பத்மன்
“சனாதனம்” – இன்று பலர் வாயில் விழுந்து சங்கடப்படுகின்ற சொல்லாக மாறிவிட்டது. இதில் தெளிவு கிடைக்க, மகாகவி பாரதியின் வாக்கினிலே சனாதனம் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துகளைக் காண்போம். “மகாளி கண்ணுற்றாள் ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி!” என்று ரஷ்யப் புரட்சியை வாழ்த்தியதன் மூலம், தமிழுக்குப் புரட்சி என்ற புதுச் சொல்லைத் தந்த புதுமையாளர் பாரதி. அதேநேரத்தில் பழம் பெருமையையும் போற்றுபவர். அதனால்தான் “பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதீர்” என்று நமக்கு அன்புக் கட்டளையிட்டார். ஆனால், அந்த நினைவை அகற்றத்தான் பல தீய சக்திகள் இன்று போர் தொடுக்கின்றன.
சனாதனம் என்ற சொல்லுக்கு தொன்றுதொட்டு வருகின்ற நன்மரபு என்று பொருள். அது நமக்கு வழிகாட்டும் வெளிச்சம். சனாதனத்தில் தவறில்லை. ஆயினும், அதைப் பின்பற்றும் சிலரிடம் தவறு இருக்கிறது, அதனைத் திருத்த வேண்டுமே தவிர, சனாதனத்தையே ஒழிக்க நினைப்பது, வேர்களை வெட்டத் துடிக்கும் மூடத்தனத்தின் மணிமகுடம். உடலிலே ஓர் நோவு ஏற்பட்டுவிட்டது என்பதற்காக உடலையே வெட்டி எறிந்துவிட முடியுமா? நோயைத்தானே விரட்ட வேண்டும்! எலி புகுந்துவிட்டது என்பதற்காக வீட்டைக் கொளுத்துவார்களா?
எது சனாதனம்? “ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி, ஒருதாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?” என்றார் பாரதியார். “உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே, அன்றி வேறு குலத்தினர் ஆயினும் ஒன்றே” என்றும் பாடியுள்ளார். இந்தச் சகோதர மனப்பான்மையைக் கொடுத்திருப்பது சனாதனம். “ஹிமாலயம் சமாரப்ய யாவதிந்து சரோவரம் யம் தேவம் நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே” என்கிறது ரிக் வேதம். இதனையே “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்” என்று புறநானூற்றின் வரிகள், பாரத நாட்டின் வடக்குத் தெற்கு எல்லைகளாக வகுத்துக் கூறுகின்றன. இவற்றை அடியொற்றி காலச்சூழலுக்குத் தகுந்த வண்ணம் “சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா” என்றும்,. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றும் பாடினார் மகாகவி. இவ்விதம் தாய்நாட்டைத் தெய்வமாகப் போற்றுதல் சனாதனம். நாட்டைப் போற்றுவதையே மதத்தின் முதல் அடையாளமாகக் கொண்டிருப்பது நம் சனாதனம். ஆகையால்தான் பாரத மாதா என்கிறோம். தமிழ்த் தாய் என்று மொழியைத் தாய்க் கடவுளாகக் காண்பதும் இந்தச் சனாதனக் கண்ணோட்டமே.
சாதியை நம் சனாதனம் போதிக்கவில்லை. அனைவரும், அனைத்துமே ஆண்டவனின் அம்சம் என்பதே நம் சனாதனம். இதைத்தான் “காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் வானும் எங்கள் கூட்டம் நோக்குமிடமெல்லாம் நாமின்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்” என்றும், “யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மையெல்லாம் உன் தெய்வ லீலையன்றோ” என்றும் மகாகவி பாடினார். காக்கை சிறகினில்கூட நந்தலாலாவின் கரிய நிறத்தைக் கண்டார். “காண்பதெல்லாம் கடவுள்” என்ற சனாதனக் கருத்தை உள்வாங்கியதன் வெளிப்பாடே இந்த வைர வரிகள்.
நந்தனாரைச் சாதி பார்த்து பிரித்தது சமூகக் கொடுமை. அவரையே நாயன்மாராக உயர்த்தி வணங்குவதே நம் சனாதனம். பிராமணர் என்பது பிறப்பின் அடிப்படையில் அமைந்த சாதி அல்ல, அடையக்கூடிய தகுதி நிலை என்பதுதான் சனாதனம். இதை நாற்குலம், பிராமணன், ஜாதிபேத வினோதங்கள் ஆகிய கட்டுரைகளில் விவரித்துள்ளார் மகாகவி பாரதியார். பிராமணன் யார் என்ற கட்டுரையில் “வஜ்ர ஸூசி” என்ற உபநிஷதத்தில் பிராமணன் யார் என்று விளக்கப்பட்டிருப்பதை இவ்விதம் விண்டுரைக்கிறார்: “உயிராலோ, உடம்பாலோ, பிறப்பாலோ, அறிவாலோ, செய்கையாலோ, தர்மகுணத்தினாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிட மாட்டான். இரண்டற்றதும், உள்ளும் புறமுமாய் நிறைந்திருப்பதும் அனுபவத்தால் உணரக்கூடியதுமான இறுதிப் பொருளை நேருக்கு நேராக அறிந்து, காம, குரோத, லோப குற்றங்கள் நீங்கியவனாக வாழ்கிறோனோ அவனே பிராமணன். பிராமணன் ஆக நினைப்போர் மேற்சொன்ன தகுதிகளை அடைய முயற்சி செய்க” என்று கூறியுள்ளார் பாரதியார். இதை நடைமுறையிலும் சாதிக்கத்தான் கனகலிங்கத்துக்குப் பூணூல் போட்டு வேத உபதேசம் செய்தார்.
தத்வமஸி என்பது வேத மகா வாக்கியம், இதன் உட்பொருளை, தனது “புதிய ஆத்திசூடி”யில் “தெய்வம் நீ என்று உணர்” என எளிமையாகவும் தெளிவாகவும் பாரதியார் எடுத்துரைத்துள்ளார்.. “அறிவே தெய்வம்” என்ற கவிதையிலே, “சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ. பல பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிவீரோ?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதே கவிதையில், “வேடம் பல்கோடி ஓர் உண்மைக்கு உளவென்று வேதம் புகன்றிடுமே ஆங்கோர் வேடத்தை உண்மையென நீர் கொள்வீரென வேதம் அறிகிலதே” என்றும் பாடியிருப்பார். “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்கிறது ரிக் வேதக் கருத்தின் விளக்கம் இந்தக் கவிதை வரிகள்.
என் கடவுளைத்தான் நீ வணங்க வேண்டும் என்று சனாதனம் சொல்வதில்லை, வழிபாட்டுச் சுதந்திரம் உனக்கு உண்டு, ஆனால் அதற்காகப் பிறர் நம்பிக்கையைப் பழிக்காதே என்பதுதான் சனாதனம் காட்டுகின்ற வழி. இதை, “யாரைத் தொழுவது” என்ற தலைப்பிலான கட்டுரையில் பாரதியார் விளக்கியுள்ளார். “பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாய் உபாசனை செய்ய ஹிந்து மதம் இடம் கொடுக்கிறது. சித்தத்தை ஒருமுகப்படுத்த இந்த பக்தி எளிய வழி- ஆனால் இதர தெய்வங்களை விஷயம் தெரியாமல் பழித்தால் வேத விரோதம்” என்கிறார். ஆனால், இதர தெய்வங்களைப் பழிக்கத்தான் அன்னிய மதங்கள் பெரும்பாலும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிவருடிகளாக இருப்பவர்கள் கூறுவதுதான் சனாதன ஒழிப்பு.
“இனி” என்ற தலைப்பிலான கட்டுரையில் கோவில் எதற்காக என்பதற்கும் பாரதியார் விளக்கம் கொடுத்துள்ளார். “கடவுள் எங்கும் இருக்கிறாரே அவரை ஏன் ஓரிடத்தில் கூடித் தொழ வேண்டும் என்றால் ஜனங்களிடம் ஒற்றுமை ஏற்படுவதற்காக. கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது (இயங்குகிறது). இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து – ‘தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்’ என்பது முன்னோர் கொள்கை. எல்லாம் ஓர் உயிர். ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்துகொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள். ஆயினும், கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறது என்று நம்பி நம்மைச் சூழ்ந்திருக்கும் ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?
“கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்கிறேன். ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம் உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் (வெளியே தெரியாமல்) இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளிவீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.
ஆண் தெய்வமெல்லாம் நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண் மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன. சிவன் நீ, சக்தி உன் மனைவி; விஷ்ணு நீ, லக்ஷ்மி உன் மனைவி; பிரம்மா நீ, ஸரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக நிலையில் இருந்து மனிதரைத் தேவ நிலையில் கொண்டுசேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோவில்களாம்” என்கிறார். இதுதான் கோவிலை உருவாக்கிய நம் முன்னோர்களின் சனாதன தர்மம். ஆயினும் சனாதன எதிர்ப்பாளர்களைப் போலவே அதன் ஆதரவாளர்களும் இந்த உட்கருத்தை உணர்ந்துகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது!
பாரத ஜாதி என்ற கட்டுரையில் “கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ, பார்ஸிக்களோ எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடினாலும் பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களை பாரத ஜாதி என்று கணக்கிட வேண்டும். இது பிரிக்க முடியாதது அழிவில்லாதது இதற்கு ஆதாரமும் மூலபலமும் யாதெனில் ஆரிய சம்பத்து. அதாவது நமது மூதாதையரின் அறிவும் அந்த அறிவின் பலன்களும்” என்கிறார் மகாகவி பாரதியார். இவ்வாறு இந்த நாட்டைப் போற்றுகின்ற அனைவரையும் அரவணைக்கச் சொல்கிறது நமது சனாதனம்.
எவை எல்லாம் ஆரிய சம்பத்து? “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு (மக்கள் சமுதாயம்), நமது பாஷைகள், நமது சிற்பம், கவிதை, சங்கீதம், நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், இராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குள், ஆண்டாள் திருமொழி ஆகிய அனைத்தின் பொதுப் பெயர் ஆரிய சம்பத்து” என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதே கட்டுரையில், “ஆரிய சம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்தால் பாரத ஜாதியை செல் அரித்துவிடும்” என்றும் எச்சரித்துள்ளார். அவ்வாறு செல் அரிக்க வேண்டும் என்று எண்ணும் நச்சுக் கருத்தாளர்கள் நடத்துவதுதான் சனாதன எதிர்ப்பு மாநாடு.
ஆர்ய என்பது இனத்தைக் குறிப்பதல்ல. உயர்ந்த, மேலான என்ற பொருள் கொண்டது என்பதைத் தெளிவாக அறிந்தவர் பாரதி. ஆகையால்தான் அச்சம் கொண்டவன் ஆரியனல்லன், ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரிய மந்திரம் வந்தே மாதரம் என்றெல்லாம் பாடியுள்ளார். பாரதி கூறும் ஆரிய சம்பத்தில் ஒன்று பகவத் கீதை. அதை வன்முறை நூல் என்கிறார்கள் சனாதன எதிர்ப்பாளர்கள். பகவத் கீதைக்கு பாரதி எளிய விளக்கம் அளித்துள்ளார். அதன் முன்னுரையில், “துரியோதனாதிகள் பாவச் சிந்தனைகள், அர்ஜுனன் ஜீவாத்மா, கிருஷ்ணர் பரமாத்மா- பாவச் சிந்தனைகளைக் கொன்றொழிக்குமாறு ஜீவாத்மாவுக்குப் பரமாத்மா போதிப்பதே கீதை. துறவு மாத்திரமே மோக்ஷத்தக்கு வழியில்லை இல்லறமும் ஏற்றதே என்பதே கீதையின் சாராம்சம். வீட்டில் இருந்தபடியே உறவினர்களுக்கும் பிறருக்கும் உபகாரம் செய்தபடி, மனுஷ்ய இன்பங்களை நேர்மையாக அனுபவித்துக்கொண்டு, கடவுளை உபாசனை செய்து ஜீவன் முக்தராய் வாழ்வதை கீதை போதிக்கிறது. ஸர்வமிதம் பிரஹ்ம – உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற வேதத்தின் கொள்கையை நிறுவுவதே கீதை” என்று பகவத் கீதையின் நோக்கத்தை பாரதியார் விவரித்துளார். எல்லாம் கடவுள்மயம் என்ற இந்தக் கோட்பாடுதான் சனாதனம்.
தத்துவம் என்ற கட்டுரையில் கணபதி என்ற துணைத்தலைப்பின் கீழ் பாரதி கூறியிருப்பதை ஒவ்வொரு சனாதனியும் நினைவில் நிறுத்த வேண்டும்: ”ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பலவிதமாகச் சொல்லினர் என்று வேதமே சொல்லுகிறது கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பலமூர்த்திகளாக்கி வேதம் உபாஸனை செய்கிறது. வேதகாலம் முதல் இன்று வரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களை மாற்றவில்லை. வேதம் எப்போது தொடங்கிற்றோ, யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய தெய்வங்களெல்லாம் காலத்தில் மறைந்து போயின. ஹிந்துக்களுடைய தெய்வங்கள் அழியமாட்டா. இவை எப்போதும் உள்ளன” என்றுள்ளார் தீர்க்கதரிசியான மகாகவி பாரதியார். ஆகையால் சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள்தான் ஒழிந்து போவார்கள் என்பதை திடப்படுத்திக் கொள்வோம்.
பரோபகார்த்தம் இதம் சரீரம் (பிறருக்கு உதவவே இவ்வுடல்) என்ற வேத வாக்கை “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்று மொழிந்தவர் பாரதி. “யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா” (எங்கே பெண்கள் போற்றப்படுகிறார்களோ அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சியுடன் விளங்கும்) என்ற மனுஸ்மிருதியின் அடியொற்றி, “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்று ஆனந்தக் கூத்தாடியவர் பாரதி. சனாதனத்தின் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை அதாவது ஆண்-பெண் சமத்துவத்தை, “ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று வாழ்த்தியவர் பாரதி. “சர்வம் இதம் பிரஹ்ம” என்ற வேதவாக்கை, “எல்லோரும் ஓர் நிறை” என்று ஓங்கி உரைத்தவர் பாரதி. இதுபோன்ற உயர்ந்த கருத்துகளைக் கூறுகின்ற நாடு பாரதம் என்பதால்தான் “பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்” என்றும் கட்டளையிட்டுள்ளார்.
பாரத நாட்டின் உன்னதப் பாரம்பரியமான சனாதனத்தை மகாகவி பாரதி, தமது பல்வேறு கவிதைகளாலும், கட்டுரைகளாலும் விவரித்துள்ளார். அனைவருக்குள்ளும் தெய்வத்தைக் காணுதல், சாதி பேதம், வர்க்க பேதம், பாலினப் பாகுபாடு இவற்றைக் கடந்து அன்பு செலுத்துதல், இயற்கையைப் போற்றுதல், அனைத்து மனிதர்களையும் தெய்வ நிலைக்கு உயர்த்துதல் – இதுதான் சனாதனம். இந்த சனாதனத்தைப் போற்றுவோம். இதை வேரறுப்போம் என்றெழும் சூளுரைகளைச் சுட்டெரிப்போம். அதுமட்டுமல்ல, “எல்லோரும் அமரநிலை எய்தும் வழிமுறையை இந்தியா உலகுக்கு அளிக்கும்” என்ற பாரதியின் வாக்கை நனவாக்கும் வகையில் நமது சனாதனத்தின் மாண்பை உலக நாடுகளிலும் மலரச் செய்வோம்.
ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்! பாரத அன்னை வெல்க!