அகண்ட பாரத பிரகடனம் !

3
VSK TN
    
 
     

1801 ஜுன் 12 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ ஜம்பு தீவ பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.

எங்கே இருக்கிறது ஜம்புத்தீவு என விழிக்காதீர்கள். ஒரு காலத்தில் இந்தியாவுக்கு ஜம்புத்தீவு என்ற பெயரும் இருந்தது. அதைத் தமிழில் நாவலந்தீவு என்றும் அழைத்திருக்கிறார்கள்.

இதற்கு, நாவல் மரங்கள் நிறைந்த தீவு என்று அர்த்தம். பழைய சமஸ்கிருத, புத்த இலக்கியங்களில் ஜம்புத்தீவில் உள்ள பாரதம் என்று உள்ளது….

வாருங்கள் அந்த பிரகடனத்தில் என்ன உள்ளது என பார்ப்போம்..

சின்னமருதுவின் திருச்சிப் பிரகடனம்

இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்.

ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,

மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள்.

உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.

அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்…
ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்… இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது…

இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!….

இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்…

இப்படிக்கு, மருதுபாண்டியன் …
பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.(

(1801 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் வெள்ளையர்களால் கைப்பற்றப் பட்ட இவ்வறிக்கை திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் ஒட்டப் பட்டிருந்தது. இங்கே மொழி பெயர்த்து சுருக்கித் தரப்பட்டுள்ளது).

மருது வெளியிட்ட தென்னிந்திய மக்களுக்கான இந்த பிரகடனம் அரசியல் மையமான திருச்சிக் கோட்டையிலுள்ள நவாப் அரண்மனையின் வாயிலிலும், இந்தியா முழுவதற்குமான பிரகடனம், நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்லும் சிறீரங்கம் கோயிலின் மதிற்சுவரிலும் ஒட்டப்படுகின்றன.

எரிமலையாய்க் குமுறி வெடிக்கும் திருச்சி பிரகடனத்தின் சொற்கள் நம் செவிப்பறைகளில் வந்து மோதுகின்றன.

சின்ன மருதுவின் ஆணை, வணங்கச் சொல்லவில்லை, வாளேந்தச் சொல்கிறது; பக்தியைக் கோரவில்லை, வீரத்தைக் கோருகிறது. “”ஆதலால் மீசை வைத்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் அனைவரும்…”

உங்களைத்தான் அழைக்கிறார் சின்ன மருது….

–திரு.புகழ் மச்சேந்திரன் புகழ்

3 thoughts on “அகண்ட பாரத பிரகடனம் !

  1. Pingback: ยูฟ่า168

Comments are closed.

Next Post

"வீரவாஞ்சி "

Sat Jun 17 , 2023
VSK TN      Tweet      பாரத நாட்டின் விடுதலைக்காக படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், மாணவர், இளைஞர் முதியவர் என அனைத்து தரப்பினரும் போராடினர். அப்படி போராடி இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கானவர்களின் பெயர்களும் உருவங்களும் கூட நம்நாட்டு பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் கூட இல்லாமல் போயிற்று என்பது வருந்தத்தக்க உண்மையாகும். இன்றைய பள்ளி அல்லது கல்லூரி மாணவரிடம் சென்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை கேட்டால் முழி பிதுங்கி நிற்பார்கள். அதே மாணவரிடம் சினிமா […]