“Queen of Fictions” – Kothainayaki Ammal

VSK TN
    
 
     
சாகித்திய கர்த்தாக்களைப் போற்றுவோம்!
தமிழின் முதல் பெண் புதின ஆசிரியர் வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்களின் பிறந்த நாள் இன்று.
வை. மு. கோதைநாயகி அவர்கள்.”Queen of Fictions”
(டிசம்பர் 1, 1901 – பிப்ரவரி 20, 1960)
வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி.
35 ஆண்டுகளில் 115 புதினங்கள்!
தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முதல் புதினத்தை எழுதியவர், வை.மு.கோதைநாயகி. அறியாத வயதில், பால்ய விவாகம் என்னும் குழந்தைத் திருமணக் கொடுமைக்கு ஆளானவர்.
‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று தடை விதித்த காலம் என்பதால், பள்ளிக்கூடம் போகவில்லை. பெண் குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த சமூகக் கொடுமைகளைத் தானும் அனுபவித்தலாலோ என்னவோ, பல கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் வல்லமை கொண்டிருந்தார்.
சுதந்திரமாக கருத்துகளை வெளியிட மேடைகளையும், செய்தி ஏடுகளையும் களமாகப் பயன்படுத்திக்கொண்டவர். சமூக அக்கறையும் தேசப்பற்றும் கொண்டிருந்தார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றைத் தானே நடத்தியவர். 35 ஆண்டுகளில் 115 புதினங்களை எழுதியவர், கவிஞர், பாடகி எனப் பன்முகத் திறமைகொண்ட சமூகப் புரட்சி வீராங்கனை, வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீர்வளூர் என்னும் கிராமத்தில் , 1901-ஆம் ஆண்டு, டிசம்பர் 1-இல் பிறந்தார். எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், தன் சிறுவயதுத் தோழிகளுக்குக் கற்பனையாகவே பல கதைகளைச் சொல்லி வந்தார். இவர் கதை சொல்லும் அழகில், குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் மயங்கினார்கள். கதை கேட்கும் இரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகினார்கள். படித்தவர்களுக்கே கடினமான தமிழ் உரைநடை, இவர் பேச்சில் கற்கண்டானது.
இவர் சொல்லச் சொல்ல தன் தோழி பட்டம்மாள் எழுதித் தந்த புதினந்தான், ‘இந்திர மோகனா’. இவரது மேடைப்பேச்சும் நாடகப் பிரசங்கங்களும் பலரை எரிச்சலூட்டியதால், எதிர்ப்பு விமர்சனங்கள் எழுந்தன. அவற்றுக்கெல்லாம் அஞ்சாத கோதை, தன் பணிகளைத் தீவிரப்படுத்தினார்.
அப்போது, நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்த ‘ஜகன் மோகினி’ என்ற பத்திரிகையை வாங்கி, தன் கணவரின் உதவியோடு நடத்தி, அதைத் தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகையாக்கினார். இவரது முதல் புதினமான ‘வைதேகி’ என்னும் நூலைப் துப்பறியும் தொடராக எழுதிப் புகழ்பெற்றார். தமிழகம் எங்கும் பத்திரிகை படிப்போரின் நெஞ்சங்களில் நின்றார். கதை மூலமும் மேடைப் பேச்சின் மூலமும் இவர் விதைத்த கருத்துகள், இருண்ட பெண் மனங்களில் வெளிச்சம் பாய்ச்சியது.
மேடைப் பேச்சு வேறாகவும் வாழ்க்கையில் வேறாகவும் வாழ்ந்தவரில்லை கோதை. இவர் எழுத்துக்கு ஒரு நூற்றாண்டே பெருமைப்பட்டது. இராஜாஜியின் தலைமையில் நடந்த கூட்டம் ஒன்றில் கோதை பேசியதைக் கேட்ட இராஜாஜி, தான் பேசும் கூட்டங்களிலெல்லாம் கோதையைப் பேசச் சொன்னார்.
இவர், சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள், பின்னர் ‘ இசை மார்க்கம் ‘என்ற புத்தகமாக வெளி வந்தது.
முப்பதுகளில் வை.மு.கோ வீட்டில் வசித்த பி.ராமபத்ரன் என்பவர் இப்புத்தகத்தைப் பதிப்பித்துள்ளார். அம்பா மனோஹரி,கங்கணாலங்காரி, அம்சப்ரமாரி, தவளி ஹம்சி போன்ற அபூர்வ ராகங்களிலுள்ள இந்த கிருதிகள் ரஞ்சனி-காயத்ரி, கு.பாலமுரளிகிருஷ்ணா முதலியோரால் இப்போது மேடைகளில் பாடப்பட்டு வருகின்றன.
சுப்பிரமணிய பாரதியார், வை.மு.கோ.விற்காகவே தம் ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்ற பாட்டைப் புனைந்ததாகவும், பின்னர் டி.கே. பட்டம்மாள் இந்தப் பாட்டினால் பிரபலமானார் என்பது இன்னோர் செய்தி.
(சாருகேசி – ஹிந்து பத்திரிகையில் 13-2-2009)
1948-இல் சென்னை, திருவல்லிக்கேணியில் இவர் நிறுவிய மகாத்மாஜி சேவா சங்கத்தின் மூலம், பெண் குழந்தைகளுக்கு உதவும் பல கலைகள் கற்றுத் தரப்பட்டன. ‘இராஜ்மோகன்,’ ‘அனாதைப் பெண்’ ,’தயாநிதி ‘ ஆகிய இவரது நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. பத்மினி நடித்த ‘சித்தி’ படம் ஆறுவிருதுகளைப் பெற்றது. அதில் சிறந்த கதையாசிரியர் விருதை, கோதை பெற்றார்.
பெண் விடுதலை, தேசபக்தி, மதுவிலக்கு, விதவை திருமணம், மத ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்திப் பேசின இவரது நாவல்கள்.
சுதந்திரத்துக்காக பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றுள்ளார். 1932-இல் வேலூர் சிறையில் இருந்தபோது, சிறைக்கைதிகளை வன்முறையிலிருந்து திசை திருப்பி, காந்தியப்பாதைக்குக் கொண்டுவர முயற்சிசெய்து, அதிலும் வெற்றிகண்டார். சிறையில் இருந்த நாட்களில் எழுதியதுதான், ‘சோதனையின் கொடுமை’ என்ற புதினம்.
எழுத்திலும் இசையிலும் புகழ்பெற்ற கோதை நாயகி, இளம் வயதில் இறந்த தன் மகனின் இழப்பினால் மனம் உடைந்ததனால்… 20.02.1960-ல் இறந்தார். பத்திரிகை உலகமும் திரையுலகமும் என்றென்றும் நினைவில்கொள்ளவேண்டிய கோதையை வரலாறு பேசிக்கொண்டிருக்கும்.
‘ஜகன்மோகினி’ பத்திரிகை தமிழ்நாட்டின் கலாசார அரங்கில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான அரிய சேவை செய்துள்ளது. எழுத்தறிவு பெறாது `வீடே உலகம்’, `சமையலே கதி’ என முடங்கிக்கிடந்த பெண்மணிகளிடையே எழுத்து வாசனை ஊட்டி வெளியுலக அறிவைக் கொடுத்தது. `ஜகன்மோகினி’யில் வெளியான கதை, கட்டுரைகள் அவர்களுக்கு இலக்கிய அறிமுகத்தையும் உலக அறிவையும் ஊட்டியது. ஆணாதிக்கச் சமூகத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று பல பெண் எழுத்தாளர்களை உருவாக்கியுள்ள வை.மு.கோ அம்மையாரின் கொடை வரலாற்றில் இடம் பெறத்தக்கதாகும்.’
வை.மு. கோதைநாயகி படைப்புகள்
வைதேகி (1925 – 4) — பத்மசுந்தரன் (1926 – 3) — சண்பகவிஜயம் (1927 – 2) — ராதாமணி (1927 – 4) — கௌரிமுகுந்தன் (1928 – 2) — நவநீதகிருஷ்ணன் (1928 – 2) — கோபாலரத்னம் (1929) — சியாமளநாதன் (1930 -2) சுகந்த புஷ்பம் (1930) – ருக்மணிகாந்தன் (1930) — வீர வசந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம் (1930) — நளினசேகரன் அல்லது செருக்காலழிந்த சீமாட்டி (1930) — உத்தமசீலன் (1932 – 3 ) கதம்பமாலை (1932 – 2) — பரிமள கேசவன் (1932 – 2) — மூன்று வைரங்கள் (1932 -2 ) — காதலின் கனி (1933 – 2) — சோதனையின் கொடுமை (1933 – 2) — படாடோபத்தின் பரிபவம் (1933 -2 ) — சாருலோசனா (1933 – 3) — தியாகக்கொடி (1934 – 2) — புத்தியே புதையல் (1934 – 2) — ஜயசஞ்சீவி (1934 – 4) — அமிர்த தாரா (1935 – 4) — ஆனந்தசாகர் (1935 -3) — பட்டமோ பட்டம்(1935 – 2) — பிச்சைக்காரக் குடும்பம் (1935 – 2) — பொங்கும் காதல் அல்லது மங்களபாரதி (1935 – 2) — அநாதைப் பெண் (1936 – 4) — இன்பஜோதி (1936 – 2) — பிரேம பிரபா (1936 – 2) — ராஜமோஹன் (1936 – 2) அன்பின் சிகரம் (1937 – 2) — சந்திர மண்டலம் (1937 – 2) — மாயப் பிரபஞ்சம் (1937 – 2) — உளுத்த இதயம் (1938) — மகிழ்ச்சி உதயம் (1938 – 4) — மாலதி (1938 – 3) — வத்ஸகுமார் (1938 ) — வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில் (1938 ) ஜீவியச்சுழல் (1938 -2 ) கலா நிலையம் (1941 – 4) — க்ருபா மந்திர் (1934 -4) — மதுர கீதம் (1943 – 4) — வாத்சல்யம் அல்லது வாக்குத் தத்தம் (1943 – 3) — அமுத மொழி (1944) — பிரார்த்தனை (1945 ) — அபராதி (1946 – 2) — தெய்வீக ஒளி (1947 -2) – புதுமைக் கோலம் (1947) — தபால் வினோதம் (1945 – 2) — கானகலா (1950) — தூய உள்ளம் (1950) — நியாய மழை (1950) – ப்ரபஞ்ச லீலை (1950) ப்ரேமாஸ்ரமம் (1950) — மனசாட்சி (1950) — ஜீவநாடி (1950) — சௌபாக்கியவதி (1950) — நம்பிக்கைப் பாலம் (1951 -2) — பாதாஞ்சலி (1951) — ரோஜாமலர் (1951) — தைரியலக்ஷ்மி (1952) — சுதந்திரப் பறவை (1953) — நிர்மல நீரோடை(1953) — கிழக்கு வெளுத்தது (1958)
– முதற் பதிப்பு வெளியான வருஷமும், மொத்தப் பதிப்புகளும் அடைக்குறிக்குள்.

Next Post

Universal Poet – Mahakavi Subramania Bharathiyar

Wed Dec 11 , 2024
VSK TN      Tweet    மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு நிகரற்ற கவிஞர். எளிமையான நடையில் தரமான கருத்துகளை கொண்ட அவருடைய படைப்புகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. சக்திவாய்ந்த அவரது எழுத்துக்கள் பாகுபாடு இன்றி – இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரையும் கவர்ந்தன. இந்திய மக்களுக்கு ஒருவித சக்தி, உற்சாகம் மற்றும் தேசபக்தி உணர்வை பெருக்கியது. சுப்பிரமணிய பாரதியார் ஒரு உலகளாவிய கவிஞராகவும் எழுத்தாளராகவும் […]