பாரதிய சிக்ஷன் மண்டலின் 2024-ஆம் ஆண்டு அகில பாரதீய ஆராய்ச்சியாளர் சம்மேளனத்தின் துவக்கவிழா
குருகிராம், நவம்பர் 15, 2024
விஷன் பார் விக்ஷித் பாரத் (Vision for Vikshit Bharat – VVB 2024) அகில பாரத ஆராய்ச்சியாளர் சம்மேளனம், ஹரியானா மாநிலம் குருகிராம் நகரத்தில் உள்ள SGT பல்கலைக்கழகத்தில், நவம்பர் 15 முதல் 17 வரை நடந்தேறியது பாரதீய சிக்ஷன் மண்டலால் ஏற்படு செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சியாளர்களின் சம்மேளனம், மஹா கும்ப மேளா என சொல்லக்கூடிய அளவிற்கு மிகச்சிறப்பாக, குரு துரோணாச்சாரியார் பிறந்த குருகிராமில் நடந்தேறியது. இதை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின், சர்சங்கசாலக், டாக்டர் மோகன் பகவத் துவக்கி வைத்து பேருரையாற்றினார். பாரதத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாறு பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களை மரியாதை செய்து, இளைய சமுதாயத்தை ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிப்பதே இச் சம்மேளனத்தின் நோக்கம்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின், சர்சங்கசாலக், டாக்டர் மோகன் பகவத், VVB 2024 நிகழ்வைத் துவக்கி வைத்து, பாரதிய சிக்ஷன் மண்டலின் ஆராய்ச்சி இதழான “ப்ரக்யானம்” பத்திரிக்கையின் முதல் இதழை வெளியிட்டார். அப்பொழுது அவர் பேசும் பொழுது, நம் பாரத கலாச்சாரத்தில் வளர்ச்சி என்பது மனிதம் இயற்கையுடன் இணக்கமாக முன்னேறுவதே. ஆனால் மேலைநாடுகளில் வளர்ச்சி என்பது மனிதன் இயற்கையை வெற்றிகொள்வது – மனிதனுக்கும் இயற்கைக்குமான போட்டியின் முடிவு. அதனாலேயே மேற்கில் இயற்கையும், சுற்றுச்சூழலும் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளதைப் பார்க்கிறோம். ஆகையால் நமது வளர்ச்சிக்கான மாதிரியை நம் கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் நாமே உருவாக்கிக்கொள்ளவேண்டும், அதை பின்னர் உலகம் பின்பற்றும் என்பதில் ஐயமில்லை. இப்படி மனிதனையும் இயற்கையையும் ஒருவாராய்ப் பார்க்கும் பார்வையே நம் பாரதிய கலாச்சாரத்தின் சிறப்பு. ஒவ்வொரு பாரதவாசியும், பாரதம் ஒரு தலைசிறந்த நாடாக, மிக முன்னேறிய நாடாக இருப்பதையே விரும்புகிறான் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் நாம் பல பரிமாண வளர்ச்சிகளைப் பார்த்துள்ளோம். இதில் உள்ள குறைகளைத் தீர்க்கும் இடத்தில் இன்றைய பாரதம் இருப்பதாக உலகநாடுகள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டதை நம்மால் பார்க்கமுடிகிறது.சமுதாய வளர்ச்சி என்பது சுற்றுச்சூழலை கருத்தில் கொள்ளாமல் வராது. சுற்றுச்சூழல் இல்லாவிட்டால் நாம் இல்லை, வளர்ச்சியும் இல்லை என்பதை நாம் திடமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
எனக்கு முன் பேசிய நண்பர், பாரதம் 16ஆம் நூற்றாண்டு வரை அனைத்து துறைகளிலும், உலகின் முன்னோடி நாடாக இருந்தது என்று கூறினார். பல விஷயங்களை கண்டுபிடித்த நாம் சிலகாரணங்களால் இந்த துடிப்பான செயல்பாட்டை நிறுத்தினோம், ஆகையால் பின்தங்கினோம். பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் நாம், சரித்திரத்தில் என்றாவது, நீர் மற்றும் காற்று நச்சுத்தன்மை பற்றிய செய்தியை கேள்விப்பட்டிருப்போமா? நாம் கண்மூடித்தனமாக மேற்கத்திய நாடுகளை பின்பற்றத் துவங்கிய பின்னரே நீர் மற்றும் காற்று மாசுபாடு என்பது நம் வாழ்வில் வந்தது. வளர்ச்சி என்பதை எல்லாவற்றிக்கான வளர்ச்சி என்று முழுமையாகப் பார்க்காமல், மனிதனின் வாழ்வு என்று குறுக்கப்பட்டது. அதனால் தன் வாழ்க்கையின் எஜமானனாக இருக்கவேண்டிய மனிதன், சூழ்நிலைக்கைதியாய் அமர்ந்திருக்கிறான். வளர்ச்சி என்பது பொருளிலும், இன்பத்திலும் மட்டுமே இருக்கிறது என்று, வாழவேண்டியவன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறான். நாம் பொருளும் இன்பமும் வேண்டாம் என்று கூறவில்லை. அவை எப்பொழுது ஆன்மீகத்துடன், தன்னுள் தேடல் என்னும் அறத்துடன் இணைந்து பயணிக்கிறதோ, அதுதான் உண்மையான வளர்ச்சிப் பாதை. நமது கலாச்சாரத்தில் பேட்டண்ட் (patent) என்ற ஒரு விஷயம் இருந்ததாய் வரலாற்றில் எந்தக் குறிப்பும் இல்லை. இங்கு ஞானம் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தது. அந்த ஞானத்தை, அறிவாற்றலை உபயோகித்து, நன்மைக்காக பயன்படுத்துவது அறிந்தவர் பொறுப்பு. அதுவே நம் கலாச்சாரம்.
நாம் தொழில்நுட்பத்தை வரவேற்கிறோம், அது தனி மனித வேலைவாய்ப்பை தட்டிப்பறிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். எல்லோரையும் எப்படி அனுசரித்து ஒன்றாய் வளர்ச்சிப்பாதையில் கூட்டிச்செல்வது என்பதை பாரதத்திடம் மற்ற நாடுகள் கற்கும் நிலைக்கு நாம் முன்னேறவேண்டும். நாம் எந்த விஷயங்கள் நமக்கு சாதகமாக இருக்குமோ அவற்றைமட்டும் வெளியில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். கண்மூடித்தனமாக மேலைநாட்டுக் கலாச்சாரத்தை பின்பற்றி, தேவையில்லாத விஷயங்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. ஞானத்தை பெருக்குவது, அறிவை வளர்ப்பது ஆகியவையே நம் குறிக்கோளாக இருக்கவேண்டும். படிப்பு முடிந்தபின்னும் நம் அறிவுத்தேடல் தொடரவேண்டும். இத்தேடலே மனிதனை புத்திமானாக மாற்றும். நமக்கென்று ஒரு தனித்துவம் இருக்கவேண்டும், நாம் மற்றொருவர் பிரதியாய், காப்பியாய் இருந்து என்ன பயன்? இதை இன்று நாம் கடைப்பிடித்து, செயல்படுத்துவோமே ஆனால், இன்னும் 20 வருடங்களிலேயே பாரதத்தின் விஷன் 2047 முழுமை அடையும் என்பதில் எந்த வித ஐயமும் கிடையாது. இவ்வாறு டாக்டர் மோகன் பகவத் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்.
விக்ஷித் பாரத் – வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு உறுதியான வடிவம் கொடுப்பதில் இளம் ஆராய்ச்சியாளர்களின் பங்கு
இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ். சோம்நாத் அவர்கள் பேசும் பொழுது – வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதற்கான சரியான நேரம் இது என்று குறிப்பிட்டார். மிஷன் சந்திராயான் வெற்றி பற்றி கூறுகையில் – 2040ஆம் ஆண்டிற்குள் நிலவில் காலடிவைப்பதற்கும், நிலாவில் ஒரு விண்வெளி நிலையம் அமைப்பதே இஸ்ரோவின் நோக்கம் என்றும், அதற்கான ஆயத்த வேலைகள் நடந்து வருவதாகவும் கூறினார். மேலும் நம் பாரதம் விஸ்வகுரு, உலகிலேயே முதன்மையான நாடு என்று உணர்ந்து நம் மக்கள் மகிழ்ச்சியாய் வாழும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் கூறினார்.
விரைவில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற சங்கல்பத்துடன் இந்த மஹா யக்ஞம் துவங்கியது
இந்நிகழ்வு பற்றி நோபல் பரிசு பெற்ற, ஸ்ரீ கைலாஷ் சத்தியார்த்தி அவர்கள் பாராட்டிப் பேசினார், அவர் – சுமார் இரண்டு லட்சம் விண்ணப்பதாரர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் ஒரு கூரையின் கீழ் அமர்ந்து பங்குகொள்ளும் சம்மேளனம் உலகில் வேறெங்கிலும் நடந்ததில்லை. இன்று நாம் துவக்கி வைக்கும் மஹா யக்ஞத்தின் எதிரொலி உலகெங்கும் கேட்கப்போகிறது. மிக ஆழமான வேரைக்கொண்ட பாரம்பரியம் நம் பாரத பாரம்பரியம். நம் சொந்தங்களின் சாதனைகளை நம் சாதனையாய் கொண்டாடி மகிழ்வதே நம் கலாச்சாரம். நமது வளர்ச்சி அனைத்து தரப்பினருக்குமானது, அனைவரையும் உள்ளடக்கியது. நீ, நான் என்ற பேச்சை விட்டு, நாம் எனும் வசுதைவ குடும்பகம் – யாவரும் கேளீர் என்ற மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதற்கு சற்று முன் விழாவின் முக்கிய விருந்தினர்கள் மூவரும் ஒரு கண்காட்சியைத் துவக்கிவைத்தனர். இந்தக் கண்காட்சியில் “காணத மகரிஷி முதல் கலாம் வரையிலான பாரதத்தின் பயணம்” காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 10,000 கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் பங்கு பெற்ற இந்த கண்காட்சியில், “பாரதிய கல்விமுறை”, “வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொலைநோக்கு பார்வை”, “நாளைய தொழில்நுட்பங்கள்” ஆகிய தலைப்புகளில் தங்கள் ஆராய்ச்சியை காட்சிப்படுத்தியிருந்தனர். நம் பாரம்பரிய கல்விமுறையில் இருந்து தற்போதைய கல்விமுறைக்கு நாம் பயணித்த தூரமும், அதனால் நாம் இழந்தவற்றையும் திரும்பிப் பார்க்கும் வகையில் இருக்கும் ஆராய்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குருகுலங்களில் துவங்கி இன்றைய தொழில்நுட்பங்கள் எப்படி நம் அன்றாட வேலைகளை சுலபமாக்கி இருக்கின்றன என்பது பற்றியும், சத்திரபதி சிவாஜி அவர்கள் காலத்தில் பயன்பாட்டில் இருந்த ஆயுதங்களில் இருந்து இன்றைய பாரத விமானப்படையின் நவீன ப்ரஹ்மாஸ் ஏவுகணை வரை பல விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நாடு முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களையும், மாணவர்களையும் ஈர்க்கும் விதமாக இந்த கண்காட்சி அமைத்திருந்தது. “கபுக் கொய்தம்” எனப்படும் மணிப்புரி பொரி உருண்டையை காட்சிப்படுத்தியிருந்த ‘ஐஐஐடி மணிப்பூர்’ காட்சிக்கூடம் அனைவராலும் பெரியதாய் பேசப்பட்டது. வெல்லம், அரிசி, எள் மற்றும் உலர் பழங்களை பயன்படுத்தி செய்யப்பட்ட மணிப்பூரின் இந்த பாரம்பரிய இனிப்பு, மணிப்பூர் கலாச்சாரத்தை மக்களுக்கு இனிதே அறிமுகப்படுத்தியது.
விஷன் பார் விக்ஷித் பாரத் 2024 நிகழ்ச்சியின் வெற்றிக்கு பாரதிய சிக்ஷன் மண்டலின் இளைஞர்கள் பிரிவு சுமார் ஐந்து லட்சம் ஆராய்ச்சியாளர்களும், ஒரு லட்சம் ஆராய்ச்சி மாணவர்களையும் தொடர்பு கொண்டு இந்நிகழ்ச்சி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்காக 350 ஆராய்ச்சி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் ஒரு பகுதியாக, ஆய்வுக் கட்டுரைகளுக்கான ஒரு போட்டியும் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொள்ள 1,68,771 மாணவர்கள் பதிவு செய்துகொண்டனர். இவர்களில் இருந்து சம்மேளனத்தில் காட்சிப்படுத்தக்கூடிய, 1,200 ஆராய்ச்சிக் கட்டுரைகளை தேர்வுசெய்ய 45 குழுக்கள் அமைக்கப்பட்டு 1400 நிபுணர்கள் கட்டுரைகளை மதிப்பீடு செய்தனர்.
பாரதிய சிக்ஷன் மண்டலின் அகில பாரத தலைவர், டாக்டர் சச்சிதானந் ஜோஷி அவர்கள் விஷன் பார் விக்ஷித் பாரத் 2024 பற்றி கூறும் பொழுது, இளம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பாரதத்தை முன்னேற்றப்பாதையில் செலுத்த முழு முயற்சி செய்யவேண்டும். வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் விஷயங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து அவற்றை அகற்றும் முறைகளைப் படைக்கவேண்டும். இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கின்றன. நாம் உலகின் பிரச்சனைகளை நன்கு அறிவோம், நாம் அதற்கான தீர்வுகளையும் தேடிக் கண்டுபிடிக்கிறோம். பின்னர், புதிய பிரச்சனைகளை உருவாக்கி அதற்கும் தீர்வு தேடுகிறோம். முதலில் இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும். நாம் சவால்களை எரிபொருளாக்கி, தீர்வுச் சுடர் ஏற்றி உலகுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறினார்.
பாரதிய சிக்ஷன் மண்டலின் மஹாமந்த்ரி ஸ்ரீ பரத் சரண் சிங் அவர்கள் நன்றியுரையில், பங்குபெற்ற பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், SGT பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் குழுவிற்கும், அனைத்து ஊழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார். விஷன் பார் விக்ஷித் பாரத் 2024 மூலம் பாரதத்தின் ஞான பரம்பரையைப் பற்றியும், நமது பாரம்பரிய கல்விமுறை பற்றியும், இன்றைய தொழில் நுட்பமாம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய செய்திகளை கண்காட்சியில் காட்சிப்படுத்த உதவிய ISRO, DRDO, BRAHMOS, IISER, IIT, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை, கேந்திரிய வித்யாலயா ஆகிய அமைப்புக்களுக்கும் தமது நன்றிகளைக் கூறி நிறைவு செய்தார்.