இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
கூடங்குளம் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனத்தைக் கைவிட வேண்டும்..
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினர்; அங்கு அவர்களது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அணு மின் உற்பத்தியைத் தடுக்க ஆபத்தான வழிகளைக் கையாள்கிறார்கள்.இவர்களிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு இந்து முன்னணி கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
கடந்த பல மாதங்களாக மத்திய அமைச்சர்கள் கூடங்குள அணுஉலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு வெளிநாடுகளின் நிதி வருவதையும், அது முறைகேடாக பயன்படுத்துப்படுவதையும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார்கள். ஏன் அந்தக் கிறிஸ்தவ நிறுவனங்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில் ஃபோர்ட் பவுண்டேஷன் எனும் வெளிநாட்டு நிறுவனத்திடம் நன்கொடை பெறும் நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்குத் தீர்வு காண நெல்லையில் கூடிய ஒரு கூட்டத்தில் கிறிஸ்தவ பிஷப்புகள் மூலம் காங்கிரஸ் கட்சித் தலைவி திருமதி.சோனியாவைச் சந்தித்து முறையிட முடிவு செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. அரசியல்வாதிகளின் மறைமுக செயல்பாட்டினால் இந்திய இறையாண்மை கேள்விக்குறியாகிறது.
கூடங்குள அணு உலை தீவிர கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் வைக்கப்பட வேண்டிய இடம். அதனை முற்றுகையிடவும்,அங்கு வன்முறையைக் கட்டவிழித்துவிடவும் நடைபெற்ற சம்பவங்களை மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுத்திருக்க வேண்டும்.
குழந்தைகளையும்,பெண்களையும் முன்னிறுத்தி வன்முறையை ஏற்படுத்துவதும், வன்முறையாளர்களைக் கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் வரும்போது சர்ச்சில் போய் பதுங்கிக்கொள்வதும், வன்முறையாளர்களைக் கைது செய்ய காவல்துறை சர்ச்க்குச் சென்றால், காவல்துறை ஏதோ போகக்கூடாத இடத்திற்குப் போனது போல சிலர் கூக்குரலிடுகிறார்கள்.
இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள், உள்நாட்டு சதி, வெளிநாட்டு சதிக்கு உடந்தையாவதைக் கைவிட வேண்டும்.
கோவை,ஈரோடு, கரூர் உள்பட தொழிற் நகரங்கள் இன்னமும் தொடர்ந்து மின்சார வெட்டுக்கு ஆளாகி வருகின்றன.தொழிற் துறை முடங்கும் நிலையில் உள்ளது.
இந்தியப் பொருளாதார மேம்பாட்டிற்குத் தேவையானதும், அறிவியல் வல்லுநர்களாலும், நீதிமன்றத்தாலும் அணு உலை பாதுகாப்பானது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல மாதங்களுக்குப் பிறகு உற்பத்தியைத் தொடங்க இருக்கும் நிலையில் இந்தப் போராட்டம் திட்டமிட்ட வன்முறையை ஏற்படுத்தும் செயல். 1980இல் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் எப்படிக் கலவரத்தைப் பாதிரிகள் நடத்தினரோ அதுபோலவே கூடங்குளத்திலும் வன்முறையை அரங்கேற்ற முயற்சித்துள்ளனர் என்பதைத் தமிழக அரசு கவனத்தில் கொள்ள இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
மத்திய,மாநில அரசுகளும், அரசியல்கட்சிகளும் நாட்டின் நலன் கருதி தேசவிரோத சக்திகளை அன்னியப்படுத்த வெளிப்படையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
விரைவில் மின் உற்பத்தியைத் துவக்க கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என இந்து முன்னணி வற்புறுத்துகிறது.