VSK TN
“நாங்கள் ஹிந்துக்களாகப் பிறந்தோம், ஹிந்து சமயத்தைக் கடைபிடித்து வாழ்கிறோம்” என்று தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத் துறை (எச்.ஆர் & சி.இ) ஊழியர்கள் மே 20 அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஆணையர் முதல் கதைநிலை ஊழியர்கள் வரை – துறையில் பணிபுரியும் அனைவரும் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்கள் இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்தார்கள். சென்னை வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீதரன் தாக்கல் செய்த பொது நல வழக்கு மீது மார்ச் 3 ம் தேதி, நீதிபதிகள் எம். எம். சுந்த்ரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய நீதிமன்றத்தின் அமர்வு அந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அறநிலையத் துறை சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் அருகிலுள்ள ஹிந்துக் கோயில் சன்னிதியில், கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர், அறங்காவலர்கள் முன்னிலையில் இவ்வாறு உறுதிமொழி எடுக்க வேண்டும்.என்பது 1961 செப்டம்பர் 23 அன்று மாநில அரசு “Manner of Proof of Professing Hindu Religion Rules” என்ற தலைப்பில் பிறப்பித்த ஆணையை வழக்கறிஞர் ஸ்ரீதரன் நீதிமன்றத்தில் நினைவூட்டினார்.
“நாங்கள் ஹிந்துக்களாகப் பிறந்தோம், ஹிந்து சமயத்தைக் கடைபிடித்து வாழ்கிறோம்” என்று அலுவலர்கள் சத்தியப் பிரமாணம் செய்து விட்டார்கள். அதாவது ஹிந்து அல்லாதவர்களுக்கு ஹிந்து சமய அறநிலையத் துறை வேலை தராது. ஹிந்து கோயில் இடங்கள் வேற்று மதத்தவர்களுக்கு வாடகைக்கு விடப்படமாட்டாது என்றும் இதிலிருந்து அர்த்தம் செய்துகொள்ள முடியுமா?
அண்மையில்தான் கொரோனா நிவாரணத்தைக் காரணம் காட்டி கோயில்களிடமிருந்து ரூ. 10 கோடி கறந்துவிட மாநில (மதசார்பற்ற) அரசு முயற்சி செய்த போது நீதிமன்றத்தின் தலையீட்டால் அது முறியடிக்கப்பட்டது. அதாவது கொரோனா ஊரடங்கு போன பிறகு ஹிந்துக் கோயில்கள் திறக்கப்பட்டதும் பக்தர்களுக்கு அன்னதானம், எளிய ஹிந்துக் குடும்பங்களின் சிறுவர் சிறுமிகளுக்கு கோயில் பிராகாரங்களில் சமயப் பயிற்சி வகுப்பு உள்ளிட்ட ஹிந்து சமுதாய நலன் கருதும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம் அல்லவா?