உ வே சா பிறந்த நாள்
சில நினைவுகள்
…………..
ரயிலும் தந்தியும் சாமிநாதுவும்
அதிசயமே
…….
ஆனந்த வருஷத்தில் நிகழ்ந்த அதிசயங்களில் பாரத தேசத்திற்கு வந்த புகைவண்டியும் தந்தி பேசியும் மிகப்பெரிய விஷயங்களாக பேசப்பட்ட பொழுது அதே வருடத்தில் பிறந்த தன் குழந்தை வேங்கடரமணன் (பிற்காலத்தில் சாமிநாத ஐயர் என்று தன் ஆசிரியரால் பிரியமாக அழைக்கப்பட்டவர் ) பெரிய அதிசயம் என்று தன் தாயார் கூறுவார் என்பதை என் சரிதம் மூலம் சொல்கிறார் உவேசா. அவர் பிறந்து ஆனந்த வருடம், மாசி மாதம் ஒன்பதாம் தேதி திங்கட்கிழமை. குடும்பத்தினருக்கு சொந்தமாக அரியலூரில் ஒரு வீடு அமைந்ததும் காரணம் என்கிறார். தாய்க்கு மட்டுமா தமிழனைக்கும் அவர் பொக்கிஷம் தானே.
தமிழ் வளர்த்த ஆதீனங்கள்
…….
திருவாவடுதுறை ஆதீனத்தை அருமையாக கொண்டாடியவர் உவேசா. காரணம் ஆதீனத்தின் மூலகர்த்தா சுப்பிரமணிய தேசிகரின் புலமையும் அன்பும் ஆதரவும் அறிஞர்களை ஆதரிக்கும் நல் உள்ளமும் தான். தேசிகரின் தக்ஷிண யாத்திரயைப் பற்றி விவரமாக பகிர்ந்திருக்கும் உவேசா, அந்த அறிஞர் குழாத்துடன் தம்மையும் இணைத்தது மற்றும் தனக்காக கழுத்து அணியாக கௌரி சங்கரகண்டியும் சால்வையும் கொண்டு சிறப்பு செய்ததையும் அதை தன் பெற்றோர்களுக்கு காண்பிக்க செய்து பேறுவுவகை கொள்ளச் செய்ததையும் எழுதுகிறார். அது மட்டுமா அவர்தான் பிரயாணத்திற்கு வேண்டிய கித்தான் பை ஒன்றையும் பட்டுத் தலையணையோடு கூடிய ஜமக்காளம் ஒன்றையும் தந்து உதவினார் என்பதையும் நன்றி மறக்காமல் பதிவிடுகிறார்.
தூக்கம் கலைய ஊசி மிளகாய்ப்பழம்
……
பள்ளிக்கூடங்களில் உணவு இடைவெளிக்குப் பின் பாடம் படிப்பதும், பாடம் கற்பிப்பதும் பிரம்ம ப்ரயத்தனம் தான். பகல் போசனத்திற்கு பின் ஒரு நாள் திருவாவடுதுறை நமச்சிவாய தேசிகர் குளப்புரை தோட்டத்தில் மாணாக்கர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த பொழுது சாமிநாதையர் இல்லாதது கண்டு ஒருவரை அவரிடம் அனுப்ப அவர் தூக்கத்தில் இருந்த சாமிநாதவை எழுப்பி விட்டாராம். தூக்கக் கலக்கத்தில் சிரமமாக நடந்து கொண்டிருந்த சாமிநாத ஐயர் அருகில் தோட்டத்தில் இருந்த ஊசி மிளகாய் செடியில் இருந்து ஒரு பழத்தை பறித்து கசக்கி தன் கண்களில் தடவிக் கொண்டேன் என்கிறார் . தேளுக்கு அஞ்சி பாம்பின் வாயில் புகுந்த கதையாயிற்று என் நிலை. என்னால் மேலே நடக்க முடியாமல் கீழே உட்கார்ந்து விட்டேன் என்று பகல் பொழுது வகுப்புகளை பற்றி பேசுகிறார்.
தமிழ் புலவர்கள் தெய்வம் போல்
…..
ஏடு தேடி உவேசா தென் தமிழகத்தில் கிராமம் கிராமமாக பயணம் செய்த பொழுது பெருங்குளம் என்னும் கிராமத்தில் செங்கோல் மடத்தில் அம்மடாதிபதியுடன் பழைய இலக்கண இலக்கியங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அன்று மாலை அவ் ஊரில் உள்ள ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கே கொலு வீற்றிருந்த சிற்பங்களைப் பற்றி எடுத்துரைத்தார் மடாதிபதி. அப்பிரதேசத்தில் உக்கிர பாண்டியன் என்னும் அரசன் அரசாட்சியில் உக்கிர வழுதீஸ்வரர் என்னும் திருநாமம் வழங்குகின்ற கோவிலில் பாண்டியர் முன்னிலையில் நக்கீரனார் முதலிய சங்கப் புலவர்கள் கூடிய இடத்தில் திருக்குறள் அரங்கேற்றம் நடைபெற்றது என்றும் அஞ்ஞனம் நடந்த இடம் அதுவே என்றும் கூறி அதற்கு அடையாளமாக சிவாலயத்தில் 49 புலவர்களின் வடிவமும் உக்கிர பாண்டியர் வடிவமும் அமைந்துள்ள இடத்தை காட்டினாராம் மடாதிபதி. ” இங்கே அவர்கள் இருந்தார்களோ இல்லையோ தமிழ்ப் புலவர்களை தெய்வத்தோடு ஒன்றாக வைத்துப் போற்றும் வழக்கம் இந்த நாட்டில் இருப்பதை நாம் பாராட்ட வேண்டும்” என்கிறார் உ வே சா.
மெய்வருத்தம் பாரார் கண் துஞ்சார்
…….
ஊர் ஊராக ஏட்டுச்சுவடிகளுக்காக அலைந்து திரிந்த உவேசா, ஊற்றுமலை ஜமீனில் ,தான் கண்ணுற்ற பல நல்ல செய்திகளை விரிவாகப் பகிர்கிறார். முக்கியமாக அங்குள்ள காரியஸ்தர்கள் நல்ல தமிழ் பயின்றவர்கள் என்றும் அந்த ஜமீன் ஒழுங்காகவும் திறமையாகவும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது என்பதையும் பதிவிடுகிறார். ஜமீன்தாரிடம் விடைபெறும் பொழுது அவர் இங்கிருந்து வண்டியையும் சமையல்காரரையும் திட்டம் செய்து பாத்திரங்களும் சாமான்களும் அனுப்புகிறேன். நீங்கள் எங்கெங்கே போக வேண்டுமோ அவ்விடங்களுக்கு எல்லாம் செல்லலாம் என்கிறார் .
“நான் போகிற இடங்களில் எல்லாம் சமையல்காரனை வைத்துக்கொண்டு விருந்து சாப்பிடுவது முடியாத காரியம்; அதற்கேற்ற வசதி இராது. பல இடங்களில் கிடைத்ததை சாப்பிட்டு கிடைத்த இடத்தில் உறங்கி ஏடு தேடுவேன். பட்டினி கிடக்கவும் நேரும் இப்படி இருக்கும் பொழுது வண்டி, மாடு, வண்டியாள் சமையல்காரன் என இவ்வளவு பரிவாரங்களையும் வைத்துக்கொண்டால் என் காரியம் நிறைவேறாது ” என அன்பாகக் கூறி மறுக்கிறார் உவேசா.
உ வே சாவின் வாழ்க்கையில் அவர் அனுபவித்த இன்னல்கள் இன்று தமிழ்த் தாயின் ஆபரணங்கள். காலம் கடந்தும் தமிழ் உள்ளவரை வாழும் நித்தியசூரிகள்.
ஹேமமாலினி G
hemagopalan@gmail.com