VSK TN
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டுகிறோம்.. கயிலாய யாத்திரை மானியம் குழப்பத்தைப் போக்க நடவடிக்கை தேவை.. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கயிலாய புனித யாத்திரைக்கும், முக்திநாத் யாத்திரைக்கும் மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இது குறித்து சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை, பத்திரிகை விளம்பரம் ஒன்று வெளியிட்டுள்ளது. முதலில் அரசு மானியம் வழங்கும் என்றே கூறப்பட்டது, தற்போது கோயில் பணத்திலிருந்து தருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது. ஹஜ், ஜெருசலத்திற்குச் சென்று வர எப்படி அரசு நிதி ஒதுக்குகிறதோ அதுபோல இந்துக்களின் புனித யாத்திரைக்கும் ஒதுக்க வேண்டும். மேலும் இந்த விளம்பரத்தில் மானியத்தொகை யாத்திரை போய் வந்த பின்னர் வழங்கப்படும் என்றுள்ளது. இதனால் ஏழைகள் எப்படி பயன்பெற முடியும்? அப்படியே கடன் வாங்கி போனாலும் அரசு மானியம் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இப்படி பல குளறுபடிகள் இந்த அறிவிப்பில் உள்ளதாக பக்தர்கள் கருதுகிறார்கள். அரசு இது குறித்து விளக்கம் அளிப்பதோடு, அரசின் நிதியிலிருந்து மானியம் வழங்கவும், மக்கள் தொகைக்கு ஏற்ப எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆவன செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. குத்தகை தராதவர்கள் மீது நடவடிக்கை.. மேலும் இந்து முன்னணியின் பல வருட கோரிக்கையான கோயில் குத்தகை பாக்கி வைத்துள்ளோர் குறித்த விவரத்தைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை இப்போது சில கோயில்களில் செயல்படுத்தி வருகிறார்கள், இந்து முன்னணி இதனை வரவேற்கிறது. எல்லாக் கோயில்களிலும் இதனை நடைமுறைப்படுத்துவதோடு பகுதி வாரியாக மக்கள் அதிகம் படிக்கும் பத்திரிகைகளில் விளம்பரமும் செய்ய வேண்டும். குத்தகை பாக்கி வைத்துள்ளோரை, குத்தகை பாக்கியைச் செலுத்துமாறு பொது மக்கள் நிர்ப்பந்தப்படுத்தும் போது காவல்துறை, அரசு அதிகாரிகள் பொது மக்களுக்கு உறுதுணையாக இருந்து பாதுகாப்பு தரவேண்டும். இப்படி பல ஆண்டுகளாக குத்தகை பாக்கி வைத்துள்ளோர் குத்தகை உரிமையை ரத்து செய்யவும், ஆலய சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதப் பண்பாட்டுப் படிப்புகள் இந்த வகையில் கோயில் வருமானத்தை அதிகரிக்கச் செய்து, அதனைக் கொண்டு ஆன்மீகக் கல்வியைப் பரப்ப ஆலயம் தோறும் பாரதப் பண்பாட்டுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், ஆய்வுப் படிப்புகள் முதலானவற்றை ஏற்படுத்த வேண்டும். ஆலயம் சம்பந்தமான எல்லா விஷயங்களும், குறிப்பாக வேதங்கள், ஆகமங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள், சித்தாந்தங்கள், கல்வெட்டுகள், சுவடிகள், பாரம்பரிய, கிராமியக் கலைகள், தல வரலாறுகள், சுற்றுலா சம்பந்தமானவை என அனைத்தையும் வருங்கால சமுதாயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் இந்து சமய நம்பிக்கைகளும், தத்துவங்களும் என்றும் உயிரோட்டத்தோடு இருக்கும் என்பதை முதல்வர் கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.