ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் தனிமனித புகழ்பாடுதலை என்றும் விரும்பியதில்லை. சங்கம், தனி ஒருவரை தூக்கிப்பிடித்தல், அமைப்பை பலவீனப்படுத்தும் என்ற திடமான எண்ணத்துடன் செயல்பட்டுவருகிறது. நிற்க, கடந்த சில தினங்களில் சில வாட்சாப் குழுக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஸ்ரீ. பாபு தேவாடிகா என்கிற பழுத்த ஸ்வயம்சேவகரைப் பற்றிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருவதைப் பார்த்தபோது, ஸ்ரீ. தேவாடிகா அவர்களின் உயரிய ஸ்வயம்சேவக தன்மை பற்றி நாம் ஏன் உலகிற்கு கூறக்கூடாது என்று தோன்றியது. அது நம்மில் பலருக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கும் என்பது ஏன் தீவிரமான நம்பிக்கை. அது தவிர, நான் ஒரு தசாப்தத்திற்கு மேல் அவருடன் நெருக்கமாகப் பழகி, இணைந்து உடுப்பி மாவட்டத்தில் சங்கவேலை செய்துள்ளேன் என்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
ஸ்ரீ. பாபு தேவாடிகா, எங்களுக்கு பாபண்ணா. பாபண்ணா உடுப்பியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரம்மாவர் என்ற ஊரைச்சார்ந்தவர். பல, பல தசாப்தங்கள் அவர் தன்னை சங்க வேலைகளில் ஈடுபடுத்திக்கொண்டு தன்னலம் கருதாமல் தொண்டாற்றினார் என்று கூறினால் மிகையாகாது. பல வருடங்கள் சங்கத்தின் உடுப்பி மாவட்ட தலைவர் (ஜில்லா காரியவா) பொறுப்பில் செயல்பட்டார்.
ஒரு சராசரி குடும்பத்திலிருந்து வந்த பாபண்ணா ஒரு கிறிஸ்துவ மிஷனரி பள்ளியில் எழுத்தராக (கிளார்க்) பணிசெய்தார். தைரியம், தன்னம்பிக்கை – இவை பாபண்ணாவின் மறுபெயர் என்று கூறலாம், அந்தக்காலத்திலேயே சாதிமறுப்புத் திருமணம் செய்தவர். அவர் வாழ்க்கை, பொது நலத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளுதல் என்பதற்கான முன்னுதாரணம். குறைந்தது நாற்பது வருடங்கள் உடுப்பி மாவட்டத்தின் பட்டிதொட்டிகள் எல்லாம் சங்க வேலைகளை முன்னெடுக்க அவர் செய்த சேவை நம்மை பிரமிக்கவைக்கும். ஆம் ஒவ்வொரு மாதமும் 20-25 நாட்கள் உடுப்பி மாவட்டத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்து சங்கம் வளர்க்கப் பாடுபட்டார். அந்த சுற்றுப்பயணங்களில் அனைத்து ஜாதி மதம் மற்றும் பொருளாதார நிலைகளைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான, பலதரப்பட்ட மக்களை சந்தித்திருப்பார், பாபண்ணா.
முதிர்ந்த வயது, வயது முதிர்ச்சியால் வரும் பல உபாதைகள் என்று இருந்தாலும், அவருடைய மனதில் எப்பொழுதும் சங்கம் மற்றும் அவர் சார்ந்த சமூகத்திற்கான சங்கவேலைகள் பற்றிய சிந்தனையே வியாபித்திருந்தது.
பாபண்ணா, தன் கடைசி மூச்சு வரை சங்கம் பற்றிய சிந்தனையுடன் மட்டுமே இருந்தார். இந்த வருடமும் குரு பூர்ணிமா தினத்தன்று வழக்கம் போல் தானே சென்று குருதக்ஷிணை அளிப்பேன் என்று, தன் மகளின் உதவியுடன் காலையில் குருதக்ஷிணை செலுத்திய பாபண்ணா, அன்றைய மாலையில் ஈஸ்வரனின் நிழலில் இளைப்பாற தன் பூதவுடல் விட்டுப் பயணித்தார்.
பாபண்ணா உன் பெயர் தான் அர்பணிப்போ?
முழு அர்ப்பணிப்புடன் சமூகசேவை செய்வது என்ற மஹாமேருவின் உச்சியைத் தொட்டவர் பாபண்ணா. அவர் ஒரு ஆதர்ச ஸ்வயம்சேவகர். ஐம்பது வருட பொதுவாழ்வில் ஒருநாளும் யாரைப்பற்றியும், எந்த ஒரு விஷயத்தைப்பற்றியும் அவர் ஒரு குற்றமோ குறையோ கூறி எவரும் பார்த்திருக்கமுடியாது. தியாகம் மற்றும் தவத்தின் மறு உருவமான பாபண்ணா, தன் கடைசி மூச்சு இருக்கும் வரை சங்கத்தின் கோட்பாடுகளின் மீது மாறப்பற்று கொண்டிருந்தார்.
சி ஆர் முகுந்தா இணைப் பொதுச்செயலாளர்
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்
பி.கு.: ஒவ்வொரு வருடமும் குரு பூர்ணிமா தினத்தன்று ஸ்வயம்சேவகர்கள் குருதக்ஷிணை (காணிக்கை) வழங்குவது காலகாலமாக வரும் சங்க மரபு.


One thought on “Another name for dedication is Paapanna”
Comments are closed.