VSK TN
மறக்கப்பட்ட மாமனிதர்கள்!
Unsung Heros.
சேலம் விடுதலைப் போராட்ட வீரர் கவிஞர் அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்த தினம் இன்று.
[ 27.07.1874 – 07.12.1964 ]
விடுதலைப் போரில் வட தமிழ்நாடு: யார் இந்த இராஜரிஷி அர்த்தநாரீச வர்மா?
தமிழ் மொழிக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைத்தவர் கவிஞர் அர்த்தநாரீச வர்மா. வாழ்க்கை முழுவதும் ஒரு போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக சமூகத் தொண்டினையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த மாபெரும் தியாகி அவராகும்.
சேலம் மாநகர் சுகவனபுரியின் சுகவன கண்டர் – இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக 27.7.1874 இல் பிறந்தார் அர்த்தநாரீச வர்மா. தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தி எனும் ஊரில் இந்தர பீடம் சிவயோகிகர பத்திர சுவாமிகளிடம் சிவதீட்சை பெற்றார். அங்கு தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளைக் கற்றார். கர்நாடக இசை, தமிழ்ச் சித்தமருத்துவம், சோதிடம் ஆகியவற்றையும் கற்றுத்தேர்ந்தார்.
இவரது இல்வாழ்க்கை குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. ஒருவருக்குப் பின் ஒருவராக இரு மனைவிகள் அவருக்கு இருந்திருக்கலாம் என்றும் இருவருமே மறைந்துவிட்டதாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. பிற்காலத்தில் அவர் துறவறம் பூண்டு வாழ்ந்தார்.
தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தார் அர்த்தநாரீச வர்மா. இந்திய விடுதலை, தமிழ்நாட்டின் எல்லைக்காப்பு, மதுஒழிப்பு, கல்வி, சமூக முன்னேற்றம் உள்ளிட்ட கருத்துகளில் அவர் ஏராளமாக கவிதைகளை இயற்றியுள்ளார். அக்காலத்தில் மகாகவி பாரதியாருக்கு இணையான நிலையில் அவரது கவிதைகள் போற்றப்பட்டன. பல பத்திரிகைகளைத் தொடர்ந்து நடத்தியுள்ளார். பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்திய சுதந்தரப் போராட்டம் 1906 ஆம் ஆண்டில் ‘அகிம்சை போர்’ என்றும் ‘ஆயுதப்போர்’ என்றும் இரண்டு வழிகளில் முன்வைக்கப்பட்டன. இதனை திலகர் வழி என்றும் காந்தி வழி என்றும் கூறினர். அர்த்தநாரீச வர்மா இவை இரண்டிலும் பங்கேற்றார். திலகரைப் பின்பற்றிய தீவிரவாதிகள் மறைமுக போராளி அமைப்புகளைத் தொடங்கினர். நாட்டிலுள்ள வீர இளைஞர்கள் துப்பாக்கி சுட கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், 1915 – 1916 ஆம் ஆண்டுகளுக்குள் (ஆனந்த வருடம்) ஆங்கிலேய ஆட்சியாளர்களை ஆயுதப் போரில் வீழ்த்த வேண்டும் என்றும் முடிவு செய்தனர். தமிழ்நாட்டில் வ.உ. சிதம்பரனார் இதற்குத் தலைமையேற்றார்.
தீவிரவாதிகள் அமைப்புக்காக அர்த்தநாரீச வர்மா சேலத்தில் கழறிற்றறிவார் சபை எனும் அமைப்பை 1907 ஆம் ஆண்டில் உருவாக்கினார். (கழறிற்றறிவார் என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமான் நாயனார் எனும் மன்னனைக் குறிக்கும் பெயர் ஆகும்) இவருடன் ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரவாதிகளான கோவை பூபதி பழனியப்பா மற்றும் கோ.நா. குப்புசாமி வர்மா ஆகியோரும் இணைந்திருந்தனர். பாண்டியர் வாரிசுகளான சிவகிரி ஜமீன் ஆதரவையும் பெற்றிருந்தார். இந்த சபையின் கூட்டத்துக்கு தனது பள்ளித்தோழரான ராஜாஜியை அழைத்து வந்து அவரையும் தீவிரவாதிகள் கூட்டத்தில் சேர்த்தார் அர்த்தநாரீச வர்மா. இதனால் ராஜாஜி தனது சென்னை வீட்டிற்கு திலகர் பவனம் என்று பெயர் வைத்தார்.
தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார் 1920 ஆம் ஆண்டு வேலூரில் நடந்த அரசியல் மாநாட்டில் பேசிய போது “பாரததேவி மீது புலவர்கள் பாடியுள்ள பாக்களை இன்னிசைக் கருவிகளுடன் பாராயணம் செய்யலாம். சுப்பிரமணிய பாரதியின் பாடல்களும், சேலம் அர்த்தநாரீச வர்மா அவர்களின் பாடல்களும் மக்களுக்குத் தேசபக்தி ஊட்டுவது போலக் கற்றைக் கற்றையாக அரசியல் நூல்களை ஓதியவரின் சொற் பெருக்குகளும் அப்பக்தியை ஊட்டா.” என்று குறிப்பிட்டார்.
மகாகவி பாரதியார் இறந்தபோது, ஆங்கிலேயருக்கு அஞ்சி பாரதியார் இறுதி ஊர்வலத்துக்குக் கூட யாரும் வராத நிலைதான் இருந்தது. அப்போது பாரதியாருக்காக இரங்கல் பாடிய ஒரே கவிஞர் அர்த்தநாரீச வர்மா மட்டுமே. அவரது இரங்கல் கவிதை சுதேசமித்திரனில் வெளியானது.
இந்திய விடுதலைக்காக வீரபாரதி எனும் பத்திரிகையை நடத்தினார். ஆனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பத்திரிகை நடத்துவதைத் தடுக்கும் விதமாகக் கொண்டுவரப்பட்ட அச்சக சட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். வாரத்தில் மூன்று நாள் வீதம் ஓராண்டுகாலம் வெளிவந்த இப்பத்திரிகை, ஆங்கில அரசாங்கத்தின் அடக்குமுறையால் நிறுத்தப்பட்டது.
காந்தியின் மீதும் பற்று கொண்டிருந்த அர்த்தநாரீச வர்மா அவரைப் போற்றியும் பாடல்கள் பாடியுள்ளார். மகாத்மா காந்தி 17.2.1934 இல் திருவண்ணாமலைக்கு வந்தபோது, அவருக்குத் திருவண்ணாமலை மக்கள் சார்பாக பாராட்டுப் பத்திரம் எழுதி அச்சிட்டு வாசித்தவர் அர்த்தநாரீச வர்மா அவர்களே.
அர்த்தநாரீச வர்மா இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடிய அதே நேரத்தில் தமிழ் மீதும் தமிழ்நாட்டின் மீதும் மிகுந்த பற்றுடையவராக இருந்தார். 1951 ஆம் ஆண்டில் ஆந்திர பிரிவினையின் போது நடந்த சதிகளைக் குறிப்பிட்டு தனது பத்திரிகையில் எழுதியுள்ளார். குறிப்பாக வடவேங்கடம் (திருப்பதி), சித்தூர் உள்ளிட்ட தமிழ்ப்பகுதிகளைத் தமிழ்நாட்டிடம் இருந்து பிரிக்கும் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்று கோரினார். இந்த விடயத்தில் நேரு தமிழ்நாட்டை இரண்டாம்பட்சமாக நடத்துகிறார் என்றார்.
மது ஒழிப்புதான் அர்த்தநாரீச வர்மாவின் மிக முக்கிய முழக்கமாக இருந்தது. நாடு முழுவதும் சென்று மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தார். மதுவிலக்கு சிந்து எனும் பாடல் நூலினை வெளியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சேலம் மேச்சேரியில் முன்னூறு கிராமத்தினரை கூட்டி மாபெரும் மதுஒழிப்பு மாநாட்டை நடத்தினர். இம்மாநாட்டின் மூலமாக அர்த்தநாரீச வர்மாவின் கோரிக்கையை ஏற்று, அவரது நண்பரான ராஜாஜி சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு கொள்கையைச் செயல்படுத்தினார். இதுதான் இந்திய நாட்டின் முதல் மதுவிலக்குச் சட்டம் ஆகும்.
எப்பாடுபட்டாவது கல்வி கற்க வேண்டும். அனைவருக்கும் இலவசமாக கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை தனது கவிதைகள் வாயிலாகவும் எழுத்துகள் வாயிலாகவும் வலியுறுத்தினார். பெற்றோர் படிக்காமல் இருந்தாலும் பிள்ளைகளை படிக்க வைத்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்தினார். தானங்களில் கல்விதான் முதல் தானம் என்றார். சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் பள்ளிக்கூடங்களை அமைக்க கோரினார். பகலில் நடத்த முடியாமல் போனாலும் – இரவுப்பள்ளிகளையாவது நடத்தக் கோரினார். பெண்கல்வி மிக முதன்மையான தேவை என்று வலியுறுத்தினார்.
இந்திய நாட்டின் விடுதலை, தமிழ்நாட்டின் உரிமை, தமிழ் மொழியின் சிறப்பு, மதுஒழிப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காக பாடுபட்ட அர்த்தநாரீச வர்மா வன்னியர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்தார். நீதிக்கட்சி ஆட்சியில் 4.12.1934 இல் சில பகுதிகளில் உள்ள வன்னியர்களை குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். இந்த சட்டம் அறிவிக்கப்பட்டதும் அதனை தகர்த்தெறியும் நாள் வரை துக்கதினமாக அறிவித்து போராடினார். இதுபோன்ற போராட்டங்களின் விளைவாக 1935 ஆம் ஆண்டில் அச்சட்டம் திரும்பப்பெறப்பட்டது.
அர்த்தநாரீச வர்மா அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளராகவும் பதிப்பாளராகவும் இருந்தார். 1923 ஆம் ஆண்டில் தொடங்கி பல்வேறு காலக்கட்டங்களில் சத்திரியன், சத்திரிய சிகாமணி, வீரபாரதி, தமிழ் மன்னன் ஆகிய பத்திரிகைகளை வெகுகாலம் நடத்தியுள்ளார். மதுவிலக்கு சிந்து உள்ளிட்ட ஏராளமான நூல்களையும் எழுதி வெளியிட்டார்.
இளமைக்காலத்தில் வசதியாக வாழ்ந்த வர்மா, நாட்டுக்கு உழைத்து ஏழ்மை நிலைக்குச் சென்றார். இறுதிக் காலத்தில் திருவண்ணாமலையில் வாழ்ந்தார். தொண்ணூறு வயதுவரை வாழ்ந்த அவர் 7.12.1964 இல் திருவண்ணாமலையில் உயிர்நீத்தார். அவரது சமாதி திருவண்ணாமலை ஈசானிய குளத்துக்கு அருகில் உள்ளது. அர்த்தநாரீச வர்மா மறைவுக்கு மூதறிஞர் ராஜாஜி கல்கி இதழில் புகழஞ்சலிக் கட்டுரை எழுதினார்.
ஆ.சி. பழனிமுத்து