சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முதலில் மூவர்ணக் கொடியை பறக்கவிட்ட சாகசக்காரர்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள உயரமான கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறப்பதை நம்மால் பார்க்க முடியும். இந்த கோட்டைக்கு நீண்டதொரு வரலாறு இருக்கிறது.
1688ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கொடி மரமானது தொடக்கத்தில் தேக்கு மரத்தினால் செய்யப்பட்டதாக இருந்தது. 1994ம் வருடம் இரும்பினால் செய்யப்பட்ட கொடிக்கம்பமாக மாற்றப்படும் வரை தேக்கு மரக் கம்பமே நீடித்தது. 148 அடி உயரம் கொண்ட இந்த கொடிக்கம்பமானது அந்நாட்களில் நாட்டிலேயே மிகவும் உயரமான கொடிக்கம்பமாக இருந்தது.
இக்கொடிக்கம்பத்தின் வரலாற்றோடு சேர்த்து நமக்கு மிகவும் அறியப்படாத வீர சாகசம் நிறைந்த சுதந்திர போராட்ட வீரரான பாஷ்யம் ஐயங்கார் என்கிற ஆர்யாவை பற்றியும் நாம் அறிந்து கொள்வோம்.
இன்று யார் யாரெல்லாமோ ‘மாவீரன்’ என்ற பட்டப் பெயரைத் தாங்கிக்கொண்டிருந்தாலும், நிஜமான, மாவீரச் செயலைப் புரிந்த இந்த மாவீரன் நம்முடன், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தார் என்பது நமக்குப் பெருமை. அதிலும் அவர் நம் தமிழகத்தின், மன்னார்குடிக்கு அருகிலுள்ள சேரங்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது.அல்லவா?
அது சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம். ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் கொடி பறந்து கொண்டிருந்த காலம். நமது நாட்டிற்கு என்று புதியதாக தேசியக்கொடி உருவாகாத போதும் காங்கிரஸினுடைய மூவர்ணக் கொடியை மக்கள் போராட்டங்களில் பயன்படுத்தி வந்த காலம்.
அந்நேரத்தில் 1932 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நமது மூவர்ண கொடியை உலகறியச் செய்த பெருமை அச்சமற்ற சுதந்திரப் போராட்ட வீரர் ஆர்யா.வி.பாஷ்யம் அவர்களையே சாரும்.
இங்கிலாந்தில் இருந்து “சைமன்” என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் இந்தியா வந்தது. காங்கிரசார் அதனை கருப்புக் கொடி காட்டி திரும்பிப்போ என்று போராடினர். சைமன் கமிஷன் திருச்சி வந்தது. அங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். முன் வரிசையில் தேசியக் கல்லூரி மாணவர்கள், அவர்களுக்குத் தலைமை பாஷ்யம்.
1932 ஜனவரி 26 அன்று அவருடைய சாகசச் செயலை அறிந்தவர்கள் ஆச்சரியமும் பிரமிப்பும் அடைவது நிச்சயம். அன்று நள்ளிரவில் சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடி மரத்தில் விடுவிடுவென்று ஏறி மேலே பறந்து கொண்டிருந்த ஆங்கிலேய யூனியன் ஜாக் கொடியை அகற்றிவிட்டு சுதந்திரப் போராட்டக் களத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த இந்திய மூவர்ணக் கொடியை அவர் இரவோடு இரவாக பறக்கவிட்டார்.
ஜார்ஜ் கோட்டையில் இருந்த கட்டுக்காவலை மீறி யாரும் அறியாத வண்ணம் கொடிமரத்தின் மீது ஒரு பல்லியைப் போல ஊர்ந்து சென்று இந்த காரியத்தை செய்தது மயிர்க்கூச்செரியும் சம்பவமாகும்.
பெரிய தேசிய மூவர்ணக் கொடியொன்றை இவரே தைத்து கொண்டார். நடுவில் மையினால் ராட்டை வரைந்து கொண்டார். அதன் கீழ் “இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது” என்று எழுதினார்.
ஜனவரி 25,மாலை 7 மணிக்கு கொடியை தன் உடைக்குள் மறைத்துக்கொண்டு தன்னுடன் தியாகி
சுப்ரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபாலனைத் தன்னைப் பின் தொடரும்படி சொல்லிவிட்டு சென்றார்.
ஒரு திரைப்படக் கொட்டகை சென்று சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ரகசியமாக கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரம் குறுக்களவு 3 அடி உள்ள கம்பத்தில் ஏறினார். அப்போது சுழலும் விளக்கின் வெளிச்சம் படும்போதெல்லாம், கம்பத்தின் மறுபுறம் ஒளிந்து ஏறி யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு அதில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டார்.
கொடி மரத்தில் ஏறி கொடியை மாற்றிவிட்டு அவர் இறங்குவதற்குள் போலீசாரின் கண்ணில் அவர் பட்டு விட்டார். அவர் இறங்கி வர வேண்டும் என்று கீழே ஒரு போலீஸ் பட்டாளம் காத்திருக்க நடுக்கம்பத்தில் இருந்து காத்திருந்த போலீஸ்காரர்கள் மீது குதித்து சில போலீஸ்காரர்களை பாஷ்யம் காயப்படுத்தினார். அப்போது அவரைப் பிடிக்க நடந்த போராட்டத்தில் மேலும் சில காவலர்களை பாஷ்யம் கடுமையாகத் தாக்கினார். இறுதியில் மிகுந்த பலப் பிரயோகம் செய்து அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தேசம் விடுதலை பெற்ற பின் தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு தரப்படும் ஓய்வூதியத்தை கூட அவர் மறுத்து விட்டார்.
1999யில் தனது பழுத்த 93வது வயதில் பாஷ்யம் இறைவன் திருவடியை அடைந்தார்.
நமக்கு சுதந்திர உணர்வும் நாட்டுப் பற்றும் ஒரு சிறிதாவது இருக்குமானால் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்திற்கு அருகில் பாஷ்யத்தின் பெயர் பொறித்த ஒரு பெயர் பலகையை நிறுவுவதே அவருக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும்.
வாழ்க வீரர் பாஷ்யம் எனும் ஆர்யாவின் புகழ்!
-திரு.கார்த்திக்