VSK TN
இறைநம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹிந்துக்களை ஏமாற்றி பிரித்து ஆட்சியை தக்கவைக்கும் கேரளா அரசாங்கத்தின் நரித்தனத்தை பொதுமக்கள் அடையாளம் காண வேண்டும். – சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் தேசீய பொதுச்செயலாளர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் ஹிந்து சமய நம்பிக்கை மற்றும் ஆச்சார விதிமுறைகளுக்கு எதிராக சர்வாதிகாரத் தன்மையுடன் கேரளா கம்யூனிஸ்ட் அரசாங்கம் நடந்து வருகின்றது. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் மீதும் பெண்கள் மீதும் வழக்கினை போட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அனைத்தும் எங்களது கால்களுக்கு கீழே என்ற அகங்கார மனப்பான்மையுடன், நீண்ட நெடிய காலங்களாக பக்தர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் பின்பற்றி வருகின்ற சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வேண்டுமென்றே இந்த அரசாங்கம் தகர்த்து விட முயற்சிப்பதை சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வன்மையாக கண்டிக்கின்றது.
நடுநிலையாளர்களாக திகழ்ந்த எண்ணற்ற பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் இரட்டை வேடம் புரிந்து விட்டது. அதனால் தான் பாரதப் பிரதமர் மோதி அவர்கள் பங்கு கொண்டிருந்த கொல்லம் பைபாஸ் சாலையை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் வரவேற்புரை ஆற்றிய முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக சரணகோஷம் முழக்கினார்கள். கொஞ்சமும் கூச்சமின்றி உண்மைக்கு புறம்பான பொய்மூட்டைகளை, சத்தியப் பிரமாணமாக இந்த அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது வேதனை அளிக்கின்றது. மாண்புமிகு நீதிமன்றத்தினை ஏமாற்றுவதாக அரசின் செயல் அமைந்துள்ளது.
சபரிமலையில் இளம் பெண்கள் செல்வது தொடர்பாக அரசிற்கு எந்த மறைமுக நோக்கமும் இல்லை என நாழிகைக்கு நாற்பது முறை கூறுகின்ற அரசு, தமிழகத்திற்கு காவல் துறையை அனுப்பி வைத்து மனிதி அமைப்பை சேர்ந்த இளம் பெண்களை முழு காவல் துறை பாதுகாப்புடன் எதற்க்காக சந்நிதானத்திற்கு அழைத்து செல்ல முற்பட்டார்கள் ? மவோயிஸ்டுகளும், தீவிரவாத கும்பலில் உறுப்பினர்களுமான பிந்துவிற்கும், கனகதுர்காவிற்கும், உளவுத் துறை எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல் சந்நிதானத்திற்கு சென்றுவர எதற்காக வாய்ப்பு அமைத்து கொடுத்தார்கள் ? பல்வேறு கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்ட இந்த இளம்பெண்களை வி.ஐ.பி க்கள் செல்லும் படிகள் வழியாக சன்னிதானம் திருநடைக்கு அழைத்து சென்ற குற்றத்திற்கு, உள்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் பதில் கூறியாக வேண்டும். மாமியாருடன் சண்டையிட்டுக்கொண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கனகதுர்காவிற்கு சுமார் 60 காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்து கொண்டிருக்கின்றார்கள். யார் இந்த கனகதுர்கா ? இவருக்கும் அரசிற்கும் உள்ள உறவு என்ன போன்ற கேள்விகளுக்கும் பதில் தெரியவேண்டுமென சமாஜத்தின் பொதுச்செயலாளர் ஈரோடு ராஜன் கேட்டுக் கொண்டார்.
தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய, வீட்டிற்கடங்காத விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில நம்பிக்கையற்ற இளம் பெண்களை முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாகவும், பெண் விடுதலைக்காக உழைப்பவர்களாகவும் சித்தரித்து ஆனந்தக் கூத்தாடுகின்ற அரசு, இங்குள்ள இறை நம்பிக்கையுடைய பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை எட்டி உதைக்கின்ற காட்சியை காண்கின்றோம். இதனால் சமுதாயத்தில் பிரிவினை ஏற்பட்டு கலக்கம் மூண்டு ஆதாயம் கிடைக்கலாம் என்ற குறுகிய மனப்பான்மையுடன் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் செயல் புரிந்து வருகின்றார்கள். இந்த மனப்பான்மையே இறையாண்மைக்கு எதிரானது, வன்மையான கண்டனத்திற்குரியது.
சமுதாய புத்தெழுச்சியை கருத்தில்க் கொண்டு இவ்வாறு அரசாங்கம் செயல்படுவதாக அமைச்சர்கள் அறிக்கை விடுவது விந்தையிலும் விந்தையாக உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ற திரைக்கு பின்னால் வசதியாக ஒளிந்துகொண்டு, தீய எண்ணத்துடன் அணைத்து ஹிந்து நம்பிக்கைகளையும் , பல நூறு ஆண்டுகளாக பின்பற்றி வருகின்ற ஆச்சார சம்பிரதாயங்களையும் மாற்றி அமைக்க, மறைமுக திட்டத்துடன் அரசாங்கம் செயல்புரிந்ததை அகத்தியர் மலைக்குள்ள புனிதப் பயணத்தை சீர் குலைத்ததிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நூற்றாண்டுகளாக மலைவாழ் மக்கள் போற்றி பின்பற்றி வந்த மரபுகளை அதிகாரத்தின் அகங்காரத்துடன் அரசாங்கம் தூக்கியெறிந்து. அங்கு பல ஆண்டுகளாக பூஜை நடத்தி வந்த 95 வயதுடைய பகவான் காணி என்ற முக்கிய பூசாரியையும் அவருடன் சென்ற குழுவையும் வழிபட அனுமதிக்கவில்லை. அகத்தியரை பிரதிஷ்டை செய்துள்ள பீடத்தை சுற்றி வெளி அமைத்துக் கொண்டு, ஆச்சாரத்தினை தடை செய்து அங்கும் இளம் பெண்களை அனுமதித்தது அய்யப்ப சேவா சமாஜம் உரத்த குரலில் கண்டிக்கின்றது.
இந்துசமய இறை நம்பிக்கை கொண்ட அனைவருடைய மனங்களிலும் பெரும் அதிருப்தியும் கவலையும் நிராசையும் ஏற்படுத்திய இந்த அரசு ராஜினாமா செய்து வெளியேற வேண்டுமென்றும் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்துகின்றது.
கேரளாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஹிந்துசமய ஆச்சார நம்பிக்கைகளுக்கு எதிரான கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை படம் பிடித்து காட்டுவதற்காக நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் கலந்துரையாடல், கருத்தரங்கம், கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்த சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் திட்டமிட்டுள்ளது. அதன் முன்னோடியாக வருகின்ற பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கோயமுத்தூரில் தென் பாரத மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கெடுக்கின்ற கருத்தரங்கம் நடைபெற உள்ளது. துறவிகள், மடாதிபதிகள்,ஆன்மீக இயக்கப் பொறுப்பாளர்கள்,ஜாதிச்சங்க தலைவர்கள், மலைவாழ் மக்களுக்கான பிரதிநிதிகள்,ஹிந்து இயக்க தலைவர்கள்,அய்யப்ப இயக்கங்கள், இறை நம்பிக்கை கொண்ட சினிமா கலைஞர்கள்,எழுத்தாளர்கள் என பல்வேறுதரப்பட்ட அமைப்பிலிருந்தும், கலாச்சார ஸ்தாபனங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கு பெறுவார்கள். இன்றைய கேரளாவில் உள்ள ஆட்சியாளர்களின் ஹிந்து விரோத போக்கினையும் அதை முறியடிக்கும் பொருட்டு அனைவரும் ஒருங்கிணைய வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் பற்றி பேசி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் அங்கு உருவாக்கப்படும். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் எனினும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பதை மீண்டும் ஒருமுறை நாங்கள் நிரூபிப்போம் என்று சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் தேசீய பொதுச் செயலாளர் ஈரோடு ராஜன் கூறினார்.
தேதி:;17 -01 – 2019 .
ஈரோடு ராஜன்,
தேசீய பொதுச்செயலாளர்,
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம்.