ப ஞ் சா மி ர் த ம்
இன்று (2024 ஆகஸ்டு 4) அமாவாசை; பஞ்சாமிர்தம் வாசியுங்கள்
1 அரசுப் பணியில் அர்ப்பணிப்பு
இந்த சம்பவம் 2024 ஜூன் 21 அன்று கிழக்கு மத்திய ரயில்வேயின் வால்மீகி நகர் ரோடு ரயில் நிலையம் அருகே நடந்தது. ரயில் எண். 05497 நர்கட்டியாகஞ்ச் – கோரக்பூர் எக்ஸ்பிரஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகு நடுப் பாலத்தின் மீது வால்வில் காற்று கசிவு ஏற்பட்டது. ரயில் நின்று போய்விட்டது. லோகோ பைலட் அஜய் யாதவ், கோ-லோகோ பைலட் ரஞ்ஜித் குமார் இருவரும் கசிவை மூடுவதற்கு பெரும் முயற்சி எடுத்தனர். அந்த இடத்தை அடைய அவர் உண்மையில் மார்பிலும் வயிற்றிலும் ஊர்ந்து, சரிசெய்து திரும்பினார். அவரது சக ஊழியர் பாலத்தின் கீழே தொங்கிக் கொண்டிருந்தார். என்ன அர்ப்பணிப்பு!.
ஆதாரம்: ட்விட்டரில் பாரதீயம் / முகநூலில் விட்டல் நாராயணன்
2 ஷவர்களில் பொழிந்தது அன்பு
காவடி எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக செல்லுகிற பக்தர்களுக்கு வழியில் பாதுகாப்பான நல்ல உணவு கிடைக்க பல்வேறு மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. வெயில் கொளுத்தும் பீகாரின் சுல்தான்கஞ்ச் பகுதியில் இருந்து ஜார்க்கண்டின் தும்மா பகுதியில் காலடி வைத்ததும் காவடி பக்தர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சாலையோரம் 17 இடங்களில் ஜார்க்கண்ட் மாநில அரசால் நிறுவப்பட்டிருந்த ஷவர்களில் இருந்து குளிர்ந்த நீர் பொழிந்தது! களைப்பு நீங்கியவர்களாய் காவடி ஊர்வலத்தினர் உலகப்புகழ் பெற்ற தேவ்கர் வைத்யநாதர் என்ற திருநாமம் தாங்கிய சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் ஆர்வத்துடன் தொடர்ந்து நடந்தார்கள்.
ஆதாரம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 2024 ஜூலை 23.
3 பேரிடர் வேளையில் ராணுவத்தின் அற்புத அரும்பணி
கேரளா வயநாடு நிலச்சரிவு வேளையில் இடைவிடாத மழை, தொடர்ந்து உயரும் நீர்மட்டம் ஆகியவற்றுக்கு நடுவில் காட்டாற்றின் குறுக்கே 31 மணி நேரத்திற்குள் 190 அடி நீள பெயிலி பாலத்தை பாரத ராணுவத்தின் 70 வீரர்கள் கொண்ட மதராஸ் என்ஜினீயர்ஸ் படைப்பிரிவு கட்டிக் கொடுத்ததைப் பார்த்து தேசமே வியந்தது. அந்த சுறுசுறுப்பான படைப்பிரிவின் தலைமை ஏற்று பாலத்தை விரைவாக கட்டி கொடுத்து மீட்பு பணிக்கு மகத்தான உதவி புரிந்த ராணுவ அதிகாரி ஒரு பெண்மணி. பெயர் மேஜர் சீதா ஷெல்கே. 2012 ல் ராணுவத்தில் சேர்ந்த இவர், சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓடிஏ) பயிற்சி முடித்த பொறியாளர். மேஜர் சீதா மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜி நகர் பகுதியை சேர்ந்தவர். போர்முனையில் முன்னேறும் ராணுவத்தின் பாதையில் கண்ணிவெடி நீக்குவது, பாலம் கட்டிக் கொடுப்பது ஆகியவை இந்த படைப்பிரிவின் முக்கியமான பணிகள். பேரிடர் நிகழும் போது ராணுவத்தின் மிக முக்கியமான பங்களிப்பை இந்த அற்புதமான அரும்பணி மூலம் தேசம் புரிந்து கொண்டது.
ஆதாரம்: ஆர்கனைஸர், 2024 ஆகஸ்டு 2.
4 இமயத்தின் தூய்மை காக்க
உத்தராகண்ட் மாநிலத்திற்குள் செல்லும் எந்த வாகனத்திலும் குப்பைத் தொட்டியோ குப்பைக்கான பையோ இருக்க வேண்டியது கட்டாயம். இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது அந்த இமாலய மாநிலத்தின் தூய்மையை கட்டிக் காப்பாற்ற எடுக்கப்படும் நடவடிக்கை. இந்த விஷயத்தில் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டு அக்கம்பக்கத்து மாநிலங்களின் அதிகாரிகளுக்கு உத்தராகண்ட் போக்குவரத்து துறை கடிதம் எழுதியிருக்கிறது. பல மாநிலங்களிலிருந்தும் சார் தாம் யாத்திரை செய்யும் பக்தர்கள் வருவதால் இந்த ஏற்பாடு.
ஆதாரம்: த டைம்ஸ் ஆஃப் இந்தியா, 2024 ஜூலை 26.
5 தங்கமான உள்ளம்
திருநெல்வேலி அருகே வேளாளர்குளம் என்ற ஊரில் ஆறுமுகநயினார் என்பவர் டூவீலரில் சென்ற போது சாலையில் ஒரு மணிபர்சை கண்டெடுத்தார். அதில் எட்டு கிராம் தங்க கம்மல் இருந்தது. மணிபர்சையும் கம்மலையும் அவர் சீதபற்பநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். நேர்மையுடன் செயல்பட்ட ஆறுமுகநயினாருக்கு காவல் துறை எஸ்பி. சிலம்பரசன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ஆதாரம்: தினமலர், திருநெல்வேலி; 2024 ஜூலை 13.