சேது நாட்டு அமைச்சர் பொன்னுச்சாமி தேவர்- முத்து வீராயி நாச்சியார் இணையருக்கு மூன்றாவது மகனாக 21.3.1867ல் பிறந்தார். இவரின் பெற்றோர் கடைச்சங்க காலத்தில் இறுதியாக ஆண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன் நினைவாக அப்பெயரையே பாண்டித்துரைக்குச் சூட்டினர். மதுரை நான்காம் தமிழ்சங்கம் கண்டவர் வள்ளல் பாண்டித்துரைத்தேவர். தனது பதினெட்டாவது வயதில் பாலவனத்தம் ஜமீன்தாராகப் பொறுப்பேற்றார் தேவர். இராமசாமிப் பிள்ளை என்பாரிடமிருந்து சைவ தத்துவத்தை கற்றுக் கொண்டார். இசைத்தமிழ் மீது மிகுந்த ஆர்வமுள்ளவர். தமது இருபத்திரண்டாம் வயதில் இசைத்தமிழ் மாநாட்டை ஏழு நாட்கள் நடத்திய புகழுக்கு சொந்தக்காரர்.
ஆங்கில பாதிரியார் ஒருவர் திருக்குறளில் எதுகை மோனை சரியில்லை என கூறி அவர் அச்சிட்ட புதிய திருக்குறளை காட்டினார். அதில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” -என்பதற்குப் பதிலாக “அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி உகர முதற்றே உலகு” -என்று அச்சிடப்பட்டிருந்தது. இதை கண்டு கடும் கோபம் கொண்ட தேவர். ஆங்கிலேயரின் அறிவீனத்தை உணர்ந்து அந்நூல்களையும் கையெழுத்து பிரதியையும் விலைக்கு வாங்கி கொளுத்தினார். இதைப் பாராட்டி பண்டிதர் அ.முத்துசாமிப் பிள்ளை என்பவர் பாடல் ஒன்றை எழுதினார். “வள்ளுவர் அருளிய மாண்புறு குறளைத் திருத்திய வெள்ளையன் செய்கையை அறிந்து வருத்தமுற் றதனை வாங்கித் தீக்கிரை ஆக்கியல் வெள்ளையற்(கு) அரும்பொருள் கொடுத்துப் போக்கிய புண்ணியன் புவிபுகழ் கண்ணியன்” 1906ல் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வெள்ளையருக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஒரு இலட்சம் ருபாயை தனது பங்குத் தொகையாகப் பாண்டித்துரைத்தேவர் வ.உ.சி.க்கு அளித்த பெருமைக்கு உரியவர் தேவர்.
சேதுபதி செந்தமிழ் கலாசாலையில் படித்த மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களோடு தேவாரமும், திருவாய்மொழியும் சேர்த்து கற்றுத் தரப்பட்டது. அம்மாணவர்களுக்கு பாண்டித்துரைத்தேவர் தம் சொந்த செலவில் இலவச உணவும், உடையும் வழங்கினார், நன்கு படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுப் பணமும், பதக்கங்களும் கொடுத்து சிறப்பித்தார். அந்த காலத்தில் அவர் தமிழ்ச் சங்கத்தை தொடங்கிய போது , சங்கம் வைத்த பாண்டியருக்கு இணையாக இவரால் தமிழ்ச் சங்கத்தை நடத்த முடியுமா என்று பலரும் ஏளனம் செய்தனர். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் வெற்றிகண்டவர் தேவர்.
பாண்டித்துரைத் தேவர் பற்றி பாவேந்தர் பாரதிதாசன், “இனியுமோர் தமிழ்ச் சங்கம் காண்பேன் இருந்த முதலிடை கடைச் சங்கம் போலவே எனச் சொன்ன பாண்டித் துரைத்தேவன் சொல்லை இவ்வையம் அந்நாளில் நம்பவே இல்லை. வியந்தது வையம் சென்றநாள் சிலவே விரிந்தது மதுரைத் தமிழ்ச்சங்க நிலவே அயர்ந்த தமிழரின் ஆடலும் பாடலும் அறிவின் செயலும் மிளிர்ந்தன பலவே புலவர் வகுப்பு மூன்று படைத்தான் புன்மையின் மடமையின் என்பை உடைத்தான் பல தமிழிலக்கிய மாசு துடைத்தான் பாண்டித் துரைத் தேவன் புகழ்க்கொடி எடுத்தான்”…
–திரு.பார்கவன் சோழன்