Gopalswamy Doraiswamy Naidu

VSK TN
    
 
     

ஜி.டி. நாயுடு என்று பிரபலமாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். ஒருமுறை காலி மருந்துப் புட்டி ஒன்றைப் பார்த்தார். அது அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணி என்பதை தெரிந்துகொண்டார். அதை அமெரிக்காவில் இருந்து வரவழைத்து, இங்கு அமோகமாக விற்றார். அந்த ஆண்டில் மட்டும் ரூ.800 லாபம் சம்பாதித்தார். அப்போது அவருக்கு வயது 18. ஹோட்டலில் சர்வராக வேலைபார்த்து, பணம் சேமித்தார். அதில், ஒரு ஆங்கிலேய அதிகாரியின் பைக்கை வாங்கி, அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தார். அதை மீண்டும் பொருத்தி பக்கவாட்டில் இன்னொருவர் அமர சைட்பாக்ஸ் ஒன்றையும் வடிவமைத்து இணைத்தார். திருப்பூரில் பருத்தி ஆலை தொடங்கினார். பெரும் தொழிலதிபராக உயர்ந்தார்.

தொழிலை விரிவுபடுத்த பம்பாய் சென்றவருக்கு எதிர்பாராதவிதமாக நஷ்டம் ஏற்பட்டது. வெறுங்கையுடன் வீடு திரும்பினார். ஆனாலும், தோல்வியால் துவளவில்லை. போக்குவரத்து தொழில் செய்த ஸ்டேன்ஸ் என்பவரிடம் ஒரு பேருந்தை கடனாகப் பெற்று பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார். ‘யுனைடெட் மோட்டார் சர்வீஸ்’ நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, வெட்டுக் காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார். ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3-வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்தார். இந்தியாவிலேயே தயாரிக்க அரசிடம் நிதி கோரினார்.

காழ்ப்புணர்ச்சி கொண்ட பிரிட்டிஷ் அரசு மறுத்தது. மனம் உடைந்த இவர் ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு இலவசமாகவே அந்த உரிமையை கொடுத்துவிட்டார். தனது கண்டுபிடிப்புகள் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதாலேயே, அவற்றை பதிவு செய்யாமல் வைத்திருந்தார். இவர் மேல் திணிக்கப்பட்ட அதிகபட்ச வரி காரணமாக, இவரது பல கண்டுபிடிப்புகள் நாட்டுக்குப் பயன்படாமல் போய்விட்டன. விவசாயத் துறையிலும் பல சாதனைகள் புரிந்தார். இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என பெயரிட்டு ஜெர்மன் கவுரவித்தது. பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், பல தொழிற்சாலைகளைத் தொடங்கினார்.

தமிழக தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை எனப் போற்றப்பட்டார். நீரிழிவு, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்து தயாரித்தார். சாதாரண கிராமத்தில் பிறந்து தனது திறமையால் பல அரிய சாதனைகளைப் படைத்த ஜி.டி.நாயுடு 81-வது வயதில் (1974) மறைந்தார். கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அவரது அறிவாற்றலை இன்றும் பறைசாற்றுகிறது.

 

— திரு.அனுக்ரஹா

Next Post

சீர்காழி கோவிந்தராஜன் !

Fri Mar 24 , 2023
VSK TN      Tweet     சீர்காழி நினைவு தினம் இன்று. விநாயகனே வினை தீர்ப்பவனே” என்ற இவரின் பாடல் இல்லாத கிராமத்து மார்கழி விடியற்காலை குறைவு… கனீர்குரலில் சாகாவரம்பெற்ற பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் முனிவர் என்றால் இவர்முகம்தான் ஞாபகத்துக்கு வரும்… பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனின் நினைவு தினம் இன்று. ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்னும் தத்துவப் பாடலையும், ‘மரணத்தைக் கண்டு கலங்கும் விஜயா’ என்று போதனை செய்யும் கிருஷ்ணனின் குரலையும தமிழர்களின் காதுகளிலும் […]