டச்சு மக்களின் ஆப்பிரிக்க வம்சாவளி) உணர்வுகளைத் தணிப்பதில் பிரிட்டன் அதிக அக்கறை கொண்டிருந்தது. வள்ளியம்மையின் மரணம் இந்தியர்கள் – பெரும்பாலும் ஒப்பந்தத் தொழில் செய்ய வந்தவர்கள் – அனுபவித்த துன்பங்களின் பிரதிபலிப்பாகும்.
31 டிசம்பர் 2008 அன்று, தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை முன்வைத்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இந்திய அஞ்சல் தில்லையாடி வள்ளியம்மையின் படம் போஸ்ட்மார்க்காக கூடிய முதல் நாள் அட்டையை 5/- ரூபாய்க்கு வெளியிட்டது.
மரியாதை நிமித்தமாக அவரது நினைவிடம் 13-08-1971 அன்று தரங்கம்பாடி தாலுகாவில் தில்லையாடி வள்ளியம்மை கிராமத்தில் திறக்கப்பட்டது. அவரது சிலை, வாழ்க்கை வரலாறு மற்றும் புகைப்படங்கள் 2451.65 சதுர மீட்டர் பரப்பளவில் பொதுமக்கள் பார்வையிட இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நினைவிடத்தில் நூலகமும் தொடர்ந்து இயங்கி வருகிறது.
கோ-ஆப்டெக்ஸின் தில்லையாடி வள்ளியம்மை விற்பனை நிலையம் புடவை கண்காட்சியகமாக இருப்பதன் முக்கியத்துவத்தை இச்சூழலில் தவறவிட முடியாது!
–திருமதி. யமுனா ஹர்ஷவர்தனா