Kamban Atippodi S. Ganesanar built a temple for the Goddess Tamil.

VSK TN
    
 
     

தமிழ்த் தாய்க்குக் கோயில் எழுப்பிய கம்பன் அடிப்பொடி சா.கணேசனார் பிறந்த நாள் இன்று . ஜூன்,6 1908.மகாகவிபாரதிக்கு ஒரு பாவேந்தர் வாய்த்ததைப் போல் கவிச்சக்ரவர்த்தி கம்பருக்கு வாய்த்தவர் நம் சா.கணேசனார்.போற்றுதலுக்குரிய சுதந்தரப் போராட்ட வீரர்.

ஆனால் ஆலமரம் போன்ற இராஜாஜியின் பற்றாளர் .அதனால் தான் விழுதாகவே வாழ முடிந்தது.சுதந்தரப் போராட்டத்தில் தம் சொத்தை எல்லாம் இழந்தும் தன்மானமிழக்காத தன்மதிப்புச் செம்மல். தமிழும், கம்பக்காவியமும் இருக்கும் வரை கம்பரடிப் பொடியாரின் புகழ் நின்று நிலவும் இலக்கிய ரசனையாளர், ஆராய்ச்சித் திறனாளர், விஞ்ஞானத்தில் மெய்ஞானம் கண்ட மெய்யன்பர், தமிழ் மரபுக்காவலர், இவை எல்லாவற்றையும் விட “கம்பன் அடிப்பொடி” என மக்களால் அழைக்கப்பெற்றவர் சா.கணேசனார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செல்வவளம் மிக்க சாமிநாதன், நாச்சம்மை தம்பதியினருக்குப், புதல்வராக ஜூன் 06/06/1908 ஆம் நாள் சா.கணேசன் பிறந்தார்.முறையாக கல்வி கற்றது குறைவே. தானாகவே படித்து கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார். பர்மா சென்று வியாபார நுணுக்கங்களைத் தெரிந்து கொண்ட போதிலும், மனம் தேசிய இயக்கத்தின் பால் ஈர்க்கப்பெற்றது. காரைக்குடியில் ராய.சொக்கலிங்கம் போன்றோருடன் இணைந்து, அரசியல் பணியில் ஈடுபட்டார். இளம் வயதில் ‘ஆகஸ்ட் போராட்டத்தில்,’ தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

 

சா.கணேசன், தேவகோட்டை நீதி மன்றத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் , காவலர் சுட்டனர். அதில் சலவைத் தொழிலாளி ஒருவர் இறந்ததால், ஆத்திரம் கொண்ட போராட்டக்காரர்கள் சலவைத் தொழிலாளியின் துணி மூட்டையில் பெட்ரோலை ஊற்றி, தீயிட்டு கோர்ட்டுக்குள் எறிந்தனர். கோர்ட் பற்றி எறிந்தது. சா.கணேசன் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு, இரண்டு ஆண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 

விடுதலைக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். மாகாண காங்கிரஸ் கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராக இருந்தார்.  1962  முதல் 1967  வரை தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகவும் 1968 முதல் 1974 வரை மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார். காந்திய நெறியில் மக்கள் பணி செய்து வந்தார்.

 

இவர், எப்போதும் சட்டை அணிந்ததில்லை. அதற்கு ஒரு வரலாறு உண்டு.கானாடுகாத்தானில் 1938 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்ட கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. அதில், பங்கேற்க தீரர் சத்தியமூர்த்தி, டாக்டர் சுப்ராயன், பாரிஸ்டர் ஜோசப், என்.கிருஷ்ணமூர்த்தி போன்ற தலைவர்களுடன் சென்ற சா.கணேசனைக் காவலர் தடுத்து நிறுத்தினர். மீறி சென்றால் சுட்டுவிடுவதாக மிரட்டினர். அப்போது, தன் சட்டையைக் கிழித்து நெஞ்சைத் திறந்து காட்டி ‘சுடுங்கள்’ என்று வீறு கொண்டு எழுந்தார். அது முதல் தன் வாழ்நாள் இறுதிவரை அவர் சட்டை அணிவதையே நிறுத்தி விட்டார். காந்தியைப் போல 4 முழம் கதர் வேட்டி, மேலில் ஒரு துண்டையுமே அணிந்து வந்தார்.

 

பிள்ளையார்பட்டி தல வரலாறு, நுாற்பவர்க்கு, ராஜராஜன், தமிழ்த் திருமணம் போன்ற நுால்களை எழுதியுள்ளார். கவிதை நுால்களையும் படைத்துள்ளார்.உலகில் வேறு எங்கும், எம்மொழிக்கும் இல்லாத கோயிலை, மொழியின் பெயரால் தமிழ்த்தாய்க் கோயிலாக, தமிழக அரசின் ஆதரவோடு, கம்பன் மணிமண்டப வளாகத்தில் நிறுவினார்.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணி மண்டப வளாகத்தின் தெற்கே அமைந்துள்ளது தமிழ்த் தாய் கோவில்.தமிழ்த் தாய்க்குக் கோவில் எழுப்ப வேண்டும் என்ற சா. கணேசனின் கனவை நினைவாக்கும் வகையில், 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி, கால்கோள் விழா நடந்தது.கோவில் கட்டுமானப் பணிகளும் தொடங்கின.

 

சா. கணேசன் மற்றும் சிற்ப கலாசாகரம் என்று போற்றப்படும் ம. வைத்தியநாத ஸ்தபதியின் மகனும், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வை. கணபதி ஸ்தபதி ஆகியோர் இணைந்து தமிழ்த் தாய்க்கு வடிவம்கொடுத்தனர். சிலை உருவானது.பணிகள் முற்றுப்பெற்று,  1992  ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி, அதாவது திருவள்ளுவர் தினத்தன்று,தமிழ்த் தாய்க் கோவில் திறக்கப் பெற்றது..அன்று முதல் இக்கோவிலில் தமிழ் வழிபாடு நடந்து வருகிறது.

 

கம்பன் மணி மண்டபத்தின் வலப்புறத்தில் வடக்கு நோக்கியவாறு தமிழ்த் தாய்க் கோவில் அமைந்துள்ளது.மும்முனை நிலத்தில் ஆறுபட்டை, ஆறு நிலை, ஆறு விமானங்கள் கொண்ட கோவிலாக அமைந்துள்ளது.தமிழ்த் தாய்க் கோவிலின் பரிவார தெய்வங்களாக, வட கீழ் கோடியில் வள்ளுவரும், தென் கோடியில் இளங்கோவடிகளும், வட மேல் கோடியில் கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர்.

 

தமிழ்த் தாய்க் கோவிலின் நுழைவாயிலின் முன் ஒலித்தாய் [தமிழ் மொழியின் ஒலி வடிவம் ] , வரித்தாய் [தமிழ் மொழியின் வரி வடிவம் ] ஆகியோர் துவார பாலகியராக நிறுவப்பெற்றிருக்கின்றனர்.கருவறையில் தமிழ்த் தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில் காணப்படுகின்றனர்.கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரை பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறாள்.

வலது முன் கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உத்திராட்ச மாலையும், கீழ்இடக்கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன. சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில்,அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த் தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன.வலது கால் கீழே தொங்கியவாறும், இடது கால் மடித்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக வீற்றிருக்கிறாள்.தமிழ்த்தாயின் கால்களைச் சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன.

 

இவரது மாபெரும் பணி  1939  ஆம் ஆண்டில் காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்ததே. கணேசனாருக்கு இந்த ஈடுபாடு ஏற்பட காரணமாக இருந்தது, காரைக்குடியில் இராமகிருஷ்ணன கல்விச் சாலையில், மோகனுார் கோவிந்தராச அய்யங்காரின் கம்பராமாயண சொற்பொழிவாகும். வடபுலத்தின் கதையென கருதிப் புறந்தள்ளிய, இராம காவியத்தைத் தென்புலத்தின், ஒட்டு மொத்த தமிழினத்தின், எழுச்சி காவியம் மட்டுமல்ல, மானுட குலத்தின் மகத்தான வெற்றியைப் பாடும் காவியம், என்று காட்டிய பெருமை, இந்த காரைக்குடி கம்பன் கழகத்திற்கே உண்டு.இன்று, தமிழகத்தில் மட்டுமன்றி, உலக அளவில் பல்வேறு கம்பன் கழகங்கள் தோன்றிடக் காரணமாகிய தாய்க் கழகம், காரைக்குடி கம்பன் கழகம்.

 

இதன் துவக்க விழாவில் தலைமை ஏற்று பேசிய இரசிகமணி டி.கே.சி., “காரைக்குடியில் கம்பன் பணி தொடங்கி விட்டது. இனி அது உலகெங்கும் பரவிவிடும்” என்று கூறிய வாக்கு பலித்து விட்டது.கணேசனார் தமது ஆய்வில் பொது யுகம், 886  ஆம் ஆண்டு விசுவாச ஆண்டு, பங்குனி திங்கள் 4 ஆம் நாள் கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டதை அறிந்தார். அந்த அடிப்படையில் பங்குனி மாதம், மகம், பூரம், உத்திர நட்சத்திர நாட்களில், காரைக்குடியில் மூன்று நாட்கள் விழாவாகவும், அஸ்தம் நட்சத்திரத்தில் கம்பன் சமாதி கொண்ட நாட்டரசன் கோட்டையில் கம்பன் திருநாளைக் கொண்டாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

 

கம்பன் திருநாளின் முதல் நாள் திருநாள் மங்கல பேரவையைக், கம்பன் மலர் வணக்கத்துடன் தொடங்குவார். அதற்கெனவே 108  போற்றி தொடர்கள் அடங்கிய கவிமலரை இயற்றியிருக்கிறார். நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயிலில் அஸ்த நாள் வழிபாடு நிகழ்த்துவதற்கென்று, கம்பராமாயண பாடல்கள் ஐந்திணை, “கம்பன் அருட்கவி ஐந்து” எனத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு திருவையாறு, தியாகராசர் சமாதியில் பாடும் பஞ்ச ரத்ன கீர்த்தனைக்குரிய, அதே ஐந்து கனராகங்களில், ஸ்வரம் அமைத்து பாட ஏற்பாடு செய்தார். இன்றும் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.1970  ஆம் ஆண்டில் நடந்த கம்பன் விழாவில், நீதிபதி எஸ்.மகராசன், சா.கணேசனுக்குக் ‘கம்பன் அடிப்பொடி’ என்ற பட்டத்தை வழங்கினார்.

நேர்மை, நேரந்தவறாமை இரண்டும் அவருக்கு பக்க பலம். உரிய நேரத்தில் கம்பன் விழாவிற்கு அழைக்கப்பட்ட முக்கிய விருந்தினர்கள் மேடைக்கு வரவில்லை என்றால், அவர்கள் முதலமைச்சராக இருந்தாலும் காத்திருக்க மாட்டார். தாட்சண்யம் காட்டாமல் ‘கம்பன் வாழ்க’ என்று முழங்கி உரிய நேரத்தில் ஆரம்பித்து விடுவார். இதற்கு பயந்தே முக்கிய விருந்தினர்கள் உரிய நேரத்தில் மேடையேறி விடுவார்கள். அதே போல் எப்பேர்பட்ட பேச்சாளராயினும் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பேசி முடித்து விட வேண்டும். நேரம் காட்ட பேச்சு மேடையின் மீது சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். விளக்கு எரியும்போது பேச்சை நிறுத்தியே தீர வேண்டும் என்பது கம்பன் கழக வாடிக்கை.கடை கோடி மக்களுக்கும், ராம காதையை கொண்டு சென்ற கம்பன் அடிப்பொடி சா.கணேசனார், 1982 ஜூலை 28 இல் மறைந்தாலும் நம்மோடு இன்றும் வாழ்கிறார், வழி நடத்துகிறார்.

 

                                                                                                           

 

 

 

— Veeramani Veerasamy

 

Next Post

ப ஞ் சா மி ர் த ம்

Thu Jun 6 , 2024
VSK TN      Tweet    ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 ஜூன் 6) அமாவாசை. பஞ்சாமிர்தம் படியுங்கள் 1. பலே பிரதீப் ஷெட்டி மே 26 அன்று உடுப்பி மாவட்டத்தில் (கர்நாடகா) இன்னாஞ்சே – படுபித்ரி இடையே தண்டவாளத்தில் வெல்டிங் பழுதடைந்ததைக் கவனித்த ஒரு தண்டவாளப் பராமரிப்பாளர் (காங் மேன்) பிரதீப் ஷெட்டி ரயில் விபத்தைத் தடுத்தார். அதிகாலை 2:25 மணி. பழுது குறித்து அவர் உயர் […]