பஞ்சாமிர்தம்
இன்று (2024 ஏப்ரல் 23) பௌர்ணமி. எனவே இதோ பஞ்சாமிர்தம்
1 மாநிலம் மக்களைப் பிரிக்காது
ஆண்டு 2008ல் மூளைச் சாவு நேர்ந்த ஒரு திருக்கழுக்குன்றம் இளைஞரின் இதயம், உறுப்பு தான சேவை புண்ணியத்தில் பெங்களூரு சிறுமியின் உயிரை காப்பாற்றியது. அதுதான் தமிழகத்தில் உறுப்பு தான இயக்கத்தின் பிள்ளையார் சுழி. தற்போது மாநிலம் எங்கும் சுமார் 1,000 பிணியாளர்கள் இதயம், சிறுநீரகம் என்று பல்வேறு உறுப்புகள தானம் பெற காத்திருப்பதாக மாநில அரசு தகவல். பாரத சமுதாயம் உறுப்பு தானம் வாயிலாக இவர்களை மட்டுமல்ல, இவர்களைப் போல எத்தனை ஆயிரம் பேர் புத்துயிர் பெற காத்திருந்தாலும் கை தூக்கி விடத் தான் போகிறது. அரசு புள்ளிவிவரம் தரும், சமுதாயம் உறுப்பு தானம் என்ற புண்ணியச் செயல் செய்யும்.
ஆதாரம்: ‘விஜயபாரதம்’, 2024 ஏப்ரல் 26
2 சனாதனம் என்றால்…
“இதோ மாங்கல்ய தாரணம் ஆகிவிட்டது. பெண்ணும் மாப்பிள்ளையும் மேடையின் முன்புறமாக வந்து நிற்பார்கள்; அப்போது அவர்களுக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.” விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க ஆசீர்வாத வைபவம் அழகாக, ஒழுங்காக நடந்தது. அண்மையில் (2023 செப்டம்பரில்) சென்னையில் நடந்த சிரத்தையுள்ள ஒரு குடும்ப திருமண காட்சி தான் இது. அங்கே கல்யாண சம்பிரதாயத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் விருந்தினர்கள் சரியாக தெரிந்து கொள்ள ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள்: மண்டபத்தின் ஒவ்வொரு நாற்காலியிலும் ஒரு பல வண்ண அட்டை வைக்கப்பட்டிருந்தது. அதில் மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல், கன்யாதானம், மாங்கல்ய தாரணம், பாணிகிரகணம், சப்தபதி, லாஜஹோமம், அருந்ததி தரிசனம், ஆசீர்வாதம், மங்கள ஆரத்தி என்று எல்லா சடங்குகளையும் வர்ணனை, கோட்டோவியம் சகிதம் அச்சிட்டிருந்தார்கள். அதன் உதவியோடு மேடையில் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் விருந்தினர்கள் துல்லியமாக புரிந்து கொண்டு கவனித்தார்கள். முகூர்த்தம் ஆன பிறகு, நாற்காலிகள் வட்டம் வட்டமாக போடப்பட்டன. அதில் விருந்தினர்கள் குடும்பம் குடும்பமாக அமர்ந்தார்கள். புதுமண தம்பதி ஒவ்வொரு வட்டத்திற்கும் வந்து அறிமுகம் செய்து கொண்டு வாழ்த்துப் பெற்றார்கள். எந்த ஒரு விருந்தினருக்கும் தான் கவனிக்கப்படவில்லை என்று குறை நிச்சயம் ஏற்பட்டிருக்காது. எல்லோரையும் போல திருமணத்துக்கு வந்திருந்த சங்கீத கலைஞர்களும், ஐ. ஐ. டி, ஐ.ஐ. எம் பேராசிரியர்களும் மூத்த பத்திரிகையாளர்களும் புதுமண தம்பதியின் அமெரிக்க நண்பர்களும், ‘ஒரு ஹிந்து திருமணம் என்றால் அதில் கட்டுக்கோப்புடன் கரிசனமும் களிநடம் புரியும்’ என்பதை நிச்சயம் கண்டு அனுபவித்திருப்பார்கள்.
தகவல்: பஞ்சாமிர்தம் குழு உறுப்பினர் ஒருவர்
3 மாநிலங்கள் பல; மக்கள் ஒன்று
மகாராஷ்டிர மாநிலத்தில், கர்நாடக மாநில எல்லை அருகே பட்டனே பட்டா என்று ஒரு கிராமம். 2023 ஏப்ரல் 10 அன்று அங்கே ஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. கொத்தனார் ராகுல் காட்கர் முதல் மாடியில் கட்டிடப் பணியில் மும்முரமாக இருந்தார் (அவர் கர்நாடகா மாநிலம் பெலகாவி தாலுகா அம்பேவாடி கிராமத்தை சேர்ந்தவர்). தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென கூச்சல் போடுவதை கேட்டார். எட்டிப் பார்த்தார். ‘ஆயுஷ் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான், காப்பாத்துங்க!’ என்ற கூச்சலைக் கேட்டு மாடியிலிருந்தே கீழே மணலில் குதித்தார் ராகுல். ஒரு கயிற்றை பிடித்துக்கொண்டு 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கினார். மூன்று வயது சிறுவன் ஆயுஷை மூழ்காமல் காப்பாற்றினார். சிறுவனை தூக்கிக்கொண்டு கயிற்றை பயன்படுத்தி ஏறினார். பாதியில் கயிறு அறுந்து இருவரும் கிணற்றில் விழுந்து விட்டார்கள். இதற்கிடையில் கிணற்றை சுற்றி மக்கள் கூடிவிட்டார்கள். ராகுல் காம்ப்ளே என்பவர் கிணற்றில் இறங்கி சிறுவனை காப்பாற்றினார். கயிறு அறுந்து கிணற்றில் விழுந்ததால் ராகுல் காட்கருக்கு கையில் அடிபட்டது. அவருடைய மொபைல் கிணற்றில் விழுந்து தொலைந்து விட்டது. ஆயுஷின் பெற்றோரும் ஊர் மக்களுமாக சேர்ந்து ஒரு தொகை திரட்டி புதிய மொபைல் வாங்கி கொள்வதற்காக என்று ராகுலிடம் கொடுத்தார்கள். குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது என்னுடைய கடமை என்று சொல்லி அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் கொத்தனார் ராகுல்.
ஆதாரம்: ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’, பெங்களூரு; 2023 ஏப்ரல் 12
4 மோடி: ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பு
பஞ்சாப் ஷாகா ஒன்றில் பல ஆண்டுகளுக்கு முன்பு மூத்த ஸ்வயம்சேவகர் ஒருவர். அவர் சீக்கியர். மிகவும் உற்சாகமாக ஷாகா நடத்துவார். ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில் மிகவும் அமைதியாக சோர்வுடன் காணப்பட்டார். ஷாகா முடிந்த பின்னர் என்ன ஆயிற்று உங்களுக்கு என்று கேட்டார்கள். அவர் “புறப்படுகிறேன், மகன் இறந்து விட்டான், வீட்டில் சடலம்.. நான் சென்றுதான் ஆக வேண்டிய காரியங்களை பார்க்க வேண்டும். ஷாகா தொய்வடைந்து விடக்கூடாது என்பதற்காக வந்தேன்.. தவிர தினசரி ஷாகா வரும் கடமையும் எனக்கு இருந்ததால் வந்தேன்” என்று கூறி விட்டுச் சென்றார். இதே போல சில ஆண்டுகளுக்கு முன் சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு ஆர். எஸ். எஸ் முகாமில் முக்கிய பொறுப்பாளர் அந்த நிகழ்ச்சியின் தொடக்க ஏற்பாடுகளை செய்துவிட்டு, “நான் புறப்படுகிறேன், போக வேண்டும்” என்று கூறினார். அப்போது மற்றொரு பொறுப்பாளர் , “என்ன ஜி, நீங்கள் இதுபோல கிளம்புறேன்னு சொல்றீங்க?” என்று அன்புடன் கடிந்து கொண்டார். “மகள் இறந்து விட்டாள் . வீட்டில் வைத்து விட்டு வந்திருக்கிறேன். சென்று தான் ஆக வேண்டிய காரியத்தை பார்க்க வேண்டும். காரியத்தை எடுத்து போட்டு செய்ய உறவினர்கள் யாரும் ஊரில் இல்லை. போய்த் தான் ஆக வேண்டிய காரியங்களை பார்க்க வேண்டும்” என்று கூறினார். “கடவுளே, இதை முதலில் சொல்லக்கூடாதா? நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் செல்லுங்கள் முதலில்” என்று அவரை அனுப்பி வைத்தார்கள். இதுபோல சகஜமான கர்மயோகிகள் சங்கத்தில் எத்தனையோ பேர்.. ஆனால் இதெல்லாம் சமுதாயத்தில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஸ்வயம்சேவகர்களுக்கோ இது இயல்பு. தன் தாயாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு மோடி கடமையாற்றச் சென்று விட்டார் என்பதை பலர் பிரமிப்புடன் பார்த்தார்கள் என்றால் காரணம் இதுதான்.
ஆதாரம்: 2022 டிசம்பர் 31 தேதியிட்ட ஆனந்த் வெங்கட் (anand venkat) முகநூல் பதிவு
5 உயிர் காக்க ஒரு ஓட்டம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த பகவதிபுரம் அருகே சண்முகையா-குருந்தம்மாள் தம்பதியினர் வீட்டில் இருந்து நள்ளிரவு 12.50 மணியளவில் பலத்த சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, 18 அடி உயரத்திலிருந்து கீழே உள்ள ரயில் தண்டவாளத்தில் லாரி விழுந்து கிடப்பதைக் கண்டனர். தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டது. கைகளில் டார்ச் லைட்டுடன் ரயில் வரும் திசையில் தண்டவாளத்தில் ஓடி ரயிலை நிறுத்தினர். அவர்களின் நல்ல மனதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
(ஆதாரம்: ‘தினசரி’ ஆன்லைன் செய்தித்தாள் 2024 பிப்ரவரி 26)