பஞ்சாமிர்தம்

VSK TN
    
 
     

ப ஞ் சா மி ர் த ம்

இன்று (2024 ஆகஸ்டு 19) பௌர்ணமி; பஞ்சாமிர்தம் வாசியுங்கள்

1 இனிய மாற்றத்திற்கு சென்னையில் ஒரு எடுத்துக்காட்டு

எளிய மக்கள் வசிக்கும் சென்னை திருவல்லிக்கேணி ‘பார்டர்தோட்டம்’ பகுதியில் அசோக சக்கர தூண் அமைந்துள்ள 50 வருட பாரம்பரியம் உள்ள பாலசுப்ரமணியன் பூங்கா. அரை நூற்றாண்டாகவே அந்த பேட்டையின் இந்த ‘நுரையீரல்’ வியாதி பிடித்து பரிதாபமாகக் கிடந்தது. விவேகானந்தர் இளைஞர் பேரவை இளைஞர்கள் செய்த முன்முயற்சி காரணமாக அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள், துரித கதியில் செயல் படத் தொடங்கினார்கள். பகுதிவாசிகள் அருமையாகத் தோள்கொடுத்தார்கள். அனைவர் பங்களிப்பும் சிறப்பாக இணைந்ததில் கடந்த ஒரு மாத காலமாக செய்த முயற்சி, திருவினை ஆகியது! சிதிலமடைந்து அழுது வடிந்து கிடந்த பூங்கா, மக்களை நோக்கி மெல்ல மெல்ல சிநேகிதமாக சிரிக்கத் தொடங்கியது. மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொள்கிறார்களே, அங்கே நிகழ்ந்தது. மிக பெரிய மாற்றம். இந்த ஆண்டு சுதந்திர தின விழா அங்கேயே நடந்தது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து. அடுத்து அந்த பகுதி மூத்த குடிமக்களில் ஒருவர் சிறப்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றினார். அனைவரும் தேசிய கீதம் பாடினார்கள். தேசிய சிந்தனையாளர்கள் சங்கத்தின் மயிலை ராம்குமார் சிறப்புரை இருந்தது. இளைஞர்களால் ஏற்பட்ட இந்த மாற்றத்தை விவரித்து தேசிய வார இதழ் ‘விஜயபாரதம்’ அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது.
ஆதாரம்: ‘விஜயபாரதம்’, 2024 ஆகஸ்ட் 30; தகவல்: பெ.வெள்ளைத்துரை

2 பறிகொடுத்தது நான்கு உறவினரை, பரிதவிப்பது ஊராருக்காக

வயநாடு சூரமலை பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் சுபேதார் ஜினோஷ் ஜெயன் (JCO, Army Unit 321 Medium Regiment). சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் அவரது குடும்பத்தில் அவருடைய தாய்மாமன், அவர் மகள்(வயது 21), மகன், மருமகள் என 4 பேர் இறந்து விட்டனர். அந்த துக்கத்திலும் கூட, மற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார் ஜினோஷ். அவரது பெற்றோர் வெளியூர் சென்றதால் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அதே ஊர்க்காரர் என்பதால், ஜினோஷ் சக ராணுவ வீரர்களுக்கு அந்த பகுதியின் அமைப்பு, பாதை குறித்து வழிகாட்டினார். அவருக்கு அந்த ஊரில் எத்தனை வீடுகள் உண்டு என்று நன்றாகத் தெரியும். தற்போதும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளார். கேரள கூடுதல் காவல்துறை டிஜிபி அஜித் குமார் ஜினோஷைப் பாராட்டினார்.
ஆதாரம்: வியான் சேனல் https://www.wionews.com/india-news/despite-losing-family-
army-man-jinosh-served-in-wayanad-landslide-ops-749874 தகவல்:
சிவராமகிருஷ்ணன், சென்னை

3 பணத்தை சாப்பிடவா முடியும்?
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள குஷிதாகி கிராமத்தில் ரசூல் ஸாப் சவுதாகர் நடத்தும் உணவகத்தில் ஸ்ரீனிவாச தேசாய் இன்ற பள்ளி ஆசிரியர் வந்து இட்லி வடை தோசை பார்சல் ஆர்டர் செய்தார். ஸ்டீபன் பார்சலை அவரிடம் கொடுப்பதற்கு பதிலாக ரசூல் அன்று வங்கியில் செலுத்துவதற்காக தனது மேஜை மீது வைத்திருந்த 49,625 ரூபாய் ரொக்கம் அடங்கிய பையை ஸ்ரீ நிவாச தேசாயிடம் கொடுத்துவிட்டார். வீட்டுக்குச் சென்று குடும்பத்தாரோடு சிற்றுண்டி சாப்பிட அமர்ந்த தேசாய், உணவுக்கு பதில் பொட்டலத்தில் ரொக்கம் இருந்ததை பார்த்து அதிர்ந்தார். உணவகத்துக்கு திரும்பிச் சென்று பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.
ஆதாரம்: த டைம்ஸ் ஆப் இந்தியா, பெங்களூரு / 2024 ஜூலை 22.

4 பிறர் பணம் இவருக்குப் பிடிக்காது

மத்திய பிரதேசம் பர்வனி மாவட்டம் பர்வா நகரில் கட்டிடத் தொழிலாளியான தினக்கூலி ஒருவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனான தன் மகனை ஏடிஎம்மிலிருந்து 4,700 ரூபாய் எடுத்து வர தன் டெபிட் கார்டை கொடுத்தனுப்பினார். அந்த சிறுவன் ஏடிஎம் தரையில் ஒரு டெபிட் கார்டு கிடப்பதைப் பார்த்தான். அதை எடுத்து இயந்திரத்தில் செலுத்தினான்; ஏதோ ஒரு பின் எண்ணை கண்ணை மூடிக் கொண்டு பதிவு செய்தான். பெரும் தொகை வந்தது. மூன்று முறை அது போல பதிவிட்டதில் கிடைத்த 25,500 ரூபாயுடன் வீட்டுக்கு ஓடினான். அப்பாவிடம் பெருமையாக தொகையைக் காட்டினான். மறு நிமிடம் அந்த ஏழைத் தொழிலாளி, மகனை பர்வா காவல் நிலையம் அழைத்து சென்றார். நிர்மல் ஸ்ரீநிவாஸ் என்ற காவல்துறை அதிகாரியிடம் பணத்தை ஒப்படைத்தார். “ஏடிஎம் எப்படி வேலை செய்கிறது என்று எனக்கு தெரியாதுங்க. இந்தப் பணம் இன்னொருவருடையது என்பது மட்டும் புரியுது. அதை நான் எப்படிங்க வைத்துக் கொள்வது?” என்றார். அந்த எளிய தந்தை. அவருக்கு காவல் நிலைய பணியாளர்கள் சேர்ந்து அன்பளிப்பாக சிறு தொகை வழங்கினார்கள். கிடைத்ததை சிறுவன் தானே செலவு செய்யாமல் அப்பாவிடம் சேர்ப்பித்தான் என்றால், அந்த ஏழை நேர்மையாளரும் பிறர் பணத்தை தானே வைத்துக் கொள்ளாமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஏடிஎம்மில் தன் டெபிட் கார்டை
தவற விட்டவர் சற்று நேரத்தில் வந்து சிறுவனுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தார்.
ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா, போபால், 2024 மே 29.

5 தெய்வம் தந்த பண்பு: வீட்டில் நல்லுறவு
பெற்றோரிடம் பிள்ளைகள் அன்புடன் அதே சமயம் பணிவுடன் நடந்துகொள்வது; பெற்றோர் பிள்ளைகளுக்கு கனிவுடன் ஆசி வழங்குவது – ஹிந்து குடும்பத்தின் இந்த பண்பான பழக்கத்தை சிவன், பார்வதி, விஷ்ணு, கணபதி, முருகன் என அனைவரும் நமக்காக நடந்து காட்டும் வைபவம் தேசத்தின் தென்கோடி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் ஸ்தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி மூன்றாந் திருவிழா அன்று அரங்கேறுகிறது.. ‘மக்கள்மார் சந்திப்பு’ நிகழ்ச்சிதான் அது. (நாஞ்சில் தமிழில் மக்கள் என்பது புதல்வர்களைக் குறிக்கும்). இரவு 10 மணிக்கு ஸ்தாணுமாலய சாமி கற்பக விருட்ச வாகனத்தில் புறப்படுவார். வடக்குத் தெருவில் கொட்டாரம் வாசலில் வைத்து கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, குமாரகோவில் சுப்பிரமணியசாமி ஆகிய மூவரும் புறப்பட்டு வந்து தங்கள் தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் விழா காண்பார்கள். உமாமகேஸ்வரர், விஷ்ணு, அம்பாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் சப்பரங்களை விநாயகரும், சுப்பிரமணியர்களும் மும்முறை சுற்றி வந்து ஆசி பெறுவார்கள். மார்கழி மாதத்தில் (டிசம்பர்-ஜனவரி) மக்கள்மார் சந்திப்பு திருவிழா நடக்கிறது.
ஆதாரம்: https://www.tamilnadutourism.tn.gov.in/destinations/suchindram-shree-
thanumalayan-swamy-temple

0000000000

Next Post

पंचाम्रित

Mon Aug 19 , 2024
VSK TN      Tweet    ।। पंचाम्रित ।। आज (आगस्ट 19, 2024) पूर्णिमा है, और आपके समक्ष ‘पंचाम्रित’! 1 सकारात्मक परिवर्तन का एक चेन्नई उदाहरण बालासुब्रमण्यम पार्क में 50 साल की विरासत है जहां अशोक चक्र स्तंभ चेन्नई के तिरुवल्लिकेनी 'बॉर्डरथोट्टम' क्षेत्र में स्थित है जहां आम लोग रहते हैं। आधी शताब्दी तक, उस […]