நேர்மையின் உருவம் கக்கன்..!

VSK TN
    
 
     

நினைவு கூறுவோம் ஜூன் 18ம் தேதி முன்னாள் அமைச்சர் நேர்மையாளர் திரு.கக்கன் பிறந்த தினத்தை
தமிழகத்தைச் சேர்ந்த சமூக நலனுக்காக பெரும் தொண்டாற்றியவர்களின் சிலரின் பெயர் பெரிதாக வெளியே தெரியாமல் போயிருக்கிறது. அத்தகைய பெருந்தகைகள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், மக்கள் சேவை ஒன்றே மனதில் கொண்டு வாழ்ந்து மறைந்து போனார்கள்.
இன்றைய தலைமுறைக்கு சினிமா நடிகர்கள், நடிகையர்களைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் அளவிற்கு, மக்கள் தொண்டாற்றிய மேன்மையான, நேர்மையான கக்கன் அவர்களைத் தெரியுமா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். அதற்குக் காரணம், நேர்மையானவர்களை நாம் பெரிதாக கொண்டாடவில்லை என்பதுதான்.

1908ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டியில் பிறந்த கக்கன், முதலில் தொடக்க கல்வி பயின்றார். தனது 12ம் வயதில் மேலே படிக்க முடியாமல், பண்ணை வேலை செய்ய ஆரம்பித்தார்.
கக்கனின் தந்தை ஒரு கிராம கோயில் பூசாரி. அதனால், பூசாரி கக்கன் என்றே அழைக்கப்பட்டார். ஏழ்மை காரணமாக பாதியில் படிப்பை விட்ட கக்கன் மீண்டும் கஷ்டப்பட்டு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பிறகு, காங்கிரஸ் கட்சியின் சுதந்திர போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் கக்கன்.
‘வெள்ளையனே வெளியேறு’ போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். 1947ம் ஆண்டு சுதந்திரம் வழங்குவதற்கு முன் அமைக்கப்பட்ட அரசியல் சாஸன சட்டசபையில் தமிழகத்தின் சார்பாக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1950 வரை பணியாற்றினார்.
1952 முதல் 1957ம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
1956ல் காமராஜர் அப்போதைய சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியமர்த்தப்பட்டார் கக்கன். 1957 முதல் 1967ம் ஆண்டு வரை திரு.கக்கன் பொதுப்பணித்துறை, ஹரிஜன நலத்துறை, விவசாயத்துறை, உள்துறை என பல துறைகளின் அமைச்சராக, பல நல்ல பணிகளை மேற்கொண்டார்.
கக்கனின் சாதனைகள்.

1939ம் ஆண்டு பட்டியல் சமூக மக்கள் ஆலய பிரவேசம் செய்வது தொடர்பான ஆலய பிரவேச அனுமதி சட்டத்தை ராஜாஜி தலைமையிலான மாகாண அரசு இயற்றியது.
மதுரை வைத்தியநாத அய்யரின் தலைமையின் கீழ் கக்கன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலய பிரவேசத்தை மேற்கொண்டு அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். குறிப்பாக, காந்திஜி இவரின் இந்தச் செயலைப் பாராட்டினார்.

1957ல் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது மேட்டூர் அணை, வைகை அணை கட்டுவதற்கு காமராஜருக்கு பெரும் உதவியாக இருந்தார். இதனால் லட்சக்கணக்கான ஏழை விவசாயிகள் பலனடைந்தனர். மக்களுக்காக வீட்டு வசதி வாரியம் அமைத்து பல நூறு மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுத்தார்.
1963 முதல் 1967 வரை உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பொதுவாக போலீஸ் இலாகா, உள்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டில் இருப்பதால் முதலமைச்சர்கள் உள்துறையினை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார்கள். ஆனால் காமராஜரோ, கக்கன் மேல் வைத்திருந்த நம்பிக்கை காரணமாக, உள்துறை அமைச்சராக கக்கனை நியமித்தார். போலீஸ் மந்திரி என அன்போடு அழைக்கப்பட்ட கக்கன் போலீஸ் இலாகாவில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தார். காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அவர்களின் வேலை சுமையைக் குறைத்தது, லஞ்ச ஒழிப்புத் துறையை தொடங்கியது என பல பணிகளைச் செய்தார்.

நேர்மையின் மொத்த உருவம் கக்கன்
1. அமைச்சராக பல வருடங்கள் பதவியில் இருந்தும் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே படிக்க வைத்தார்.
2. அரசாங்க பணத்தில் வாழாமல், தன் மனைவி ஆசிரியையாக வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் குடும்பம் நடத்தினார்.
3.தன் தம்பிக்கு முறையாக, தாழ்த்தப்பட்டோர் நல இயக்குநரால் வழங்கப்பட்ட மனை ஒதுக்கீட்டு பத்திரத்தை ரத்து செய்தார்.
4.பதவி காலத்திலும் சரி, பிறகும் சரி, யாரிடமிருந்தும் எந்தவித சலுகைகளையோ, பரிசு பொருட்களை பெறாமல் வாழ்ந்த நேர்மையாளர்.
5.இவரது தம்பி தகுதியின் அடிப்படையிலேயே போலீஸ் சேர தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ‘தான் அமைச்சர் பதவியில் இருப்பதாலேயே இந்த போலீஸ் வேலையை அவர் பெற்றார் என்று சமுதாயம் சொல்லும்’ என்று சொல்லி அவரை போலீஸ் பணியில் சேரவிடாமல் செய்தார்.
6. விடுதலை போராட்ட வீரர்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிலத்தை, வினோபா பாவேவின் பூதான் இயக்கத்திற்கு நன்கொடையாக கொடுத்தார்.
இறுதிக்காலம்
1978ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ஒரு நாள் காலை காரிலிருந்து இறங்கும்போது ஒரு வயதான பெண்மணி தன்னைக் காண காத்திருப்பதைப் பார்த்து, அவரை நோக்கி சென்று ‘’வணக்கம்’’ கூறி, ‘என்ன வேண்டும் சொல்லுங்க’ என கேட்டார். அதற்கு அந்த வயதான பெண்ணியாரை கக்கனின் மனைவி சொர்ணம் பார்வதி கக்கன் ‘’நாங்கள் குடியிருந்த அரசுக்கு சொந்தமான வீட்டின் ரூ.170 மாத வாடகையை பல மாதங்கள் வறுமை காரணமாக செலுத்த முடியவில்லை’’ என்பதால், வீட்டை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் வந்திருப்பதாகக் கூறினார்.

எம்.ஜி.ஆர். உடனடியாக செயல்பட்டு, பல மாதங்கள் நிலுவையிலிருந்த வாடகை பணத்தின் தன் சொந்த பணத்தில் செலுத்தியது மட்டுமின்றி கக்கன் தனது இறுதிக்காலம் வரை குடியிருக்க இலவசமாக அனுமதியும் பெற்று தந்தார். மேலும், கக்கன் அவர்களுக்கு மாதம் ரூ.500 வழங்குமாறு அரசாணை பிறப்பித்தார்.
1967ல் தேர்தலில் தோற்ற பிறகு சிறிது சிறிதாக அரசியல் களத்திலிருந்து விலகி வாழ ஆரம்பித்தார் கக்கன். முடக்குவாத நோயில் பாதிக்கப்பட்ட அவர் சிறப்பு அறையில் தங்கி சிகிச்சை பெற தகுதியிருந்தும் அரசு மருத்துவமனையில் ஒரு சாதாரண குடிமகன் போல் சாதாரண வார்டில் சேர்ந்து சிகிச்சை பெற்றார் என்பது தற்போதைய உலகில் ஆச்சரியமான செய்தி.

திரு.சௌமிய நாரயணன்

Next Post

#IYD2022 – 20 minutes of Yoga a day is enough to realise its wonders

Tue Jun 21 , 2022
VSK TN      Tweet     ‘Yoga makes me feel more energetic, sleep better and also enhances the perception of smell, taste and intuition. I meditate daily for 20 minutes and it works wonders for me,’ says Dr. Abhay Bhagwat, a neurologist. New Delhi. A few months back a report on psychiatric researcher Dr. […]