“The patriot Chidambara Bharathi who rose in anger upon witnessing injustice.”

VSK TN
    
 
     

1940களின் துவக்கத்தில் மஹாத்மா காந்தியின் அறைகூவலை வெகு பொறுப்பாக தலை மேல் ஏற்றுக் கொண்டு மதுரை மாவட்ட தேச பக்தர்கள் வயது வித்தியாசமின்றி ஆண் -பெண் வேறுபாடின்றி தனிநபர் சத்தியாக்கிரகத்தில் இறங்கினார்கள். அதிலும் இளைஞர்கள் பங்கு மிகவும் பாராட்டத் தக்கதாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பாரத நாட்டு வீரர்கள் ராணுவத்தில் இணைந்து நேச நாட்டுப் படைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்து விட்டதை ஆங்கில அரசு கௌரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டிருந்தது. அதுவும் ஆகஸ்ட் 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு ‘ ‘செய் அல்லது செத்து மடி’ என்ற இரண்டும் வெற்று கோஷங்களாயில்லாமல் தாரக மந்திரங்களாய் மாறின. இது வரை ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் களத்தில் குதிக்க வைத்தன.

அப்படி ஒரு மகத்தான நாள் அக்டோபர் 2, 1942. காந்தி மகானின் பிறந்த நாளை ஒட்டி பேரணிகளும் பொதுக்கூட்டமும் நடந்து கொண்டிருந்தன. மகிளா காங்கிரஸ் பெண்கள் அன்னியத் துணி பகிஷ்கரிப்பு- அவற்றைத் தீயிட்டு எரித்தல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். கலைந்து போகச் சொல்லி போலீஸ் கெடுபிடி அதிகரித்துக் கொண்டே போயிற்று. மகளிர் அசைந்து கொடுப்பதாயில்லை. கூட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அங்கிருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் (தீச்சட்டி கோவிந்தன் இவருக்கு இன்னோர் பெயராம்) தன் கான்ஸ்டபிள்களுக்கு ஒரு குயுக்தியைத் தெரிவித்தார். போலீஸ்காரர்கள் மகளிர் அனைவரையும் போலீஸ் வண்டியில் ஏற்றி காட்டுக்குள் கும்மிருட்டில் இறக்கி விட்டதும் இல்லாமல் அவர்கள் உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நிர்வாணப் படுத்தி கிளம்பிப் போனார்கள்.

விடியும் வரை புதருக்குள் மறைந்து மானத்தைக் காத்துக்கொண்டு அண்டை அயலில் இருந்த கிராமத்தவர்கள் உதவியால் மீண்டு வந்து ஊர்க்காரர்களிடம் தெரிவித்தார்கள். (என்ன, 1993ல் வெளிவந்த ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் என்ற ஆங்கில மற்றும் 1996ல் வெளிவந்த இந்தியன் தமிழ் திரைப்படங்கள் நினைவுக்கு வருகின்றனவா?)
நடந்தவற்றைக் கேள்விப்பட்ட இளைஞர்கள் கொதித்துப் போயினர்.எந்த வகையிலாவது இந்த பாதகச் செயலை நடத்திய விஸ்வநாதன் நாயரைப் பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அவனை விடாமல் கண்காணித்தார்கள். ஒரு வேடிக்கையைப் பாருங்கள், இத்தகைய கயமையைச் செய்த விஸ்வநாதன் தினமும் காலை மீனாக்ஷி அம்மனைத் தரிசிக்க கோயிலுக்கு வருவானாம், அதைக் குறித்துக் கொண்ட இளைஞர்கள், ஒரு நாள் காலை விஸ்வநாதன் மீது திராவகம் வீசிவிட்டு இடத்தைவிட்டு வேகமாகக் கலைந்து போனார்கள். விஸ்வநாதன் அதிகம் பாதிப்பின்றி தப்பினான்.

போலீஸ் சும்மா விடுமா? வேட்டையாடி ஒவ்வொருவரையும் பிடித்தார்கள். பிடிபட்ட பலரில் ஒரு துடிப்பான இளைஞன் தான் சிதம்பர பாரதி. அன்று அவருக்கு 27-28 வயதுதான். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சாட்சிகள் இல்லாததால் விடுவிக்கப் பட்டார். ஆயினும் போலீஸ் வேண்டுமென்றே பொய் குற்றச் சாட்டுக்களை அவர்மீது சுமத்தி இரண்டாண்டுகள் சிறைவாசம் பெற்றுத் தந்தார்கள். இவர் வாழ்க்கையில் விடுதலைப் போராட்டத்தில் இதைப் போல சிறிதும் பெரிதுமாக மொத்தம் 14 ஆண்டுகள் சிறையில் கழிந்தன.

1905, ஜூன் 5 அன்று பிறந்த ரெங்கசாமி சிதம்பர பாரதி, திலகர்- வ உ சிதம்பரம் பிள்ளை- சுப்பிரமணிய சிவா வழியில் தீவிர சுதந்திர போராட்ட வீரர். சிவாவின் மறைவிற்குப் பின்னர் தீரர் சத்தியமூர்த்தி, காமராஜர் தலைமையில் இயங்கினார். விடுதலைக்குப் பின்னர், 1957ல் மானாமதுரை தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகிறார். இறுதியில் தன்னுடைய 82வது வயதில் ஏப்ரல் 30, 1987ல் காலமானார்.

 

எம் ஆர் ஜம்புநாதன்

Next Post

Sri Ramanujacharya was the foremost exponent of the principles and philosophy of Sri Vaishnavism.

Fri May 2 , 2025
VSK TN      Tweet    நாம் முதலில் வைணவம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வோம் வைணவம் என்பது விஷ்ணு மற்றும் அவரது அவதாரங்களினை மையப்படுத்தப்பட்ட பக்தியான இந்துத்துவத்தின் ஒரு பகுதியாகும் அது ஒன்றின் வல்லுற தோன்றியது என்பது ஆகும் அதாவது ஒரே அழகியான தெய்வத்தின் பல்வேறு வடிவங்களை கணக்கற்ற தோற்றம் அறிந்து கொள்ளல் ஆகும் இதை நாம் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் 77 வது ஸ்லோகமான விஷ்ணு விஷ்ணு மூர்த்தி மகாமூர்த்தி தீர்த்த […]