ஜெய்ஹிந்த், இந்த கோஷத்தை கேட்டதுமே உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டாகும், உத்வேகம் பிறக்கும். பள்ளியில் மாணவன் முதல் போர் முனையிலே நிற்கும் வரை, ஒவ்வொரு உண்மையான இந்தியரும் இதை அனுபவத்திருப்பர். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட திரண்ட மக்கள் உற்சாகமாக ஜெய்ஹிந்த் முழங்கியதே இதற்கு சான்று. இந்த ஜெய்ஹிந்த் முழக்கத்தை உருவாக்கியவர் செண்பகராமன் எனும் தமிழர் என்பதை, தமிழகத்திலேயே கூட இன்னும் பலர் அறியாமல் இருக்கிறார்கள்.
செப்டம்பர் 15,
1891 அன்று பிறந்த இவர், தனது இளம் பருவத்திலேயே பாரத மாதா வாலிபர் சங்கம் தோற்றுவித்து இளைஞர்களை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தினார். தென்னாபிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று, இந்தியாவில் நடக்கும் அடக்குமுறைகளை எடுத்துரைத்தார், இளைஞர்களை திரட்டினார். இவரது இந்திய தேசிய தொண்டர் படை தான் நேதாஜி அமைத்த இந்திய தேசிய ராணுவத்திற்கு உந்துசக்தியாக இருந்தது. தனது வீரர்களை உற்சாகமூட்ட இவர் ஜெய்ஹிந்த் முழக்கத்தை உருவாக்கினார்.1933ல் வியன்னாவில் நேதாஜி இவரை சந்தித்த போது, செண்பகராமன் ஜெய்ஹிந்த் என்று கூறி வரவேற்றார், அப்போது முதல் நேதாஜியும் அந்த முழக்கத்தை முழங்க ஆரம்பித்தார் என்பது வரலாறு.
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பாரதியின் இந்த பாடல் வரிகளுக்கு பொருத்தமானவர் இவர். இவரது சாகசங்களை ஒவ்வொரு இளைஞரும் அவசியம் படிக்க வேண்டும். ஹிட்லரை கண்டு பிற நாடுகள் மட்டுமின்றி தளபதிகள் கூட நடுங்கிய வேளையில், எவ்வித படபடப்பும் இன்றி கம்பீரமாக ஹிட்லரிடம் பேசிய தலைவர்கள் இருவர் மட்டுமே, ஒன்று செண்பகராமன்,நேதாஜி. இந்தியர்களுக்கு தங்களை சுயமாக ஆட்சி செய்ய தகுதியில்லை என்று கூறிய ஹிட்லரிடம், வாக்குவாதம் செய்து மன்னிப்பு கேட்க வைத்தவர் . செண்பகராமன். இன்று, மதியிழந்த சிலர், நமது நாட்டின் பெருமைகளை ஏளனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். செண்பகராமன் எப்படி ஹிட்லரையே மன்னிப்பு கேட்க வைத்தாரோ அதை ஊக்கு சக்தியாக கொண்டு, உண்மையை உணர்த்தும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
தான் இறந்த பிறகும், இந்த நாட்டில் உரமாக வேண்டும் என்று விரும்பிய இவர், தான் இறந்ததும் சாம்பலின் ஒரு பகுதியை திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் கரைக்கவும், மற்றொரு பகுதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும் என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மே 26, 1934 அன்று ஜெர்மனியில் காலமான இவரது உடல், அந்நாட்டிலேயே எரியூட்டப்பட்டது. ஜான்சி 32 ஆண்டுகள் சாம்பலை பாதுகாத்தார். பின்னர் 1966ல் செண்பகராமன் விரும்பியபடியே, அவரின் சாம்பல் கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டு நாஞ்சில் வயல்களில் தூவப்பட்டது. மண்ணானாலும், பாரத பூமியில் தான் மண்ணாவேன் என்ற ஜெய்ஹிந்த் செண்பகராமன் புகழை என்றும் நினைவில் நிறுத்துவோம்.

