Savarkar and Social Harmony

VSK TN
    
 
     

இன்று வீர விநாயக் தாமோதர் சாவர்க்கரின் ஜெயந்தி தினம். இதே நாளில் (மே 28) 1883ல் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே உள்ள பாகுர் என்ற கிராமத்தில், தாமோதர் பந்த் மற்றும் ராதாபாய் அவர்களின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவருடன் பிறந்தோர் மூவர்: கணேஷ் – அண்ணன், நாராயண் – தம்பி, மைனா பாய் – தங்கை.   

 

சாவர்க்கரின் சுதந்திர வேட்கையும் அதன் காரணமாக அவர் ஏற்ற பல இன்னல்களும் இன்றும் நமக்குப் பாடங்கள்.  அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் வர்ணனையில், “சாவர்க்கர் என்றால் வேகம், தியாகம், தவம், தத்துவம், தர்க்கம், இளமை, குறி தவறாமை, கூர்மை, பிரமிப்பு, அலைபாயும் ஆன்மா, சக்தி, கடுமை, ஒளி, கற்பனை, உயர்ந்த சிந்தனை, எப்படிப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட ஒரு மனிதர் – கவிஞன், புரட்சிக்காரன்.”

 

இதில் விடுபட்டுப்போன விஷயம் ஒன்றுள்ளது, சமூக நல்லிணக்கம். ஆம், சாவர்க்கர் என்றால் சமூக நல்லிணக்கம்.

 

நம் சமூகம் பலவருடங்களுக்கு முன் தொலைத்துவிட்டு இன்றும் தேடிக்கொண்டிருக்கும் பொக்கிஷம், சமூக நல்லிணக்கம். இன்றும் பல பெரியவர்கள்,வழிபாட்டுத் தலங்கள், மக்கள் பயன்பாட்டில் உள்ள நீர் ஆதாரங்கள், மயானபூமி ஆகியவற்றின் மீது அனைத்து மக்களுக்கும் சம உரிமை உண்டு. அது எக்காரணம் கொண்டும் மறுக்கப்படக்கூடாது.” என்று கூறி வருவதைப் பார்க்கிறோம். பாரதத்தில், எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற உணர்வு தெற்கே மஹாகவி பாரதிக்கு வந்த அதே சமயம் வடமேற்கே சாவர்க்கருக்கும் தோன்றியது என்று கூறினால் மிகையாகாது.

 

 

 

தீண்டாமையைப் பற்றி அவர், “நான் என் அருகே நிற்கும் சக மனிதனைத் தொட்டால் தீட்டு, ஆனால் நான் நாய்களோடும் பூனைகளோடும் விளையாடிக்களிப்பேன். இப்படிப்பட்ட ஒரு சிந்தனை எனக்கு இருக்குமாயின் நான் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு கொடுங்குற்றம் புரிகிறேன். தீண்டாமையை நீக்கவேண்டியது நம் கடமை என்பதைத் தாண்டி, இந்தத் தீஞ்செயலை நமது தர்மத்தின் எந்த ஒரு கூறு கொண்டும் ஞாயப்படுத்தமுடியாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே தீண்டாமையைத் தூக்கியெறிவதை தர்மத்தின் கட்டளையாக எண்ணி செயல்படுத்தவேண்டும்.

ஆதாரம்: சமக்ர சாவர்க்கர் வான்மய, தொகுப்பு 3

 

மே 19, 1929 அன்று மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மால்வான் நகரில் நடந்த ஒடுக்கப்பட்டோருக்கான மாநாட்டின் இரண்டாம் நாள், சாவர்க்கர் ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் பூணூல் அணிவித்து காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்வித்தார்.

 

அப்பொழுது பேசிய சாவர்க்கர், “கடந்த ஏழு தலைமுறைகளாக யார் வேதம் படிக்கலாம் என்பது பற்றி ஒரு பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறது. இதோ வேதம், இங்கே பூணூல் இருக்கிறது, எல்லோரும் எடுத்துக்கொள்ளுங்கள். இன்று ஹிந்து அல்லாதோர் வேதம் படிக்கிறார்கள், நம் ஹிந்து மஹார் சஹோதரர்கள் ஏன் வேதம் படிக்கக்கூடாது? இந்த கொடுமையை இன்றே முடிவுக்கு கொண்டுவருவோம், இனி சண்டை வேண்டாம். உங்களுக்கு, நாங்கள் செய்த கொடுமைகளுக்கும், தீங்குகளுக்கும், பாவங்களுக்கும் பிராயச்சித்தம் தேடுவோம். அரசியல் சூழ்ச்சிகளால் பிரிந்தோம், போனது போகட்டும். புதிய துவக்கம் இது. நாம் அனைவரும் ஒரு சபதம் ஏற்போம் – நாம் செய்த பாவங்கள் இன்றோடு போகட்டும். பாரதத்தின் பெருமையையும் உன்னதமான கலாச்சாரத்தையும் மீண்டும் உலகத்திற்கு பறைசாற்றுவோம். எவன் ஒருவன் தீண்டாமை என்னும் கொடுமையை தன் மதத்தின் ஒரு அங்கமாகக் கருதுகிறானோ, அவன் மிகக்கேவலமானவன் என்பதை கருத்தில் கொள்வோம்.

ஆதாரம்: தனஞ்சய் கீர், சாவர்க்கர் அண்ட் ஹிஸ் டைம்ஸ் (ஆங்கிலம்)

 

1930களில் தீண்டாமைக்கு எதிரான குரல்கள் வலுத்துவந்த நேரத்தில், விநாயக சதுர்த்தி சமயத்தில், ரத்னகிரி விட்டல் கோவிலில் ஒடுக்கப்பட்டோரை கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள தடை விதித்தது, ஆதிக்க சாதி கும்பல் ஒன்று. வெகுண்டெழுந்த சாவர்க்கர் தனியாக ஒரு விநாயக சதுர்த்தி பந்தலை உருவாக்கி ஹிந்துக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தார். அங்கு கணேச விக்கிரஹம், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரால் ஸ்தாபிக்கப்பட்டது. அங்கிருக்கும் மக்களை அனைவருக்குமான காயத்ரி மந்திரம் ஓதும் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் முதல் பரிசு பெற்றார்.

 

இந்த சமயத்தில், ஹிந்து சமுதாயத்தில் அனைவருக்குமான ஒரு கோவில் தேவை என்ற எண்ணம் சாவர்க்கர் அவர்களின் மனதில் உதித்தது. அதன்படி உருப்பெற்றதே, ரத்னகிரி பதித பாவன் மந்திர் (எளியோரை ஏற்றிவிடுபவன் கோவில்). பாகோஜி பாலோஜி கீர் என்ற ஒரு தனவந்தர் அளித்த கொடையின் மூலம் இந்தக் கோவில் கட்டப்பட்டு பிப்ரவரி 22, 1931அன்று வேத முறைப்படி பண்டாரி ஜாதியைச் (முன்பு கள் இறக்கிய சமுதாயம், கடற்போர் வீரர்கள் என்று கூறுவார்கள். பண்டாரி என்றால் கருவூல மேலாளர் என்று பொருள்) சேர்ந்த பாகோஜி கீர் அவர்களால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தக்கோவில் எவ்வித சாதிப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான ஒன்று என்று சாவர்க்கர் பறைசாற்றினார். இங்கு நடைபெறும் கணேச உத்சவம் மிகவும் பிரசித்தமானது.

 

1938ல் சாவர்க்கர் அவர்கள் தலைவராக இருந்த ஹிந்து மகாசபை ஒரு பத்திரிக்கைக் குறிப்பில், தீண்டாமைக்கு எதிராக தாங்கள் எடுத்த முயற்சிகள் பற்றி கூறும் பொழுது, “பாரிஸ்டர் சாவர்க்கர் அவர்கள் ஹிந்து மகாசபை தலைவராகப் பொறுப்பேற்ற பின், ஹிந்துஸ்தானம் முழுவதிலும் சுமார் 300-400 கூட்டங்கள் நடத்தி லட்சம் பேர்களுக்கு மேலாக தீண்டாமைக்கு எதிரான போரில் இணைத்திருக்கிறார். இதற்கு அவரே முன்னுதாரணமாக ஒவ்வொரு கூட்டத்திற்குப் பின் ஒடுக்கப்பட்ட மக்களுடனும் அவர்கள் தலைவர்களுடனும் நீர் மற்றும் உணவு பகிர்ந்து உண்டிருக்கிறார். நூறு ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்றிருக்கிறார். கடந்த மே மாதம் ஐந்நூறு ஒடுக்கப்பட்ட மக்களுடன் சமபந்தி போஜனத்தில் பங்கேற்றார். கோலாப்பூரில் நடந்த, ஒடுக்கப்பட்டோர் மற்றும் மேல் சாதியினருக்கு இடையே நடந்த திருமணங்களை அவர் வரவேற்று அறிக்கை கொடுத்தது நமக்கு நினைவிருக்கும்.

ஆதாரம்: வீர் சாவர்க்கார்ஸ் வ்ரில் விண்ட் ப்ரோபகண்டா, டிசம்பர்1937 அக்டோபர் 1941 (வீர சாவர்க்கரின் சூறாவளி கொள்கைப்பரப்புக் கூட்டங்கள்)

இப்படி தன் வாழ்க்கையில் ஒரு பாதியை பாரதத்தை அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுப்பதற்கும், மற்றொரு பாதியை ஜாதி பேதத்தை அழித்து, சமூக நல்லிணக்கம் பேணவும் அயராது உழைத்த வீர விநாயக் தாமோதர் சாவர்க்கர் அவர்கள் பிறந்த தினமான இன்று, அவர் நினைவைப் போற்றும் விதமாக “வழிபாட்டுத் தலங்கள், மக்கள் பயன்பாட்டில் உள்ள நீர் ஆதாரங்கள், மயானபூமி ஆகியவற்றின் மீது அனைத்து மக்களுக்கும் சம உரிமை உண்டு. அதை நாம் அனைவரும் இணைந்து உறுதிப்படுத்துவோம்.” என்று சபதம் ஏற்போம்.

 

சாவர்க்கர் எழுதிய “ஜ்யோஸ்துதே” (வெற்றிகொள்வாய் நீ) என்ற அழகான கவிதை/ பாடலில் இருந்து இரு வரிகளை நாம் என்றும் நம் நினைவில் கொள்வோம்.

வரம் தரும் அன்னையே, சுதந்திரத்தாயே, எங்கள் பாரதத்தை என்றும் உன் அரவணைப்பில் வை.

வெற்றியின் பொருளே, என் அருமை பகவதியே, சுதந்திர மூச்சே, நான் உன்னை நமஸ்கரிக்கிறேன்.

 

Next Post

ABVP PRESS RELEASE ON ANNA UNIVERSITY ISSUES

Mon Jun 2 , 2025
VSK TN      Tweet    …செய்தி அறிக்கை… சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை அளித்ததை ABVP தென் தமிழகம் வரவேற்கிறது. தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் இல்லாத அளவிற்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. […]