VSK TN
சான்றோரைப் போற்றுவோம்!
புகழ்பெற்ற சுதந்தரப் போராட்ட வீரரும், பத்திரிகையாளருமான கல்கி தி.சதாசிவம் (T.Sadasivam) அவர்களின் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4).
தியாகராஜன் சதாசிவம் (செப்டம்பர் 4, 1902 – நவம்பர் 22, 1997)
சக்கரவர்த்தி இராஜாஜியின் சீடர்களாகக் கருதப்பட்ட இரட்டையர்களில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் தி.சதாசிவமும் அடங்குவர். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். மகாத்மா காந்தி மாணவர்களைக் கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து சுதந்தரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது திருச்சி தேசியக் கல்லூரி மாணவராக இருந்த ரா.கிருஷ்ணமூர்த்தி வெளியேறி வந்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருச்சியில் இருந்தமையால் அதில் பணிபுரிந்தார். சதாசிவம் அவர்கள் பள்ளி இறுதி வரை படித்தவர். 1921ஆம் ஆண்டில் ஒரு மகாமகம் வந்தது. அதற்கு சாரணர் தொண்டராகச் சென்றவர் சதாசிவம். அப்படி கும்பகோணம் போன இடத்தில் தேசபக்தர் சுப்பிரமணிய சிவாவின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அவருடைய சிம்ம கர்ஜனை சதாசிவத்தை ஒரு தேசபக்தனாக ஆக்கியது.
அதுமுதல் சுப்பிரமணிய சிவாவின் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார் சதாசிவம். சிவா அவர்கள் பாரதமாதாவுக்கு ஓர் ஆலயம் கட்டுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த காலம். அதற்காகப் பாப்பாரப்பட்டியில் இருந்த நிலத்தில் ஓர் அடிக்கல்லை அப்போதைய பெருந்தலைவர் வங்கத்துச் சிங்கம் சி.ஆர்.தாஸ் அவர்களைக் கொண்டு நாட்டியிருந்தார். பாரதமாதா ஆலயப் பணிக்காக பாரதாஸ்ரமம் அமைக்கப்பட்டது. அதில் சேர்ந்த சதாசிவம் தேசத் தொண்டில் முழு மூச்சாக இறங்கினார்.
பாரதமாதா ஆலயம் அமைப்பதற்காக ஊர் ஊராக பஜனை செய்துகொண்டு செல்லும் தேசபக்தர் கூட்டத்தில் உண்டியல் எடுத்து வசூல் செய்தார். நிதி சேர்ப்பதில் சமர்த்தர் எனும் பெயரை அப்போதே அவர் பெற்றார். 1922 இல் தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1923 இல் மறியல் போராட்டம், அன்னிய துணி பகிஷ்காரம், கள்ளுக்கடை மறியல் இப்படிப்பட்ட காந்திய நெறியில் போராடி 15 மாத சிறை தண்டனை பெற்று சிறை சென்றார்.
கதர் இயக்கத்திலும் இவர் பெரும் பங்கு வகித்தார். ஊர் ஊராகச் சென்று கதர் துணி மூட்டைகளை எடுத்துச் சென்று கதர் என்பது தேசியத்தின் அடையாளம் சுதந்திரம் வேண்டுவோர் கதர் அணிவதன் மூலம் கிராமியத் தொழிலுக்கு ஆதரவு தருவதோடு, சுதந்திரத்துக்கும் பாடுபடுபவர்களாக ஆகமுடியும் என்று சொல்லி பெருமளவு கதர் துணிகளை விற்பனை செய்தார். ஆங்காங்கு போய் மக்கள் மத்தியில் சாங்கோபாங்கமாகப் பேசி கதர் துணி விற்பார், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ப்பார், இப்படி மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற்றார் சதாசிவம்.
இவர் இரக்க குணம் உடையவர். தன் கண்ணெதிரில் யாராவது கஷ்டப்படுவது கண்டால் உடனே தன் கையில் இருப்பதைக் கொடுத்து அவர்களது கஷ்டத்தை நீக்க உதவி செய்வார். 1930 சுதந்திரப் போர் வரிசையில் மிக முக்கியமான ஆண்டு. இராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் துவங்கிய ஆண்டு. திருச்சியில் நடந்த மறியலில் கலந்து கொண்டு 6 மாத சிறை தண்டனை பெற்றார். அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். மாநில காங்கிரஸ் அலுவலகம் திருச்சியில் இருந்தமையால் அவர் அங்கு மறியலில் ஈடுபட்டு சிறை புகுந்தார்.
சதாசிவம், இராஜாஜியையும், அவர் மூலமாக மகாத்மா காந்தியடிகளையும் நன்கு அறிந்திருந்தார். இவர் சிறை சென்று மீண்ட சமயம் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி புதிய பத்திரிகை தொடங்க முயன்று கொண்டிருந்தார். சதாசிவம் அவரோடு இணைந்து “கல்கி” எனும் பத்திரிகையைத் தொடங்க ஆலோசனைகளைக் கூறி வேலைகளை ஆரம்பித்தார். எழுத கல்கியும், நிர்வாகம் சதாசிவம் என்றும் அன்று தொடங்கிய கல்கி ராஜநடை போட்டு பயணத்தைத் தொடங்கியது. அடடா! கல்கி படைத்த இலக்கியங்கள்தான் எத்தனை எத்தனை? அத்தனையும் சதாசிவம் அளித்த ஊக்கம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
கல்கியும், சதாசிவமும் இணைபிரியாத இராஜாஜி தொண்டர்களாக விளங்கினார்கள். இவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள ஆங்கரை எனும் ஊரில் பிறந்தவர். தந்தையார் பெயர் தியாகராஜன். தியாகராஜனுடைய 16 குழந்தைகளில் இவர் 3ஆவது குழந்தை. 4-9-1902இல் இவர் பிறந்தார். 1936 இல் இவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியைச் சந்தித்தார். 10-7-1940க்ஷஇல் இவர்களது திருமணம் நடந்தேறியது. அதே ஆண்டில்தான் கல்கி பத்திரிகையும் தொடங்கப்பட்டது. இவர் தனது 95ஆம் வயதில் 22-11-1997இல் அமரத்துவம் அடைந்தார்.
இயற்கை அளித்த கொடையுடன் இசையால் இவ்வுலகை அசைத்தவர்கள் பலர். அதில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆவார். இவரைப் பற்றி நமக்குப் பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், இவரின் இந்த இனிய குரலை ஊக்குவித்து உலகறியச் செய்த பெருமை அவர்தம் கணவரையே சாரும் என்பது அவரின் கருத்து.
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண் இருப்பார் என்று கூறுவர். ஆனால், ஒரு பெண் வெற்றி பெறுவதற்கு இச்சமூகத்தில் போராட வேண்டும். அதுவே அவருடைய கணவன் துணையாக இருந்தால் எட்டாக் கனியாய் இருக்கும் வெற்றி, எளிதாக அவரின் கைகளில் வந்து சேரும்.
கர்நாடக இசை உலகின் முடிசூடா இராணியாக தி கழ்ந்தவர் பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெட்சுமி. ஐ.நா.சபையில் பாடி நம் தாய்த்திருநாட்டைப் பெருமைப்படுத்தியவர்.
அவருக்குப் பக்கபலமாக இருந்தது அவரது கணவர் கல்கி தியாகராஜன் சதாசிவம். இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்,பாடகர்,பத்திரிகையாளர், படத் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். தமிழ்ப் பத்திரிகை “கல்கி’யின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தவர்.
இரயில் பயணம் ஒன்றில் பயணித்தபோது எம்.எஸ் ஐக் கண்ட அவர் பிடித்துப் போய் தமது துணைவியாக்கிக் கொண்டார்.பின் அவரின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருந்தவர். “எனக்கு எதுவும் தெரியாது, தன் கணவரே எல்லாமுமாகி இருக்கிறார்’ என நெகிழ்ந்து போய் கூறுவார் எம்.எஸ்.
என் அம்மாவுக்குப் பிறகு என் நலம் பற்றி சிந்திப்பவர் தன் பதியே என்று உருகியவர், கணவர் சதாசிவத்தின் மரணத்திற்குப் பிறகு வெளியில் எங்கும் பாடவேயில்லை. அவ்வளவு தூரம் இசைக்குள் இசையாய் இருந்தவர் எனக் கூறலாம்.
குருநாதரின் ஆலோசனைக்கிணங்க இசையுலக சக்கரவர்த்தினியாகத் திகழ்ந்த எம்.எஸ்.சுப்பலட்சுமியை இவர் திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ். அவர்கள் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவருக்கு உந்துசக்தியாக இருந்து பாடுபட்டவர் சதாசிவம். இந்த தம்பதியினரின் நிதி உதவி கச்சேரி மூலம் இந்திய நாட்டில் பயன்பட்ட ஆலயங்கள், நிறுவனங்கள் எத்தனை எத்தனையோ! இன்று இருவரும் அமரராகி விட்டனர். வாழ்க சதாசிவம் புகழ்!

